மாணவிகளை செல்போனில் படம் பிடித்த 3 மாணவர்கள் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவிகளை படம் எடுத்த, பிளஸ் 2 மாணவர்கள் 3 பேரை போலீஸார் புதன்கிழமை மாலை கைது செய்தனர்.


விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மூன்று மாணவிகளை படம் எடுத்த, பிளஸ் 2 மாணவர்கள் இருவரை போலீஸார் புதன்கிழமை மாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒரு மாணவரை தேடி வருகிறார்கள்.
கூமாப்பட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 1 வகுப்பில் பிளவக்கல் அணை, பட்டுப்பூச்சியைச் சேர்ந்த முருகன் மகள் விஜயா (17) என்பவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இவரும் இதே வகுப்பில் படிக்கும் கே.கௌசல்யா, மு.பிரியா ஆகியோர் சேர்ந்து செவ்வாய்கிழமை வகுப்பை குனிந்து சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளனர். இவர்களை பிளஸ் 2 படிக்கும் ராமசாமியாபுரம், மேலத்தெருவைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சசிக்குமார் (17) என்பவர் செல்போனில் படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது உடன் படிக்கும் கான்சாபுரம், குருசாமி மகன் சப்பாணிமுத்து, அமச்சியார்புரம் காலனி, சின்னச்சாமி மகன் அசோக்குமார் ஆகியோர் அப்படி படம் எடு, இப்படி படம் எடு என்று சொல்லி கமாணட் அடித்தார்களாம். விஜயா, மாணவர்களிடம் ஏன் இப்படி போட்டோ எடுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சசிக்குமார் வெளியே சொன்னால் தொலைத்துவிடுவேன் என்று கூறி மிரட்டினாராம்..
இது குறித்து மாணவிகள் தலைமை ஆசிரியை மேரி கிறிஸ்டினாளிடம் செவ்வாய்கிழமையே கூறியுள்ளார்கள். ஆனால் தலைமை ஆசிரியை மாணவர்களைக் கூப்பிட்டு கண்டிக்காமல், மாணவிகளிடம் நீங்கள் ஒழுக்கமாய் இருந்தால் எப்படி எடுப்பார்கள் என்று இவர்களை திட்டி அனுப்பினாராம்.
இது குறித்து மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளார்கள். அவர்கள் சார்ந்துள்ள சமுதாயத்தினர் புதன்கிழமை கூமாப்பட்டியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தலையிட்டு, பள்ளியில் வைத்து பேசி முடிக்கலாம் என்று கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டு பள்ளியில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.
அதில் வட்டாட்சியர் ஐ.திரௌபதி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் வைகுண்டபெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் மகேந்திரபாண்டியன், ஆய்வாளர்கள் சின்னப்பாண்டி, மரியகுளோரி உள்ளிட்டோரும், பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இறுதியில் செல்போனில் படம் எடுத்த மாணவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்காக காவல் துறையில் புகார் செய்வது என முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் மாணவி விஜயா கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சப்பாணிமுத்து, அசோக்குமாரை கைது செய்தனர்.
பின்னர் தலைமறைவாக உள்ள சசிக்குமாரையும் கைது செய்தனர்.
ஏற்கனவே இப் பகுதியில் இரு சமுதாயத்தினரிடையே மோதல் போக்கு நிலவி வரும் நேரத்தில் இச் சம்பவத்தால் மேலும் பிரச்னைகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக போலீஸார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...