கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள்

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 16 -ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி முன்பாக அமைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் படங்கள் முன் அஞ்சலி செலுத்திய பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர்.
பள்ளி முன்பாக அமைக்கப்பட்டுள்ள இறந்த குழந்தைகளின் படங்கள் முன் அஞ்சலி செலுத்திய பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர்.


கும்பகோணம்: கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 16 -ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டு வருகிறது.

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் கடந்த 2004 -ஆம் ஆண்டு ஜூலை 16 -ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இதில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் காயமடைந்தனர்.

ஆண்டுதோறும் இறந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன்படி 16 -ஆம் ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் படங்கள் முன் திண்பண்டங்களை செய்து வைத்து அகல் விளக்கு, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன் இறந்த 94 குழந்தைகளின் படங்கள் வைக்கப்பட்டது. அங்கு பெற்றோர்கள், தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். இதேபோல, இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

கும்பகோணம் பாலக்கரையில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய பெற்றோர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர்.

ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பு: கும்பகோணத்தில் கரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளியிலிருந்து பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்துக்குப் பெற்றோர்கள் ஊர்வலமாகச் செல்லும் நிகழ்ச்சிக்கும், மகாமகக் குளத்தில் மாலையில் இறந்த குழந்தைகளுக்காக மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கும் காவல் துறையினர் அனுமதி மறுத்தனர். 

பள்ளியின் முன் அஞ்சலி செலுத்த வருவபவர்கள் சமூக இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு உடனடியாக அங்கிருந்து சென்றுவிட வேண்டும் எனக் காவல் துறையினர் கூறி வருகின்றனர். 

அரசியல் கட்சியினர் அஞ்சலி: மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ. ராமலிங்கம், கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராம. ராமநாதன் உள்ளிட்டோர் பள்ளி முன் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com