Enable Javscript for better performance
அத்தியாயம் - 9- Dinamani

சுடச்சுட

  
  eagle

   

  கழுகுப் பார்வை உன்னைக் காக்கும்!

  ‘இந்த உலகம் இரவும் பகலும் உழைத்துக்கொண்டிருக்கிறது. எதற்காக தெரியுமா? உங்களையும் மற்றவர்களைப்போல சாதாரணமாக ஆக்குவதற்கு. ஆனால் நீ தனித்துவமானவன், தனித்துவமானவள் என்று நீ உணர்ந்த அடுத்த விநாடி, வரலாற்றில் உனக்காக ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுவிடும். அந்தப் பக்கத்தை வருங்கால சந்ததி திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்து நினைவுகூரப்பட வேண்டுமா? அது உங்கள் கனவில் இருக்கிறது. அதை லட்சியமாக மாற்றும் வல்லமையில் இருக்கிறது’ என்றார் டாக்டர் அப்துல் கலாம்.

  லட்சியம் கொண்டவர்களை யாராலும் அடிமைப்படுத்த முடியாது. அந்த லட்சியத்தை உருவாக்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் முக்கியக் காரணியாக இருப்பார்கள். இப்படிப்பட்ட லட்சிய மாணவர்கள் சமூகத்தில் 10 சதவிகிதம்தான் இருக்கலாம். பெரும்பான்மையான குடும்பங்கள் இன்றைக்கு இருக்கும் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழ்நிலைகளால், ஏற்றத்தாழ்வுகளால், தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட கலாசார சீரழிவுகளால், குடும்ப அமைப்புகள் சீர்குலைந்துவிடுகின்றன. அப்போது குழந்தைகள் தனித்துவிடப்படுகிறார்கள். அவர்கள் அன்புக்கு ஏங்கும்போது அதை பெற்றோர் நிரப்பவில்லை என்றால் மற்றவர்கள் தனக்கான ஆதாயத்தோடு நிரப்புவார்கள். அதனால் நன்மையைவிட தீமைதான் அதிகம்.

  நம் குழந்தைகள் இன்றையச் சந்தையில் வியாபாரப் பொருள்களாக மாறும் நிலை ஏற்பட்டால், அதற்கு யார் காரணம்? நாம்தான் காரணம். ‘4 பேருக்காக வாழ்கிறோம்’ என்று சொல்லியே நாம் நமது எல்லைகளை வரையறுத்து சமூகத்திற்குப் பயந்து வாழ்க்கை நடத்தி நம் கனவைத் தொலைத்துவிட்டோம். சமூகம் என்ன சொல்லுமோ என்று பயப்படும் இளைய தலைமுறையை நாம் வளர்த்துவிட்டோம். நமது குழந்தைகளுக்கு விழிப்புணர்வைக் கொடுத்து, நன்மை, தீமை எது என்று கண்டுணரும் திறைமையை வளர்ப்பதற்கு பதில், அச்ச உணர்வைப் புகுத்திவிடுகிறோம். ‘இதைப் பேசாதே... அதைப் பேசாதே’ என்று அடக்குகிறோம். நாம் பேசவில்லை என்றால் வேறு யாரோ நம் குழந்தைகளைத் தவறாக வழிநடத்த வாய்ப்புக் கொடுக்கிறோம். அவர்கள் புரிந்து தெளிந்துகொள்ள முடியாத ஆழ் குழிக்குள் கொண்டு செல்ல ஆன் லைனும் நெட்டும் அவர்கள் கைகளில் இருக்கிறது. செக்ஸ் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கம். அது எல்லாருக்கும் தேவைப்படும் நேரத்தில் கண்டிப்பாகக் கிடைக்கும். பசிக்கும்போது சாப்பிட்டால்தான் செரிக்கும். கிடைக்கும்போதெல்லாம் சாப்பிட்டால் வாந்திதான் வரும் என்பதை புரியும்படி கற்றுக்கொடுக்க வேண்டும்.

