திருச்சி அரசு மருத்துவமனையில் தில்லி மாநாட்டில் பங்கேற்ற 73 பேருக்கு சிகிச்சை

புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 73 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் தில்லி மாநாட்டில் பங்கேற்ற 73 பேருக்கு சிகிச்சை

திருச்சி: புதுதில்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 73 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.

இவர்கள் அனைவரிடமும் சளி, உமிழ்நீா், ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு தில்லி, நிஜாமுதீன் பகுதியில், தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மர்காஸ் பங்களேவாலி மசூதி உள்ளது. இந்த மசூதியில் மார்ச் 13-இல் இருந்து 15- ஆம் தேதி வரை மத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் 8 ஆயிரத்துக்கும் மேற்படடோர் பங்கேற்றனர்.

இந்த மத போதனைக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுக்கு கரோனா தொற்று அறிகுறி இருப்பது தெரியவந்ததையடுத்து நாடு முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பட்டியலை தமிழக உளவுத்துறை தயாரித்து வருகிறது. மேலும், தாமாக முன்வந்து பரிசோதனை செய்ய வேண்டுமென மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு தமிழக சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனையில் தாமாக முன்வந்து சிகிச்சைக்கு சேர்ந்து வருகின்றனர். இதன்படி, திருச்சி அரசு மருத்துவமனையில் 73 பேர் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். இங்குள்ள கரோனோ வார்டு பிரிவில், ஏற்கெனவே 8 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்ர 73 பேர் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் அனைவரிடமும் சளி, உமிழ்நீர், ரத்த மாதிரிகள் எடுத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. திருச்சி அரசு மருத்துவமனையிலே கரோனா தொற்று பரிசோதனை ஆய்வுக் கூடம் உள்ளதால், திருச்சியிலேயே மாதிரிகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அனைவருக்குமான முடிவுகள் புதன்கிழமை இரவுக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நோய் தொற்று உள்ளதாக வரும் முடிவுகள் குறித்து மீண்டும் ஆய்வு செய்வதற்காக இரண்டாவது முறையாக மாதிரிகள் எடுத்து திருவாரூரில் உள்ள வைரஸ் ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்படும். இந்த ஆய்வகத்திலிருந்து முடிவு உறுதி செய்யப்பட்டால்தான் கரோனா தொற்று உறுதி என அறிவிக்க முடியும் என திருச்சி அரசு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com