/

தேசிய நல்லாசிரியர் விருது பரிந்துரையில் முறைகேடு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்கான ஆசிரியரை

News image
Updated On :11 மார்ச் 2017, 2:02 pm

கோ.ஜெயக்குமார்

ஆண்டுதோறும் மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்கான ஆசிரியரை மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் பரிந்துரைப்பதில் விருதுநகர் மாவட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருதிற்கு மாவட்டத்திற்கு ஒரு சிறந்த ஆசிரியரை தேர்ந்தெடுத்து அனுப்ப மாநில கல்வித்துறை இணை இயக்குநர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றிக்கை அனுப்பியிருந்தார்.

இதன்படி தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் விருதுக்கு தகுதியான ஒருவரைத் தேர்வு செய்ய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்படும். அக் குழுவில் மாவட்ட ஆசிரியப் பயிற்சி நிறுவன மூத்த விரிவுரையாளர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் இருப்பார்கள்.

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இக் குழுவில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் லட்சுமணன் உள்ளிட்ட மூவர் இடம் பெற்றிருந்தனர். இக் குழுவினர் வந்திருந்த விண்ணப்பத்தில் இருவரைத் தேர்ந்தெடுத்து சென்னைக்கு அனுப்ப வேண்டும். இந்த ஆய்வில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன  மூத்த விரிவுரையாளர் மற்றும் மூத்த வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆகியோர் மாவட்டத்திலேயே மிகச் சிறப்பாக பணிபுரியும் குறிப்பிட்ட ஒரு ஆசிரியர் பெயரை பரிந்துரைத்துள்ளார்கள்.

ஆனால் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லட்சுமணன் தன்னிச்சையாக இரு விண்ணப்பங்களுக்கு கையொப்பமிட்டுவிட்டு சென்றுவிட்டார்.  அப்போதைய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் கடந்த 2016 மார்ச் இறுதி நாள் ஓய்வு பெற வேண்டியவர். அன்றைய தினம் இச் சம்பவம் நடைபெற்றது.

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளரிடம் நான் நிம்தியாக ஓய்வு பெற வேண்டும். தயவு செய்து எனக்காக லட்சுமணன் போட்ட இரு விண்ணப்பத்தில் கையொப்பமிடுங்கள் என்று மன்றாடி கேட்டுள்ளார்.

எந்த வகையிலும் தகுதியில்லாத நபர்களுக்கு விருதுக்கு பரிந்துரை செய்ய கையொப்பமிட மனமில்லை. உங்களது பதவி மற்றும் வயது மூப்பிற்காக நாங்கள் கையொப்பமிடுகிறோம் என்று சொல்லி இருவரும் கையொப்பமிட்டுள்ளார்கள். பின்னர் இது சென்னைக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரால் அனுப்பப்பட்டுள்ளது.

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லட்சுமணனின் முழுக் கட்டுப்பாட்டில்தான்  தற்போது மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கான குழுவில் வழக்கம் போல் லட்சுமணன் மற்றும் தனக்கு வேண்டிய இரு பணி மூப்பு இல்லாத நபர்களை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் கூறி நியமித்துள்ளார். இக் குழு வந்திருந்த விண்ணப்பங்களை ஒரு பெயருக்காக ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு சென்றது. 

2017 மார்ச் முதல் வாரத்தில் தகுதியான ஒரு நபரை சென்னைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். தற்போது லட்சுமணன் கூறியுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, 2017 ஏப்ரல் மாதம் ஓய்வு பெறவுள்ள மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் சென்னைக்கு பரிந்துரைத்துள்ளார்.

இந்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வேலை செய்யும் பள்ளியை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் உமா, அப்போதைய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் முனியசாமியுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டபோது, பள்ளி நடைமுறையில் இல்லை. மிகவும் மோசம் என்று கூறி அங்கு பணிபுரியும் தற்போது தேசிய நல்லாசிரியர் விருதுக்கு மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரால் பரிந்துரைக்கப்பட்ட தலைமை ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க உத்தரவிட்டார்.

அதன்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டு விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த தலைமை ஆசிரியர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது உடன் பணிபுரியும் சக ஆசிரியர்கள் மற்றும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கே செல்லாத ஒரு தலைமை ஆசிரியருக்கு தேசிய விருது வழங்குவது எந்த வகையில் நியாயம் என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதே நபரைத் தான் கடந்த ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு லட்சுமணன் சென்னைக்கு பரிந்துரைத்தார். ஆனால் அவரது விண்ணப்பம் அங்கு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், சனிக்கிழமை தமிழக பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், விருதுநகர் மாவட்டத்தில் தேசிய நல்லாசிரியர் விருதுக்காக பெறப்பட்ட அனைத்து விண்ணப்பங்களையும், சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகத்திற்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரை எடுத்துவரச் சொல்லி, அவர் நேரிடையாக கருத்துருவை ஆய்வு மேற்கொண்டு தகுதியான நபரை தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.