  நாம் வளர்ந்தபின் எதை எல்லாம் பயந்து செய்தோமோ அல்லது செய்யத் தயங்கினோமோ அதை இன்றைய தொழில்நுட்ப யுகத்தில், நம் குழந்தைகளின் கைகளில் அலைபேசியில் விளம்பரமாக வந்து நிற்கிறது. ஒன்று பார்த்தால் அதில் உங்களுக்கு விருப்பம் இருக்கிறது என்று நூற்றுக்கும் மேல்பட்ட வீடியோக்கள் நம் பிள்ளைகளைத் துரத்துகிறது. விளம்பரத்தால் நாசமாகிப்போன நுகர்வோர் கலாசாரத்தையும் தாண்டி நாமும் வாழ வேண்டும்; நம் குழந்தைகளையும் வாழவைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு நாம் இன்றைக்கு தள்ளப்பட்டுவிட்டோம்.

  எதைப் பார்த்து பயப்படுகிறோமோ, அதை வைத்து நம்மை அடிமையாக்குவார்கள் என்பதைப் புரியவைக்க வேண்டும். எதை அவமானம் என்று இந்த உலகம் நம்மை நம்பவைக்கிறதோ அதை செய்யும் சினிமா நடிகர், நடிகைகளை இந்த சமூகம் போற்றுகிறது என்பதை உணர வையுங்கள். ஒரு வேளை இப்படிப்பட்ட செயலுக்கு அடிமைப்பட்டாலும், ‘பயப்படாதே நாங்கள் உன்னுடன் இருக்கிறோம்’ என்னும் தன்னம்பிக்கையை கொடுத்து, அத்தகைய தீமையை எதிர்கொள்ளும் வல்லமையை கற்றுக்கொடுங்கள். ஏனென்றால், நம் இளைஞர்களுக்கு எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய நம்பிக்கையைக் கொடுக்கத் தவறிவிட்டது நாம் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்த அரசுகள். படித்தால் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை பொய்யாகும்போது வாழ்க்கையைப் பற்றிய பயம் மனதில் வரும். பயம் வந்தால் ஆறுதல் தேட உள்ளம் நாடும். ஆறுதலையும் நம்பிக்கையும் கொடுக்க பெற்றோர்களால் முடியாத நிலை வரும்போது, நண்பர்களால் கொடுக்க முடியும் என்று நம்புகிறார்கள். அங்கேதான் கெட்ட நண்பர்களால் சீரழிவு ஆரம்பமாகிறது.

  ஒருவன் டிப்டாப்பாக இருந்தால் அவனால் முடியும் என்று நம்புகிறார்கள் தன்னம்பிக்கை இழந்த மாணவ, மாணவிகள். ஏனென்றால் இவர்கள் அட்டைக்கத்தி சினிமா நடிகர்களை வைத்தே தன்னை கதாநாயகியாக கதாநாயகனாக சித்திரித்துக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் இவர்களைப்போல நடித்துப் பார்த்து பழகி வாழ்ந்து வாழ்க்கையைத் தொலைக்கிறார்கள். ஒரு சில சினிமாக்கள் எவ்வளவு தூரம் வக்கிரங்களை, ஆபாசங்களை, வசனங்கள் பாட்டுகள் மூலம் திணிக்கிறது? இதைப் பார்க்கும் நம்பிக்கையற்ற இளைஞர்களைச் சீரழித்து, கோடியில் புரண்டு சுசீ லீக்ஸ் மூலம் தங்கள் அந்தரங்கங்களை வெளிப்படுத்தி, அதிலும் விளம்பரம் தேடி, புகழ் வெளிச்சம் பெறுகிறார்கள். ஆபாச படத்தில் நடித்தவள் இன்றைக்கு பாலிவுட்டில் கதாநாயகி. அவள் பேச்சுக்கு, அவள் வருகைக்கு கூட்டம். அதைவைத்து கடை திறப்பு. அதைப் பார்க்க கூட்டம். அவளுடன் செல்ஃபி எடுக்க அடிதடி. நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுவடை செய்கிறோம்.

