ஸ்ரீவில்லிபுத்தூரில் சனிக்கிழமை மின் பராமரிப்பு வேலை என காரணம் கூறி, நாள் முழுவதும் மின்சாரம் வழங்கப்படவில்லை. ஞாயிற்றுக்கிழமையும் இதே நிலை. மின்வாரியத்தில் கேட்டால், மரம் விழுந்துவிட்டது என ஒவ்வொரு நாளும் ஒரு காரணம் கூறி பகல் மற்றும் இரவில் பெரும்பாலான நேரங்கள் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மின்தடையால் மின்விசிறி செயல்படாததால் 3-வது வார்டில் மட்டும் சுமார் 60 பேர் கொசுக் கடித்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவ மாணவியரின் படிப்பு பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நகராட்சி 3-வது வார்டு பொது மக்கள் சுமார் ஆயிரம் பேர் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், காமராஜர் சிலை அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.