தூத்துக்குடி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக நடைபெறும் கடன் வழங்கும் முகாமை மகளிர் சுயஉதவிக் குழுவினர் பயன்படுத்திக் கொள்ள ஆட்சியர் ம. ரவிக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்களின் நிதி ஆதாரத்தை வலுப்படுத்தும் விதமாக வங்கிகளில் இருந்து நேரடிக்கடன் பெற்று தங்கள் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான சிறப்பு கடன் வழங்கும் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இந்ச முகாமில் வங்கியாளர்கள் கலந்து கொண்டு சுய உதவிக் குழுக்களின் தகுதிக்கு தக்கவாறு நேரடி கடன்களை அனுமதிக்க உள்ளனர்.
தூத்துக்குடி மற்றும் கருங்குளம் ஆகிய வட்டாரங்களில் அக்டோபர் 1 ஆம் தேதியும், வைகுண்டம், ஆழ்வார்திருநகரி, உடன்குடி ஆகிய வட்டாரங்களில் அக்டோபர் 6 ஆம் தேதியும், திருச்செந்தூர், சாத்தான்குளம் ஆகிய வட்டாரங்களில் 7 ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.
கோவில்பட்டி, கயத்தாறு ஆகிய வட்டாரங்களில் 8 ஆம் தேதியும், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர் ஆகிய வட்டாரங்களில் 9 ஆம் தேதியும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைத்து பிற்பகல் 1 மணிக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் தீர்மான புத்தகம், கடன் பேரேடு, தனிநபர் கடன் சேமிப்பு பதிவேடு, ரொக்கப்புத்தகம், பொதுப்பேரேடு, வங்கி சேமிப்புப்புத்தகம் ஆகியவற்றுடன் கலந்து கொண்டு நேரடி கடனுதவி பெற்று பயனடையவும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.