  வீட்டினுள் கேமராவை வைத்து பல அந்தரங்கங்களை வெளியரங்கமாய் பகிரங்கப்படுத்திய டிவி நிகழ்ச்சியைப் பார்க்கும் சில இளைஞர்கள், மற்றவர்கள் அலைபேசியில் சாப்ட்வேர் மூலமாக அவர்களுக்குத் தெரியாமல் தனிப்பட்ட விஷயங்களை வீடியோ எடுப்பது தப்பில்லை என்று நினைக்கிறான்.

  ரியாலிட்டி ஷோ நடத்தி, பணம் கொடுத்து நடிகைகளின் அந்தரங்கங்களை தண்ணீர் ஊற்றி வெளிப்படுத்தி, ஆபாச நடனம் ஆடி, அதை வீட்டிற்குள் பார்க்க வைத்துவிட்ட பின்பு, டப்ஸ்மாஸ், டிக்டாக்கில் அப்படிச் செய்து தங்களை நடிகைகளாக நடிகர்களாக எண்ணி தனது தனித்திறமைக்குக் கிடைக்கும் லைக்குக்காக இளைஞர்கள்... இளம்பெண்கள் ஏன் குடும்பப் பெண்கள்கூட ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கெல்லாம் காரணம் என்ன? சினிமாவில் காதலை அநாகரிகமாக சித்திரிக்கும் நடிகர்கள், ஆபாச பாட்டு, வசனம் பாடும் நடிகர்கள், ரவுடிகளாக நடிப்பவர்கள் சமுதாயத்தைக் கெடுத்துவிட்டு, பிரச்னை வரும்போது சமூக ஆர்வலராக மாறி தொலைக்காட்சியில் கருத்து சொல்கிறார்கள். இவர்கள் திரையில் அப்பட்டமாகச் செய்ததை நாம் ஏன் தரையில் செய்யக் கூடாது என்று துணிகிறான் இன்றைய இளைஞன். அதற்கு அவனது ரவுடித்தனமும் பணக்காரத் திமிரும், அரசியல் செல்வாக்கும் அதிகாரத் திமிரைக் கொடுக்கிறது. பொள்ளாச்சியில், நம்பிய பெண்களைச் சீரழித்து, 250-க்கும் மேற்பட்ட பெண்களைக் கடந்த 7 வருடங்களாக அரசியலின் பின்புலத்தில், கொடூரமாகச் சீரழித்து, சமூகத்தில் தான் மட்டுமல்ல, தன் குடும்பத்தையும் கூனிக் குறுகி நிற்க வைத்திருக்கிறார்கள், அரசியலில் வீணாகிப் போன இளைஞர்கள். இவர்களுக்கு மட்டுமல்ல, இவர்களை இயக்கிய நெட்வொர்க்கை கண்டறிந்து கடும் தண்டனை தருவது மட்டுமல்ல, இந்த சமூக அவலங்களை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும்.

  நாம் எப்படி பணத்திற்கும் பகட்டிற்கும் சாதிக்கும், மதத்திற்கும், ஆண்ட, ஆளும் கட்சிக்கும், சினிமா வெளிச்சத்திற்கும் மயங்கி வாக்கை செலுத்தி நம் வருங்கால சந்ததிகளின் வாழ்க்கையை இப்படி தெருவிற்கு கொண்டுவருகிறோம். அதுபோலத்தான் நமது குழந்தைகளும் வழி தெரியாமல் விழி பிதுங்கும்போது, தனக்கு ரோல் மாடலாக இல்லாத பெற்றோர்களைப் பார்த்து வளரும் பிள்ளைகள் எப்படி நல்லவர்களாக மாறுவார்கள்?

