33. கடனால் நொடித்துப் போனால்..
By முனைவர் க. சங்கரநாராயணன் | Published on : 11th May 2019 10:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

வாழ்க்கை நடத்த பணம் தேவை. அதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. ஆயினும், நொடித்துப்போய் கடன்பட்டு அதிலும் நஷ்டப்பட்டால் வாழ்வு வெறுத்துப்போய்விடும். இப்போதைய சூழ்நிலையில் இதற்கு வேறுவழி இல்லை. விவசாயிகளும் மற்றைய ஏழ்மை நிலையில் இருப்போரும் நொடித்துப்போனால் வாழ்வை முடித்துக்கொள்ளும் முடிவை எடுக்கின்றனர். ஆனால், பண்டைய காலத்தில் கோயில்கள் வெறும் வழிபாட்டிடமாக மட்டும் இல்லாமல், இப்படி வாழ்வில் நொடித்துப்போனவர்களுக்கும் வாழ்வளிக்கும் மையங்களாகச் செயல்பட்டு வந்தன என்பது கல்வெட்டுகளின் மூலம் அறியக் கிடக்கிறது.
திருமயம் அருகில் பொன்னமராவதியில் உள்ள சுந்தரராசப் பெருமாள் ஆலயத்தில் ஒரு கல்வெட்டு அமைந்திருக்கிறது. இதன் காலம் பொ.நூ. 1453 ஆகும். இந்தக் கல்வெட்டு, கோயிலை அழகப்பெருமாள் விண்ணகரப்பெருமான் என்று குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு ஒரு அலாதியான தகவலைத் தருகிறது. அவ்வூரில் மல்லாயி என்பாளும் அவளுடைய மகளான உலகுடைய நாச்சி என்பாளும் வேறு நாட்டிலிருந்து வந்து குடியேறினர். மூன்று வருடங்களாகியும் உதவுபவர் யாருமின்றி கடன் பெற்று வாழ்க்கை நடத்தினர். ஆயினும், பஞ்சத்தால் நொடித்து சிறிதும் செல்வமின்றி ஏதிலாராயினர். ஆகவே அவர்கள் கோயிலுக்கு அடிமையாகி, கோயில் பணிகளைச் செய்து வாழ்க்கையை நடத்தலாமென்று முடிவெடுத்து, ஊராரையும் கோயில் பண்டாரத்தாரையும் அழைத்துக் கூறினர். கோயில் தானத்தாரும் அதனை ஏற்றுக்கொண்டு, அவர்கள் நலிவடைந்த கடனையெல்லாம் தீர்த்து கோயிலுக்கு அடிமைப் பணி பூண எடுத்துக்கொண்டு வாழ்வித்த செய்தி கல்வெட்டில் பதிவாகியுள்ளது.
இவர்கள் பரதேசியாக இவ்வூரிலே வந்திருந்து முன்னாள் நள வருஷம் க்ஷாமத்திலும் பிரமோதூத பிரஜாபதி வருஷம் க்ஷாமத்திலும் இரக்ஷிப்பார் இல்லாமல் நலங்கி கடன்காரரால் விதனமானது கொண்டு இவர்கள் பொன்னமராவதி ஊரவரையும் எங்களையும் கூட்டி நாங்கள் இவ்வெம்பெருமானுக்கு அடிமை ஆகப் புகுந்தோம் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேணும் என்று சொல்லுகையாலே நாங்களும் ஊரவரும் இம்மரி ஆதிக்குப் பொருந்தி இந்த உலகுடைநாச்சிக்கு ஊரவரும் மல்லாயிக்கு பொன்னன் உள்ளிட்டாருக்கும் சீபண்டாரத்திலும் ஆக மெலிவு குறை உண்டானதும் தீர்த்து இவர்களையும் எம்பெருமான் அடிமையாக முன்பே...
என்பது கல்வெட்டு வரிகள்.
பஞ்சத்தினால் நொடித்துப்போனவர்கள் காப்பாற்றுவாரும் இன்றி வாழ வழியுமின்றி திகைத்து நின்றனர். ஆயின் தற்கொலை எண்ணம் தோன்றாது, கோயிலுக்கு அடிமையாக இருந்து வாழ்வைக் கழிக்க திட்டமிட்டனர். கோயில் நிர்வாகத்தாரும் அவர்தம் கடன்களைத் தீர்த்து கோயில் பணிகளுக்கு அவர்களை ஏற்றுக்கொண்டது.
அடிமையாகப் புகுவது போன்ற செயல்கள் இன்றைய சூழ்நிலையில் ஒவ்வாத ஒன்று. ஆனால், ஏதேனும் ஒரு அரசு நிறுவனம் இப்படிக் கடன்பட்டு நொடித்த குடும்பங்களுக்கு அவர்கள் செய்யத் தகுந்த செயலைச் செய்விக்க ஆவன செய்து கடன்களைத் தீர்த்து வாழ்விக்குமானால், வாழ்விழந்து நலிந்தோர் தற்கொலையோ அல்லது தீய வழியையோ நாடாமல் வாழ்வைப் பெறுவர் என்பதுதான் இந்த வரலாற்றின் வண்ணம் தரும் தகவல்.