/

30 அர்ச்சகர்களுக்கு விலையில்லா கால்நடைகள்: அமைச்சர் கே.டி.ஆர். வழங்கினார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 30 அர்ச்சகர்களுக்கு விலையில்லா

News image
Updated On :13 மே 2017, 12:04 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 30 அர்ச்சகர்களுக்கு விலையில்லா கால்நடைகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு உபயமாக வரப்பெற்ற கால்நடைகளை, கோயில் உபயோகத்திற்கு போக உபரியாக உள்ள கால்நடைகளை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிதிவசதியில்லாத ஒரு கால பூஜை நடைபெறும் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்தி வந்தார். இத் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு 27 கால்நடைகளும், ராஜபாளையம் மாயூரநாதசுவாமி கோயிலுக்கு 3 கால்நடைகளும் ஆக மொத்தம் 30 கால்நடைகள் உபயமாகப் பெறப்பட்டது. 

இந்த கால்நடைகளை அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு வழங்கி தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒவ்வொரு துறைக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறப்பு கவனம் செலுத்தி ஏழைகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வந்தார். அறிநிலையத் துறையில் அவரது உன்னதத் திட்டம் அன்னதான திட்டம். இத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 23 கோயில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2016-17-ம் ஆண்டில் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் பக்தர்களுக்கு 8.3.17-ம் தேதி முதல்  அன்னதானம் வழங்கும் திட்டம் விரிவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது வழங்கப்பட்டுள்ள கால்நடையின் மூலம் வரும் பாலினை திருகோயில்களுக்கு பூஜைக்குப் பயன்படுத்துவதற்காக இந்த பசுகள் வழங்கப்பட்டுள்ளது. நிதிவசதியில்லாத நலிவடைந்த கோயில்களில் தினசரி பூஜைகள் செய்ய தமிழக முதல்வர் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பங்களிப்புத் தொகை ரூ.10 ஆயிரம் செலுத்தினால், அரசு ரூ.90 ஆயிரம் வழங்கி வங்கியில் ரூ.1 லட்சம் செலுத்தப்பட்டு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டித் தொகையையை எடுத்து தினசரி பூஜைக்குப் பயன்படுத்தும் திட்டம் நடைமுறையில் உள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது 86 கிராம பூசாரிகள், 36 பட்டாச்சாரியார்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 8 பேருக்கு ஓதுவார் பயிற்சி, 9 பேருக்கு பரிசாரகர் சுயம்பாகிப் பயிற்சி, 344 அர்ச்கர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, 90 கோயில் பணியாளர்களுக்கு மனிதநேயப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள 15 கோயில்கள், ஆதிதிராவிடர் வாழும் பகுதியில் உள்ள 18 கோயில்களுக்கு திருப்பணிகள் செய்ய தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.

விழாவில் ஆண்டாள் கோயில் தக்கார் கி.ரவிச்சந்திரன், தென்காசி மக்களவை உறுப்பினர் வசந்தி முருகேசன், விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, உதவி ஆணையர் ஹரிஹரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.