  இன்றைய படித்த இளைஞர்களை அவர்கள் படித்த படிப்பிற்கேற்ற வேலை வாய்ப்பை உருவாக்கித் தர திறமையற்ற அரசியல் தலைவர்கள், தங்களுக்கு தேவையான வேலைக்கு ஆள்பிடிக்கும் கூட்டமாக, தனக்குக் கை கூலியாக கட்சியின் போர்வையில் அமர்த்திக்கொண்டு, அவர்களது லஞ்சப் பணத்தின் நிழலில் அடியாளாக மாற்றாமல், அறிவாளியாகவா மாற்றுவார்கள்?

  ‘குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவதை விட்டுவிட்டு... கழுகைப்போல வானளாவப் பறந்து... அனைத்தையும் பார். அறிந்துகொள். தெரிந்துகொள். கற்றுக்கொள். ஆனால் எதற்கும் அடிமையாகி விடாதே’ என்று குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். இன்றைய சமூக அவலங்களை குழந்தைகளிடம் பேசி புரியவைத்து விழிப்புணர்வு கொடுத்து அவர்களுக்கு இவற்றைத் தாண்டி பறக்கும் இறக்கையைக் கொடுங்கள். பிணத்தை உண்பது கழுகின் குணம். நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் சாதாரண கழுகைப்போல பிணம் தின்றவர்கள்தான். செத்த பிணங்கள் தெருவெங்கும் (வலைத்தளம் எங்கும் ஆபாசம்) எங்கும் சிதறி கிடக்கிறது. மேலிருந்து பார்த்தால் இவை அனைத்தும் சுலபமாக உனக்கு கிடக்கும். அனைத்தையும் நீ சுலபமாக கொத்தலாம் ஆனால் அழுகிய பிணத்தில் உள்ள தீமையான பாக்டீரியா அல்லது வைரஸ் உன்னை ஒருநாள் அழிக்கும். உனக்கான இரை எதுவென்று முடிவெடுக்கும்!

  திறமைதான் உன் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டி. உயிருள்ள மீன்தான் உன் அறிவுப்பசிக்கு இரை என்று நீ நினைத்த அடுத்த விநாடி, சுலபத்தில் கிடைக்கும் செத்த பிணங்கள் உன் கண்ணுக்கு தெரியாது. உனது தனிப்பட்ட சிற்றின்பத்தை மீறி இலட்சியம் முன் நிற்கும். அது தண்ணீருக்குள் வேகமாக ஓடும் உயிருள்ள மீனை நீ ஆயிரக்கணக்கான அடி வான் உயரத்தில் இருந்தாலும், குறிப்பாக உன் வாழ்க்கைக்கான இரையை (இலக்கை) கொத்தி விழுங்கும் வல்லமையை உனக்குக் கொடுக்கும். அதை இந்த உலகத்திற்கு நீ புரியவைத்த அடுத்த விநாடி வரலாறு உன்னை திரும்பிப் பார்க்கும். ஏசியவர்கள் ஏளனம் செய்தவர்கள் உன்னை போற்றுவார்கள்.

  ஒரு தனிமனிதனை அடிமைப்படுத்த வேண்டுமா? அவனது நம்பிக்கையைப் பெற்று அவனது பிம்பத்தையும் அவனது நம்பிக்கையும் தகர்த்தால் அவன் உனக்கு அடிமையாவன். ஒரு சமூகத்தை அடிமைப்படுத்த வேண்டுமா? அதை சமூகத்தை கேளிக்கைக்கும், சிற்றின்பத்திற்கும், குடிக்கும், போதைக்கும், இலவசத்திற்கும் அடிமையாக்கு. அந்த இனம் அழியும் என்பது அமெரிக்க பூர்வ குடிகள் அழிந்த வரலாறு. நம் முன் உள்ள சோதனை, நம் எதிர்கால சந்ததியை நாம் எப்படி வளர்க்கப்போகிறோம்? காக்கப்போகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் அரசாட்சியைத் தீர்மானிப்பது.

  உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai