விருதுநகர் நகராட்சியை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

மக்கள் தொகைக்கு ஏற்ப அருகிலுள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட வரைவு அரசின் ஒப்புதலுதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
Updated on
2 min read

மக்கள் தொகைக்கு ஏற்ப அருகிலுள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து நகராட்சியை விரிவாக்கம் செய்வதற்கான திட்ட வரைவு அரசின் ஒப்புதலுதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்தார்.

விருதுநகர் நகராட்சி மன்ற குழு கூட்டம் அதன் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மா.சாந்தி தலைமை வகித்தார். இந்நகராட்சியின் மேலாளர் மற்றும் துணைத் தலைவர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நகராட்சி உறுப்பினர்களுக்கும், அலுவலர்களுக்கும் இடையே நடந்த விவாதம் வருமாறு:

ஆறுமுகம்(உறுப்பினர்): விருதுநகர் நகராட்சி பகுதி விரிவாக்கம் செய்யப்படாமல் கடந்த 40 ஆண்டுகளாகவே பின்தங்கியுள்ளது. அதனால், மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அருகிலுள்ள கூரைக்குண்டு, ரோசல்பட்டி, சிவஞானபுரம், பாவாலி ஆகிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைப்பதற்கான கருத்துருவை அரசுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
    கஜேந்திரன்(உறுப்பினர்): நகராட்சி பகுதியில் பெரும்பாலனவை கிராமச் சாலைகள் போல் உள்ளன. அதனால் போக்குவரத்து நெருக்கடி, விபத்து ஆகியவை நடைபெற்று வருகிறது.

எனவே புறநகர் பகுதியில் விரிவாக்கம் செய்தது போல் உள்பகுதியிலும்  விரிவாக்கம் செய்யும் வகையில் தரமான சாலையாக மேம்படுத்த வேண்டும்.  இப்பகுதியில் ஒவ்வொரு வார்டிலும் நடைபெற்று வரும் தார்ச்சாலைகள், கட்டடங்கள் ஆகியவைகள் தரமில்லாமல் மேற்கொள்ளப்படுகிறது. அதை நகராட்சி பொறியாளர்கள் கண்காணிக்கவும், மழைக்காலம் தொடங்கியுள்ளதால் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பிளிச்சிங், சுண்ணாம்பு பவுடர்களை இருப்பில் வைத்து கொள்ள வேண்டும் என்றார். 

கண்ணன்(உறுப்பினர்): நகராட்சி பகுதியில் 4 சமுதாயக் கூடங்கள் தலா ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்டு தயார் நிலையிருப்பதால், அதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும், பொதுமக்களை நகராட்சி தலைவர் அடிக்கடி சந்தித்து குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்யவும் என்றார். }

மாரியப்பன்(துணைத்தலைவர்): நகராட்சி பள்ளிகளில் அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்வதில்லை. அதனால் இங்கு பணியாற்றும் சத்துணவு பொறுப்பாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு முட்டைகள் வழங்காமல், வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். அதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும். பழைய பேருந்து நிலையத்தில் கிழக்கு பகுதியில் பயணிகள் நிழற்குடை தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் ஒவ்வொரு நாளும் தரைக்குள் இறங்கி வருவதால்,  பயணிகளுக்கு ஆபத்து நேரிட வாய்ப்பிருப்பதால் உடனடியாக தரைமட்டமாக்க வேண்டும் என்றார். 

ஜெயக்குமார்(உறுப்பினர்): நகராட்சி பகுதியில் தாற்காலிகமாக துப்புரவு பணிகளை மகளிர் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். இதில் எதிர்பார்த்த அளவில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவில்லை.  அதனால், விரைவில் போதுமான துப்புரவு பணியாளர்களை நிரந்தரமாக நியமனம் செய்ய வேண்டும். அதற்கு முன்னதாக தாற்காலிக பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட வாகனம், தள்ளுவண்டிகள் உள்ளிட்ட உபகரணங்களையும் பெறவும் வேண்டும்.

இதற்கு நகராட்சி தலைவர் பதில் அளித்து பேசுகையில், நகராட்சி பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும். சாலைப்பணிகளை ஒவ்வொரு நாளும் தரமாக மேற்கொள்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும். தரமற்ற வேலை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல், நகராட்சி விரிவாக்கம் செய்யும் வகையில் குறிப்பிட்ட கிராம ஊராட்சிகளை இணைப்பது தொடர்பாக ஆட்சியருக்கும், அரசுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி உள்பகுதியிலும் சாலைகள் விரைவில் தரமானவையாக மேம்படுத்தபடும். இப்பகுதிகளில் உள்ள சமுதாயக் கூடங்கள் அடுத்தவாரம் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திறக்கப்படும்.

பழைய பேருந்து நிலையத்தில் கிழக்கு பகுதியில் உள்ள நிழற்குடை நகராட்சி நூற்றாண்டு நிதி மூலம் சீரமைக்கப்பட இருக்கிறது. நகராட்சி கட்டுபாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் ஆய்வு செய்து, தவறு செய்கிறவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தற்போது, துப்புரவு பணிகளை மகளிர் குழுவினர் மூலம் தாற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில்  மேற்கொள்ளபடுகிறது. இம்முறையை மாற்றி விரைவில் நிரந்தரமாக துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com