ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திருகல்யாண உற்சவம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை
Published on
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பதியான பகவான் ஸ்ரீவடபத்ரசாயி என்கிற திருநாமத்துடன் சயனத் திருக்கோலத்தில் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்ய தேசம். இத்தலத்தில் ஸ்ரீபெரியாழ்வாரின் திருமகளாய், பூமிப் பிராட்டியாய் ஸ்ரீஆண்டாள் அவதரித்தார். அவர் தம் தந்தையைப் போலவே வடபெருங்கோவிலுடையானிடம் ஆழ்ந்த பக்தியுடையவராய் திகழ்ந்தார். திருப்பாவை என்னும் பாமாலையும், பூமாலையும் சூடிக் கொடுத்தார். ஒரு நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்கள் கொண்ட நாச்சியார் திருமொழியையும் அருளிச்செய்தார். மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன் என உறுதிகொண்டார்.

ஸ்ரீஆண்டாளின் பக்தியைக் கண்ட திருவரங்கத்து எம்பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி பங்குனி உத்திர நன்னாளில் ஸ்ரீஆண்டாளை திருமணம் செய்தருளி இன்றும் இச்சன்னதியில் ஸ்ரீஆண்டாளுடனும், ஸ்ரீகெருடாழ்வாருடனும், ஸ்ரீரெங்கமன்னார் என்கிற திருநாமத்தோடு சம ஆசனத்தில் திருக்கல்யாணக் கோலத்தில் சேவை சாதிக்கிறார்.

ஆண்டுதோறும் நடைபெறும் தாயார் ஸ்ரீஆண்டாளின் திருக்கல்யாண மகோத்ஸவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விஜயபாஸ்கரபட்டர் கொடியேற்றினார்.

12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தின் 9-ம் திருநாளான ஏப்ரல் 3-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. உற்சவ நாட்களில் சுவாமிகள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் வீதி உல நடைபெறும். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கே.ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com