ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூலை 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 9-ம் தேதி சனிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெற்றது. பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூர்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது.