மாமன்னர் திருமலை நாயக்கர்-வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாடு மற்றும் அறக்கட்டளை பாதுகாப்புப் பேரவை சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூரில் திருமலை நாயக்கரின் 432-வது பிறந்தநாள் விழா பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர், தெற்குரதவீதியில் உள்ள திருமலை நாயக்கர் அரண்மனை முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பேரணியை, ஏழூர் தலைவர் ஆர்.குருசாமி நாயுடு தலைமையில், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தின் மாநிலத் தலைவர் மு.சங்கரவேலு, தொழிலதிபர் நவநீதன் ஆகியோர் முன்னிலையில் பேரவைத் தலைவர் எல்.வி.ராதாகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே சென்று மடவார்வளாகம் ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோவிலைச் சென்றடைந்தது. பேரணியில், பேரவையின் துணைத் தலைவர் ஏ.பிரேம் (எ) நவநீதகிருஷ்ணன், சிவகாசி மண்டல பொறுப்பாளர் எஸ்.எஸ்.முனியசாமி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பொறுப்பாளர் கே.சீனிவாசன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மடவார்வளாகத்தில் திருமலை நாயக்கரின் உருவச் சிலைக்கு பேரவையின் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் பொதுக்கூட்டம் ஒன்பது ஊர் கம்மவார் சங்கச் செயலாளர் டி.சங்கரசுப்பிரமணியம் தலைமையில் நடைபெர்றது. ஓய்வு பெற்ற ஆசிரியர் எம்.ராஜூ முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் கே.அய்யலுசாமி வரவேற்றார். மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு நாயுடு மகாஜன சங்கத்தின் டாக்டர் ஆர்.சன்னாசி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
எஸ்.அம்மாப்பட்டியைச் சேர்ந்த கே.கோவிந்தசாமி, கே.நாராயணசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கம்மா, கவரா, பலிஜா, கம்பளம், வெலமா இனத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேரவையின் தலைவர் எல்.வி.ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.