/

ஆண்டாள் கோயிலுக்கு தங்க விமானம்: 1 கிலோ தங்கம் ஒப்படைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலில் நடைபெற்று வரும் தங்க விமானம் அமைக்கும் பணிக்கு, 1 கிலோ தங்கத்தை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரனிடம் பக்தர்கள் வழங்கினர்.

News image
Updated On :6 நவம்பர் 2012, 6:38 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலில் நடைபெற்று வரும் தங்க விமானம் அமைக்கும் பணிக்கு வாஸ்து நிபுணர் மற்றும் பொறியாளர் ஆண்டாள் சொக்கலிங்கம் தலைமையில் இன்று 1 கிலோ தங்கத்தை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரனிடம் பக்தர்கள் வழங்கினர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலில் விமானத்தை 90 கிலோ தங்கம் கொண்டு தங்கத் தகடு பதிக்கும் பணியை நிறைவேற்ற கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதில் தற்போது உபயதாரர்கள் மூலம் சுமார் 20 கிலோ தங்கம் பெறப்பட்டு, தங்க விமானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பிரபல வாஸ்து நிபுணர், பொறியாளர் ஆண்டாள் சொக்கலிங்கத்தின் உபதேசத்தால் கவரப்பட்ட சுமார் 150 பேர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு இன்று வந்தனர். அவர்கள் தங்களால் முடிந்த அளவு தங்கம், பணம் உள்ளிட்டவற்றை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரனிடம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஆண்டாள் சொக்கலிங்கம் கூறியதாவது: தற்போது 1 கிலோ தங்கம் கோயில் திருப்பணிக்கு வழங்கப்பட்டுள்ளது. 20 கிலோ தங்கம் பெற்றுத் தர முயற்சிகள் மேற்கொண்டுள்ளேன். நிச்சயம் 10 கிலோ தங்கம் கொடுக்கப்படும். ஸ்ரீஆண்டாள் கோயிலுக்கு வந்துசென்ற பின்னர் தற்போது 40 பேர் எம்.எல்.ஏ. ஆகியுள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவர் உருவாகியுள்ளார்.

மக்கள் எப்படி பெருமாளை உண்மை என்கிறார்களோ, அது போன்று ஆண்டாளும் உண்மை. பெருமாள் தலத்திலேயே ஸ்ரீஆண்டாள் திருத்தலம் புகழ்பெற்றது. வரும் 3 ஆண்டுக்குள் கோயிலில் நடக்க இயலாத அளவிற்கு கூட்டம் அலைமோதும். கோயில் தங்க விமானம் அமைக்கும் பணிகள், நிர்வாகம் நினைத்ததைவிட மூன்று மடங்கு சிறப்பாக  நிறைவடையும். தொடர்ந்து எனது வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் ஸ்ரீஆண்டாள் கோயில் தங்க விமானம் அமைக்கும் பணிக்கு தங்கம் வழங்குவார்கள் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.