Enable Javscript for better performance
2. மூன்று மந்திரங்கள்- Dinamani

சுடச்சுட

  
  Steve-Turner

   

  இன்றைக்கு மாணவர்கள் எல்லோரும் மிக நவீனமான தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன் பயன்படுத்துகின்றனர். அந்த போன்களின் கேமரா எவ்வளவு திறமையானது என்பதும், அந்த போன்களின் மெமரி எவ்வளவு பெரியதென்றும் சிலாகிக்கிறார்கள். அந்த போனின் மெமரி + கூடுதல் மெமரி என்றெல்லாம் பிரமித்துப்போகின்றனர். அதுமட்டுமா, அவர்கள் அந்த போனில் சேமிக்கும் ஃபோட்டோ எங்கே போய் சேமிக்கப்படுகிறது, கேட்கும் பாடல் எந்தச் சேமிப்பிலிருந்து வருகிறது என்றெல்லாம் பிரமித்துப்போகின்றனர்.

  அந்த போன்களைவிட, அதன் மெமரிகளைவிட பன்மடங்கு சக்தி வாய்ந்த ப்ராசசரும் மெமரியும் கொண்ட மதிப்பிட முடியாத ஒன்று தங்கள் வசம் இருப்பதை அறிந்தால் என்ன செய்வார்கள். பிரமித்துப்போய்விட மாட்டார்களா?!

  நாம் தினசரி வாழ்வில் கையாளும் கம்ப்யூட்டரைவிட, மொபைல் போன்களைவிட நமது புலன்களும் மூளையும் ஆச்சரியமானதுதான்; பிரமிக்கத்தக்கதுதான்.

  அதிலும், மூளையுடன் கண்களும் காதுகளும் இணைந்துவிட்டால், அதுதான் வெற்றிக் கூட்டணி!

  ஒருத்தரை ஒரு தரம் பார்த்துட்டா போதும் மறக்கவே மாட்டேன் என்று சிலர் ஜம்பமாகச் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள்.

  பாடப் புத்தகத்தைச் சிலர் ஒருமுறை வாசித்தால் அதை பல நாள்களுக்கு ஞாபகம் வைத்திருப்பதையும் பார்த்திருப்பீர்கள். இதென்ன விந்தை என்று ஆச்சரியமும் அடைந்திருப்பீர்கள். ஆனால் உள்ளே நடப்பது என்னவெனத் தெரியுமா? அது தெரிந்துவிட்டால், அதை நீங்களும் செய்து பயனடையலாம்தானே!

  கண்கள், காதுகள், தோல், மூக்கு, நாக்கு இவற்றால் பார்க்கப்படும், கேட்கப்படும், உணரப்படும், நுகரப்படும், சுவைக்கப்படும் தகவல், நேரடியாகப் பிரதானமான மெமரியில், அதாவது உங்களால் நீண்ட நாள்களுக்கு ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்படியான ஞாபக இடத்துக்கு உடனே போவதில்லை.

  நமது நீண்ட நாள் மெமரி என்பது ஒரு பெட்டகம்போல பாதுகாப்பானது. அதில் எதையெல்லாம் சேமிக்க வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்கிறோம்.

  விரிவாகப் பார்க்கலாம்.

  வகுப்பில் ஆசிரியர் ஒரு Formula-வை board-ல் எழுதுகிறார். அதைக் கவனிக்கும் மாணவனுக்கு, அந்த Formula உடனே மூளையில் பிரதான மெமரியில் போய் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு புலனுக்கும் இருக்கும் sensory register எனும் தற்காலிக மெமரியில் 200 மில்லி விநாடிகள் மட்டுமே தங்கி அங்கேயே தேய்ந்து தொலைந்துபோகிறது.

  கண்களின் sensory registry-ல் மட்டுமே இப்படி விநாடிக்கும் குறைவான நேரம் தங்கி தொலைந்துபோகும் மெமரி, iconic memory என அழைக்கப்படுகிறது.

  இதுபோலத்தான், வகுப்பில் ஆசிரியர் பாடம் எடுக்கும்போது சொல்லும் தகவலும், காதுக்கான sensory registry எனும் தற்காலிக மெமரியில் 200 மில்லி விநாடிகள் மட்டுமே தங்கி அங்கேயே தேய்ந்து தொலைந்துபோகிறது.

  காதுக்கான sensory registry-ல் மட்டுமே இப்படி விநாடிக்கும் குறைவான நேரம் தங்கி தொலைந்துபோகும் மெமரி, echoic memory என அழைக்கப்படுகிறது.

  இப்படித் தொலையாமல் எப்படிப் பாதுகாப்பது, எங்கே பாதுகாப்பது என்பதுதான் முக்கியமானது. விடை சுலபம்தான்!

