Enable Javscript for better performance
அத்தியாயம் - 44- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் - 44

  By விஞ்ஞானி வெ. பொன்ராஜ்  |   Published on : 27th November 2019 01:10 PM  |   அ+அ அ-   |    |  

  Cooum_River

   

  உள்ளாட்சி அமைப்புகள்: ஏற்றம் பெற மாற்றம்!

   

  ‘‘காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணிநிலம் வேண்டும்.. என்று தொடங்கும் பாடலில்,

  பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்

  பக்கத்திலே வேணும் - நல்ல

  முத்துச் சுடர்போலே - நிலாவொளி

  முன்புவர வேணும் - அங்கு

  கத்துங் குயிலோசை - சற்றே வந்து

  காதிற்பட வேணும் - என்றன்

  சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

  தென்றல்வர வேணும்..’’

  என்று கேட்டிருப்பார் மகாகவி பாரதியார்.

  டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் தனது கிராமப்புற வாழ்க்கையைப் பற்றிக் கூறும்போது, மகாகவி சுப்பிரமணிய பாரதியார் எழுதிய மேற்கண்ட அற்புதமான கவிதையை நினைவுகூர்ந்து கீழ்கண்டவாறு சொன்னார்:

  ‘‘என் சிறுவயது வாழ்க்கையைப் பற்றி நான் நினைக்கும்போதெல்லாம் என் கிராமத்தைப் பற்றிய நினைவுகள் மனத்தில் அலைமோதுகின்றன. எங்கும் பச்சைப் பசேலென்று இருக்கும்; சாலையின் இருபுறமும் பழம் தரும் மரங்கள்; மூலிகைச் செடிகள், தென்னை, வாழை மரங்கள் ஆகியன எல்லோரது வீட்டிலும் இருக்கும். கிராமத்தின் மத்தியில் கோயிலருகே பொதுக்குளம் ஒன்று இருந்தது; மழைக்காலத்தில் மட்டுமே அது நிரம்பும். நான் பிறந்த இடம் தீவு என்பதால் சுற்றுப்புறமெல்லாம் ஒரே கடல்தான். வானத்தில் எப்போதும் பறவைகள் சத்தத்துடன் பறந்துகொண்டிருக்கும். பசுக்கள் அமைதியாகச் சாலையோரம் அமர்ந்திருக்கும். முழுமையான ஒரு கிராமமாகும் அது. ஒவ்வொரு தெருவிலும் வீட்டு/சமையல் குப்பை மற்றும் சாணம் போடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். சாணம் பயிருக்கு உரமாக மீண்டும் பயன்படும். படகு கட்டுமானம், மீன் பிடித்தல் மற்றும் அவற்றை உள்ளூர் சந்தையில் விற்பது ஆகியவையே எங்களது முக்கியத் தொழில்களாக இருந்தன.

  மின்சார வசதி, கேபிள் டிவி ஆகியவை எங்களுக்கு இருந்ததில்லை; எனவே, எங்கள் தெருக்களில் ஆங்காங்கே கேபிள் வயர்கள் தொங்கிக்கொண்டு இருக்காது. கழிவுநீர் வசதி சரியாக இல்லாவிட்டாலும் எங்கும் தண்ணீர் தேங்காது. பிளாஸ்டிக் பொருட்களை நாங்கள் பயன்படுத்தவே மாட்டோம்; மாசுபடுதல் இல்லவே இல்லை. வீட்டுக்குள் தானியங்களைச் சேமிக்க மண்ணால் ஆன தொட்டி இருந்தது; உணவு தானியங்களை நாங்கள் வீணடித்ததே இல்லை.

  அற்புதமான சூழலில் நாங்கள் வசித்தோம். மீன் பிடித்தல், கைத்தறி நெசவு, எருமை/ஆடு வளர்த்தல், மண்பானைகள் செய்தல் போன்ற பல்வேறு தொழில்கள் இருந்ததால் பொருளாதாரமும் பலமாகவே இருந்தது. அன்பு, பாசம், ஒருவருக்கொருவர் உதவுதல், சேவை செய்தல் போன்ற உணர்ச்சிமயமான செயல்கள் வலுவான பாசப் பிணைப்புகள் கொண்ட பாரம்பரிய குடும்பமுறையில் வாழ்ந்த எங்களைக் கட்டிப்போட்டிருந்தன’’.

  அப்துல் கலாம் வாழ்ந்த கிராமம்போல இன்றைய தமிழகக் கிராமங்கள் இருக்கின்றனவா என்று நாம் எண்ணிப் பார்த்தால், நமக்கு இன்றைய கிராமங்களின் அவலநிலை விளங்கும்.

  ‘‘இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் மின்வசதி அளிக்கப்பட வேண்டும்’’ என்றார் காந்திஜி. உலகின் மிகப்பெரிய மின்மயமாக்கப்படாத மக்கள்தொகை இந்தியாவில் இருப்பதாக உலக வங்கி அறிவித்தது. 2015-ல் ஒரு தணிக்கையின் மூலம் 18,452 கிராமங்கள் மின்சார வசதியில்லா கிராமமாக இருக்கிறது என்பது தெரிய வந்தது.

  28 ஏப்ரல் 2018-ல் ‘‘இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்துக்கும் இப்போது மின்சாரம் கிடைப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று பாரதப் பிரதமர் ட்வீட் செய்தார். எனவே 29 ஏப்ரல் 2018 முதல் இந்தியாவில் உள்ள அனைத்துக் கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டுள்ளன; ஆனால் எல்லா வீடுகளும் மின்மயமாக்கப்பட்டன என்று அர்த்தமல்ல. ‘‘மின்மயமாக்கப்பட்டவை’’ என்ன என்பதை உற்று நோக்கினால், இந்தியா இன்னும் எவ்வளவு தூரம் செல்லவேண்டி இருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

  மே 7, 2018-ல் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்தியாவின் 18,452 கிராமங்களில் 1,417 கிராமத்தில் அல்லது மொத்தத்தில் 7.3% மட்டுமே 100% வீட்டு மின்சார இணைப்புகளைக் கொண்டுள்ளன. மேலும் 2019-ல் சுமார் 31 மில்லியன் வீடுகள் இன்னும் இருளில் உள்ளன என்பதுதான் உண்மை.

  கிராமப்புறக் கண்மாய்கள், ஊருணிகளுக்கு மழைக்காலங்களில் வரும் வரத்துக்கால்வாய்கள், போக்கு கால்வாய்கள் பல கிராமங்கள், நகரங்களில் ஆக்கிரமிப்புகளால் அடைக்கப்பட்டுவிட்டன; அல்லது தூர்ந்துபோய்விட்டன. கடந்த 30 ஆண்டுகளில் மழைக்காலங்களில் பல கிராமங்களின் கண்மாய்கள் நிரம்பாமல் போய், பெய்யும் மழை அனைத்தும் கிராமப்புற, நகர்ப்புற நீர் நிலைகளில் தேங்காமல் போய், ஆறுகளில் கலந்து கடைசியில் கடலுக்குச் சென்று வருடம்தோறும் பெய்யும் மழை நீர் வீணாகக் கடலில் கலக்கிறது.

  மழைநீர்க் கால்வாயும், சாக்கடையும் தனித்தனியாக எந்தக் கிராமத்திலாவது அல்லது நகரத்திலாவது கட்டமைக்கப்பட்டிருக்கிறதா? திட மற்றும் திரவ கழிவுகள் மேலாண்மைத் திட்டத்தை உண்மையாக அமல்படுத்தி குப்பை இல்லாத, குப்பைத்தொட்டி இல்லாத கிராமங்கள், நகராட்சிகள், மாநகராட்சிகள் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கிறதா? இன்றைய பெரும்பாலான கிராமங்களில் சிமெண்ட் ரோடுகள் வந்துவிட்டன. ஆனால் சாக்கடை வசதி சரியாக இல்லை; ஆங்காங்கே கழிவு நீர் தேங்கி நிற்கிறது. அதனால் டெங்கு, மலேரியா போன்ற வியாதிகளின் உற்பத்தி கேந்திரமாக கிராமங்களும், நகரங்களும் மாறி நிற்கின்றன. மழை நீர் சேமிக்க வழியில்லாமல் அது சிமிண்ட் ரோட்டில் ஓடி சாக்கடையிலும், ஆற்றிலும் சென்று கலக்கிறது. பெரும்பாலும் டாய்லெட் வசதி வந்துவிட்டது. ஆனால் பெரும்பாலும் அதை உபயோகப்படுத்த தண்ணீர் இல்லை. அதனால் இன்னமும் கிராமப்புற, நகர்புற குடிசைப்பகுதிகளில் வெளி இடங்களை கழிப்பிடமாக உபயோகப்படுத்தும் அவலநிலை இன்றும் காணப்படுகிறது. இது பெரும்பாலும் நகரங்களில் மிகப்பெரிய சுற்றுப்புற சீர்கேட்டை உருவாக்குகிறது.

  எங்கெல்லாம் பாதாளச் சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லையோ அங்கெல்லாம் டாய்லெட்களினால் நகரங்களிலும், கிராமங்களிலும் நிலத்தடி நீரின் உப்புத்தன்மை அதிகமாகியிருக்கிறது என்பது பல்வேறு சர்வே மூலம் தெளிவாக விளங்குகிறது. ஆனால் எங்கெல்லாம் பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு பல்வேறு கோடிக்கணக்கான ரூபாய்கள் வருடம்தோறும் செலவழிக்கப்பட்டும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்பும், இன்றைக்கும் கழிவு நீர் ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்தில் ஊருணிகள், நீர் நிலைகளில், ஆறுகளில் கலக்கிறதா, இல்லையா என்பது உங்கள் ஊர்களில் நீங்கள் சென்று பார்த்தால் உங்களுக்குத் தெரியும்.

  கடந்த இருபது ஆண்டுகளில் சிங்காரச் சென்னை, எழில்மிகு சென்னை மற்றும் சீர்மிகு சென்னை போன்ற மிகைப்படுத்தப்பட்ட திட்டங்களின் கீழ் கூவம் மற்றும் அடையாறு கால்வாய்கள் நிறுவனங்களுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 72 கி.மீ. நீளமுள்ள கூவத்தை மீட்டெடுப்பது 1967-ம் ஆண்டில் இருந்து பேசப்பட்டு வருகிறது. அதற்குள் 10-க்கும் மேற்பட்ட மேயர்கள் வந்து போய்விட்டார்கள். கூவம் இன்னும் சுத்தப்படுத்தப்படவில்லை. கூவத்தின் நாற்றம் மட்டும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

  சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் 5200 கி.மீ. நீளத்தில் பாதாள சாக்கடை திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 8.76 லட்சம் வீடுகள் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டு, 82 சதவிகிதம் மக்கள் இதில் இணைக்கப்பட்டு, 12 கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் சென்னையில் உற்பத்தி செய்யப்படும் 1,800-2000 மில்லியன் லிட்டர் கழிவுநீரில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் பொருள் என்னவென்றால், ஆறுகள் மற்றும் ஏரிகளை இணைக்கும் நீர்நிலைகளுக்கு மனிதக்கழிவுகள் செல்லக்கூடும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் திறன் ஒரு நாளைக்கு 764 மில்லியன் லிட்டர் (MLD) என்றாலும், அவர்கள் ஒரு நாளில் 550 எம்.எல்.டி கழிவுநீர் மட்டுமே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் செல்கிறது. மற்ற மனிதக் கழிவுகள் அனைத்தும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய்களில் கலக்கின்றன. இன்னமும் ஒட்டுமொத்த சென்னை நாறிக்கொண்டுதான் இருக்கிறது. சென்னையின் நிலைமையே இப்படி என்றால், மற்ற 14 மாநகராட்சிகள், 146 நகராட்சிகளின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குறியே.

  மேற்கண்ட அவலங்கள் இல்லாத கிராமப் பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாநகராட்சி இருக்கிறதா என்று கண்டறியுங்கள் இளைஞர்களே.. மத்திய அரசின் பல்வேறு விருதுகளைப் பெற்ற கிராம, நகர, மாநகர பஞ்சாயத்துகளில் மேற்கண்ட அவலங்கள் இல்லாத ஊராட்சிகள் இருந்தால் அதை தேடிப்பார்த்து அது உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் தெரிவியுங்கள். அதைச் செயல்படுத்திய உங்கள் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி தலைவர்களை நாம் உண்மையிலேயே பாராட்ட வேண்டும். அவர்களை மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  ஏற்கெனவே நடந்த நமது பஞ்சாயத்துத் தேர்தல்கள் மேற்கண்ட அவலங்கள் இல்லா கிராமப் பஞ்சாயத்துகளை, நகராட்சிகளை, மாநகராட்சிகளை இந்த பஞ்சாயத்து தேர்தல் மூலம் உருவாக்கியிருக்கிறதா? என்றால் பெரும்பாலும் இல்லை என்பதுதான் இன்றைய நிலைமை.

  பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று மாற்றத்தை உருவாக்க நினைக்கும் அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.

  சுமார் 3.6 கோடி கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் குடிமைச் சேவைகளை வழங்கும் கடமை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்டு. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் கடமைகளைச் செய்ய தங்கள் சொந்த வளங்களை உயர்த்துவதற்காக வரி வசூலிக்க அதிகாரம் அளிக்கப்படுகின்றன. இருப்பினும், தங்கள் சொந்த வருவாய் மூலம் சேகரிக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. எனவே, அரசாங்கம் (மத்திய மற்றும் மாநில) தங்கள் சொந்த வரி வருவாயில் ஒரு பகுதியை கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒதுக்குகிறது.

