அருந்ததியர் தாக்கப்பட்ட சம்பவம்: தேசிய ஆதிதிராவிடர் ஆணைய அதிகாரிகள் நேரில் விசாரணை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு தீ வைத்து,


ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகளுக்கு தீ வைத்து, அவர்களை தாக்கி காயப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து சம்பவ இடத்தை புதன்கிழமை தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் மூத்த விசாரணை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கே.தொட்டியபட்டியில் இரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடையே பொது தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் நீண்டகாலமாக முன்விரோதம் மற்றும் பகை இருந்து வருகிறது. கொத்தங்குளம் ஊராட்சி சார்பில் இருதரப்பும் பயன் பெறும் வகையில் இங்குள்ள மயானக் கரையின் அருகே தண்ணீர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.
சுமார் 35 குடும்பத்தினர் உள்ள அருந்ததியில் காலனியில் குடியிருப்போர் 2 மணி நேரமும், சுமார் 400 குடும்பத்தினர் உள்ள மற்றொரு தரப்பினர் 4 மணி நேரமும் இங்கு தண்ணீர் பிடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் 30-ம் தேதி காலனி குடியிருப்பைச் சேர்ந்த அ.கருப்பசாமி (28) என்பவர் குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் இவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர் காயம் அடைந்தார். இது குறித்து அவர் அவர் சார்ந்துள்ள சமுதாயத்தினரிடம் கூறவே அவர்கள் அருந்ததியர் காலனிக்குள் சென்று அங்கிருந்தவர்களை சாதியைக் கூறி இழிவாகப் பேசி, கல், கம்பால் அடித்து வீடுகளுக்கு தீவைத்துள்ளனர். இது தொடர்பாக கருப்பசாமி வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் ச.முருகன், சி.அழகர் மற்றும் பலர் மீது புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து 15 பெண்கள் உள்ளிட்ட 39 பேரைக் கைது செய்தனர்.
அருந்ததிய மக்கள் சார்பில் 17 பேர் காயம் அடைந்ததாகவும், 13 வீடுகள் தீ வைப்புச் சம்பவத்தால் சேதம் அடைந்ததாயும், 7 இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசம் அடைந்ததாயும் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது பாண்டி, பாண்டியன், லட்சுமணன் ஆகிய மூவர் மதுரை அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து விசாரணை செய்ய தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் மூத்த விசாரணை அதிகாரிகள் ஏ.இனியன், எஸ்.லிஸ்டர் ஆகியோர் வருகை புரிந்தனர். இவர்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
குழுவினர் விருதுநகர் சென்று மாவட்டக் காவல் கண்ணிப்பாளரைச் சந்தித்து விட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...