  Sensory Register-ல் தொலைந்துபோய்விடும் என்பது தெரிந்த பின்பு, அந்த விவரத்தை அங்கேயே வைத்திருப்பது புத்திசாலித்தனம் இல்லையே.

  விலைமதிப்பில்லாத பொருட்களை சிரமம் எடுத்துக்கொண்டு வாங்கிவந்து, அதை வாசல் கதவுக்குப் பக்கத்திலேயே வைத்துவிட்டால் அது தொலைந்துதானே போகும். அதைப் பத்திரமாக பெட்டகத்தில் வைத்தால்தானே பாதுகாப்பு.

  வகுப்பிலும் வீட்டிலும் படிக்கும் பாடமும் விலைமதிப்பில்லாததுதானே! ஒவ்வொரு தகவலும் தங்கமும் வைரமும் போன்றதுதானே! அதை ஏன் sensory register எனும் வாசல் கதவுக்குப் பக்கத்திலேயே வைத்துத் தொலைக்க வேண்டும்!

  அங்கிருந்து எங்கே கொண்டு செல்வது?

  புலன்களால் உள்வாங்கப்படும் தகவல்கள் எல்லாம் தற்காலிக மெமரியிலும் பின்னர் நிரந்தர அல்லது நீண்ட நாள் மெமரியிலும் சேமிக்கப்படுகின்றன.

  நிரந்தர அல்லது நீண்ட நாள் மெமரி என்பதுதான் நம் இலக்கு. அதிலே கொண்டுபோய் பாட விவரங்களை எல்லாம் சேமித்து வைத்துவிட்டால் போதும். நூற்றுக்கு நூறு நிச்சயம்!

  அது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

  மிகச் சுலபமான எல்லோராலும் கடைப்பிடிக்கக்கூடிய, அதே நேரம் அவசியமான மூன்று மந்திரங்களைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். இந்த மந்திரங்கள் மட்டும் தெரிந்துவிட்டால் போதும். மெமரி குறித்து கவலையே இல்லை!

  முதல் மந்திரத்தின் பெயர் ‘ஆர்வம்’

  ஆர்வமில்லாமல் செய்யப்படும் எதுவும் நீண்ட நாள் ஞாபகத்தில் இருப்பதில்லை. ஏனோ தானோ என்றும், வேண்டா விருப்புடனும், கடமையே எனவும் செய்யப்படும் எந்த வேலையும் நீண்ட நாள் மெமரியில் இருப்பதில்லை; அதனால் பயனும் இல்லை. இதுதான் முதல் மந்திரம். வகுப்பறைக்குள் செல்லும்போது, இன்று நாம் புதிதாகப் பாடமொன்று கற்றுக்கொள்ளப்போகிறோம்; அதனால் ஆர்வம் அதிகம் இருக்கிறது எனும் சிந்தனையை பலமாக உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

  வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்தின் மீது ஆர்வத்தை எப்படி அதிகமாக்குவது? வழி எளிமையானது.

  • நம்மைப் போலவே பல மாணவர்கள் அதே பாடத்தை இதற்கு முன்பு படித்து பரிட்சை எழுதி பாஸாகி மேல் வகுப்புகளுக்கு சென்று கற்று இன்று வேலையில் / தொழிலில் சாதித்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டே இருங்கள்.

  • நான் கற்றுக்கொள்வதற்கு எப்போதுமே தயாராக இருக்கிறேன் என்பதை தினசரி உங்களுக்குள் சொல்லிக்கொண்டே இருங்கள்! இதை விளையாட்டாக இல்லாமல், ஆழ்மனத்தில் உங்களுக்கு நீங்களே பதிய வைத்துக்கொள்ள சொல்லிக்கொண்டே இருங்கள்!

  • அந்தப் பாடம் நமக்குப் புரியாது, ரொம்ப கஷ்டம் என்று நினைக்காதீர்கள். அப்படி நினைப்பது உங்களுக்கு எதிராகவே வேலை செய்யும் என்பதை நிச்சயம் புரிந்துகொள்ளுங்கள்.

  • பாடம் புரியவில்லை என்றால், தயங்காமல் சந்தேகத்தை ஆசிரியரிடம் கேளுங்கள். சந்தேகம் கேட்பது கெட்டது இல்லை. அது மிகவும் நல்ல செயல். சந்தேகம் கேட்டால்தான் அறிவு வளரும் என்பதை உறுதியாக நம்புங்கள். கேள்வி கேட்டால் ஆசிரியர் கோபம் கொள்வார்; நண்பர்கள் கேலி செய்வார்கள் என கற்பனை செய்து கொள்ளாதீர்கள். கேள்வி கேட்காமல் இருப்பதால் வரும் நஷ்டம் ஆசிரியரின் கோபத்தைவிட, நண்பர்களின் கேலியைவிட அதிகமானது.