  73-ஆவது மற்றும் 74-ஆவது திருத்தச் சட்டங்களால் இணைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பின் பிரிவு 243(I) மற்றும் 243(Y) உள்ளாட்சி அமைப்புகளின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை அனைத்து மாநிலங்களிலும் ஒரு மாநில நிதி ஆணையத்தின் அரசியலமைப்பை ஒரு வருடத்திற்குள் வழங்குவதன் மூலம் அறிவித்தது. அரசியலமைப்பு 73-ஆவது திருத்தச் சட்டம், 1992 ஆரம்பத்தில் இருந்தும், பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் காலாவதியாகும்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதிப் பகிர்வு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

  பத்தாவது மத்திய நிதி ஆணையத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய மத்திய அரசின் நிதியின் அளவைப் பரிந்துரைக்குமாறு மத்திய அரசு மத்திய நிதி ஆணையங்களையும் கேட்டுக் கொண்டது. ஒதுக்கப்பட்ட / பகிரப்பட்ட வருவாய்கள் மாநில அரசால் சேகரிக்கப்பட்டவை. ஆனால் அவை உள்ளாட்சி அமைப்புகளுடன் மாற்றப்படுகின்றன / பகிரப்படுகின்றன. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட பகிரப்பட்ட வருவாயின் முக்கிய ஆதாரங்கள் உள்ளூர் செஸ், உள்ளூர் செஸ் கூடுதல் கட்டணம், முத்திரைக் கட்டணத்தில் கூடுதல் கட்டணம், பொழுதுபோக்கு வரி, சீக்னியோரேஜ் கட்டணம் மற்றும் சுரங்கங்கள் மற்றும் தாதுக்களின் குத்தகை அளவு மற்றும் சமூக வனவியல் தோட்டங்களின் விற்பனை வருமானம்.

  தமிழ்நாட்டில், முதல் மாநில நிதி ஆணையம் ஏப்ரல், 1994-ல் அமைக்கப்பட்டு 1996-ல் தனது அறிக்கையை வழங்கியது. 1997-98-ல் இருந்து 2016-17 வரை ரூ.31,943 கோடியை கிராம, ஒன்றிய, மாவட்ட பஞ்சாயத்துக்கு தமிழக அரசு தனது நிதியில் வழங்கியிருக்கிறது. முதல் மாநில நிதி ஆணைய (1997-98 to 2002-2003) மானியம் ரூ.2043 கோடியாக ஒதுக்கி, சராசரியாக வருடத்துக்கு கிராமப் பஞ்சாயத்துக்கு ரூ.1.68 லட்சம், ஒன்றிய பஞ்சாயத்துக்கு ரூ.43.11 லட்சம், மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.94.81 லட்சம் ஒதுக்கியது. அது நான்காவது மாநில நிதி ஆணைய (2012-13 to 2016-17) மானியத்தில் ரூ.17,362 கோடியாக உயர்ந்தது. இதில் சராசரியாக வருடத்துக்கு கிராம பஞ்சாயத்துக்கு ரூ.19.68 லட்சம், ஒன்றிய பஞ்சாயத்துக்கு ரூ.3.64 கோடி, மாவட்ட பஞ்சாயத்துக்கு ரூ.10.95 கோடியாக உயர்ந்தது. இதோடு மத்திய நிதி ஆணையம் 10-வது நிதி ஆணயத்திலிருந்து (1996-97 to 2000-01) 13-வது நிதி ஆணயம் (2011-12 to 2014-15) வரை ரூ.1556 கோடியை ஒதுக்கியிருக்கிறது. மத்திய அரசின் நிதி தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதியைவிட மிக மிகக் குறைவுதான்.

  இந்த அளவு நிதியை மத்திய, மாநில அரசு ஒதுக்கிய பின்னரும், உங்கள் ஊர் கிராமப் பஞ்சாயத்து, ஒன்றிய பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்துகள் மேம்பாடு அடைந்திருக்கிறதா, மேலே நாம் கண்ட அவலங்கள் கடந்த 22 வருடங்களில் மாற்றப்பட்டிருக்கின்றனவா என்று சிந்தித்துப் பாருங்கள். இல்லையென்றால் போனது போகட்டும்; இனிமேல் வரும் பஞ்சாயத்துத் தேர்தலில் நமது தேர்வு இந்த அவல நிலைகளை மாற்றியமைத்து மிச்சமெல்லாம் உச்சம் தொடுமா, அதற்கு என்ன தீர்வு, அதை எப்படி அப்துல் கலாம் புரா திட்டத்தின் மூலம் அடைய முடியுமா? தொடர்ந்து பார்ப்போம்.

  உங்கள் கனவுகளை, லட்சியங்களை பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள்: vponraj@gmail.com

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai