/

ஒப்பந்ததாருக்கான காசோலையை போலியாக கையொப்பமிட்டு மாற்றிய வழக்கு:  இருவருக்கு 5 ஆண்டு சிறை

சாலைப் பணியை முடித்த ஒப்பந்ததாரருக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போட்ட அரசு காசோலையை,

News image
Updated On :12 ஜனவரி 2017, 4:32 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: சாலைப் பணியை முடித்த ஒப்பந்ததாரருக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் போட்ட அரசு காசோலையை, போலியாக கையொப்பமிட்டு மாற்றிய வழக்கில் ஓய்வு பெற்ற பெண் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக உதவியாளருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.65 ஆயிரம் அபராதம் விதித்தும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியைச் சேர்ந்தவர் ராஜாமணி (57). அரசு ஒப்பந்ததாரர். இவர் 1994-ம் ஆண்டு காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடம்பன்குளம்-தாரனேந்தல் சாலையை ஒப்பந்தம் எடுத்து போட்டுள்ளார். இதற்கான பில் தொகை ரூ.85,983-யை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பித்துள்ளார். பல முறை அலைந்தும் இந்த காசோலை வரவில்லையாம். மேலும் தீவிரமாக விசாரித்தபோது, காசோலை போடப்பட்டு அது வங்கியில் பணமாக்கிப்பட்டிருந்தது தெரியவந்தது. 

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல் துறையில் ராஜாமணி புகார் செய்தார்.

ஊழல் தடுப்பு கண்காணிப்பு காவல் துறையினர் 1999-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த வேலம்மாள், உதவியாளர் தனசேகரன், அலுவலக உதவியாளர் சௌந்தரபாண்டியன் ஆகியோர் காசோலையில் ராஜாமணியின் கையொப்பத்தை போலியாக போட்டு பணம் ரூ.85,983-யை மாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியில் நீதிமன்றத்தில் மூவர் மீதும் வழக்குத் தொடர்ந்தனர். 

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.வசந்தி, ஓய்வு பெற்ற உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள், அலுவலக உதவியாளர் சௌந்தரபாண்டியன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.65 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்புக் கூறினார். இந்த வழக்கில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.