  • பாடம் போரடிக்கிறது என நினைத்துக்கொள்ளாதீர்கள். போரடிப்பது என்று ஒன்று இல்லை என்பதுதான் உண்மை. மூளை சோர்வடைந்திருக்கும்போது நம்மால் கற்றுக்கொள்ள முடியாது. அப்போது கற்றுக்கொள்ள முயற்சி செய்தால் போரடிப்பதுபோலத் தெரியும். மூளையின் சோர்வைப் போக்க நல்ல வழிகள் நிறைய இருக்கின்றன. உதாரணமாக, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்தல், இசை கேட்பது போன்றவை. உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும் செய்யும்போது மூளையில் புதிய நியூரான்கள் உருவாகும். அவை, கற்கும் விஷயத்தை மெமரியில் வைத்துக்கொள்ள உதவும். ஆர்வத்தையும் அதிகரிக்கும்.

  இரண்டாவது மந்திரத்தின் பெயர் ‘ஆச்சரியம்’

  புதியதாக ஒன்றைத் தெரிந்துகொள்வது ஆச்சரியமானதுதானே! அப்படி ஆச்சரியமிருந்துவிட்டால், அதன் மீது ஈடுபாடு வந்துவிடும்!

  குழந்தையாக இருந்தபோது ஒவ்வொரு எழுத்தும் தெரிந்துகொள்வதும் ஆச்சரியமாக இருந்தது. அதன் பின்னே எழுத்துகளைச் சேர்த்து வார்த்தைகளாக மெல்ல மெல்ல பேசியது ஆச்சரியமாக இருந்தது. அப்படியே வார்த்தைகள் கோர்வையாகி வாக்கியங்களாக நாம் பேசுவதும் ஆச்சரியமானதுதான். அதுபோலத்தான், புதிதாகக் கற்றுக்கொள்ளும் எந்த பாடமும்.

  • தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட ஏனைய மொழிகளில் பெரும் படைப்புகள் செய்தவர்கள் இப்படி படிப்படியாகக் கற்றுக்கொண்டவர்கள்தான் என்பதை நினைத்துப் பாருங்கள்.

  • அறிவியலில் பெரும் கண்டுபிடிப்புகளைத் தந்த அறிஞர்களும், கோட்பாடுகளை உருவாக்கிய விஞ்ஞானிகளும் இப்படி நம்மைப்போல அடிப்படைப் பாடங்களை முயற்சி செய்து கற்றுக்கொண்டவர்கள்தான் என்பதை நினைத்துப் பாருங்கள்.

  • பெரிய நிறுவனங்களில் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும், அலுவலர்களும் நம்மைப் போலவேதான் அடிப்படைப் பாடங்களை வகுப்பறையில் அமர்ந்து முயற்சி செய்து கற்றுக்கொண்டவர்ள் என்பதும் ஆச்சரியமானதுதானே.

  • உலகில் சாதாரணமானவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர். அவர்கள்தான் சாதனை செய்திருக்கிறார்கள். அவர்களும் நம்மைப்போலவே பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என முயற்சி செய்து, விடாமுயற்சியின் வழியாகத்தான் சாதனை புரிந்திருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது சோர்வு பறந்துபோய் ஆச்சரியம் வருமே!

  மூன்றாவது மந்திரத்தின் பெயர் ‘ஈடுபாடு’

  பாடத்தின் மீது ஏன் ஈடுபாடு வர வேண்டும்? விடை மிக எளிமையானது.

  • ஈடுபாட்டுடன் செய்யும் எந்த வேலையும் மகிழ்ச்சி தரும்.

  • ஈடுபாட்டுடன் செய்யும் எந்த வேலையும் வெற்றி தரும்.

  • மகிழ்ச்சியும் வெற்றியும் இணைந்திருந்தால் உயர்வு வரும்.

  உயர்வாக இருப்பதுதானே இலக்கு!

  ஈடுபாடு இல்லாமல் ஒரு விளையாட்டை விளையாடினால் அது சுவைக்குமா, அந்த ஆட்டத்தில் வெற்றி கிடைக்குமா, அதுபோலத்தான் பாடங்களும்.

  ஈடுபாடு இருந்தால் கஷ்டம் என நினைக்கும் பாடமும் எளிமையாக இருக்கும், சுவைக்கும், வெற்றி கிடைக்கும்.

  மூன்று மந்திரங்களையும் தெரிந்துகொண்டாயிற்று! இதை வைத்துக்கொண்டு வகுப்பறைப் பாடங்களைக் கற்றுக்கொண்டு எப்படி வெற்றிபெறுவது?

  படிப்பது Sensory Register-ல் மட்டும் தங்கி, விநாடிக்கும் குறைவான நேரமே தங்கி தேய்ந்து தொலைந்துபோகாமல் அதைக் காப்பாற்றி, பத்திரமாக நிரந்தர / நீண்ட நாள் மெமரியில் சேமிப்பது என்பதை அடுத்து பார்ப்போம்.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai