/

ஊராட்சி ஒன்றியப் பள்ளியை மேம்படுத்த ஆசிரியர்கள் கிராம மக்களின் கூட்டு முயற்சி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியை மேம்படுத்த ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் கூட்டு

News image
Updated On :2 மே 2017, 3:19 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் ஊராட்சி ஒன்றியப் பள்ளியை மேம்படுத்த ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் கூட்டு முயற்சி எடுத்து, முன்னோடியாக ஆங்கில வழியில் படிக்கும் தங்கள் பிள்ளைகளை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் பெற்றோர் சேர்த்து சாதனைப் படைத்துள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில், சின்ன அத்திகுளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுமார் 87 ஆண்டுகளா செயல்பட்டு வருகிறது. இங்கு தலைமை ஆசிரியையாக வீ.சரளாவும், கணித பட்டதாரி ஆசிரியையாக கனகலட்சுமியும் உள்ளார்கள். கிராமப் புற பள்ளியில் மாணவர் நகர் பகுதிக்கு படிக்கச் செல்வதால், பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைந்து வந்ததது. 

இப் பள்ளிக்கு தலைமை ஆசிரியையாக பொறுப்பேற்ற சரளா மற்றும் பட்டதாரி ஆசிரியை கனகலட்சுமி ஆகியோர் கூட்டு முயற்சி எடுத்து மாணவர்களின் கல்வித் தரத்தை பல்வேறு வகையில் உயர்த்தியுள்ளனர்.

கிராமத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்துப் பேசி பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தள்ளார்கள். இதனையடுத்து கிராமத்தில் ஊர் கூட்டம் போட்டுள்ளார்கள். முக்கிய பிரமுகர்கள் நம் கிராமத்துப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்காவிட்டால் வருங்காலத்தில் பள்ளி மூடப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று எடுத்துக் கூறியுள்ளார்கள்.

இதற்கு முன்னோடியாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக உள்ள ஒருவரும், நீதிமன்றத்தில் சுருக்கெழுத்தராக உள்ள ஒருவரும் ஆங்கில வழியில் முறையே 6 மற்றும் 5-ம் வகுப்பு படிக்கும் தங்களது பிள்ளைகளை அங்கிருந்து மாற்றுச் சான்றிதழ் வாங்கி கிராமத்துப் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி கற்க தங்கள் கிராமப் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தனர். இதனையடுத்து கிராமத்தில் 8-ம் வகுப்பு வரை அனைவரும் இங்கேயே படிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டு பள்ளிகள் ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையிலும், மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஏப்ரல்29-ம் தேதி கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் ஆண்டு விழா நடத்தி சாதனை படைத்துள்ளார்கள். ஆண்டு விழாவிற்கு இதே பள்ளியில் படித்த பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவர் எஸ்.எம்.ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் வருகை புரிந்து சிறப்பு செய்துள்ளார்கள்.

இது குறித்து தலைமை ஆசிரியை சரளா மற்றும் பட்டதாரி ஆசிரியை கனகலட்சுமி ஆகியோர் கூறியதாவது: ஸ்ரீவில்லிபுத்தூர் சரக உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து இந்த முயற்சியை எடுத்துள்ளோம். கிராம மக்களிடம் தமிழ் வழியில் கல்வி கற்றாலும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. எனவே வரும் 2017-18-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகமாகும். மே 10-ம் தேதி முதல் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று இப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க முயற்சி எடுக்க உள்ளோம் என்றார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.