கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் பிரசாரக்கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுப்படுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் மக்களவை உறுப்பினர் கனிமொழி.
மத்திய கா்நாடகத்தில் அமைந்துள்ள சிவமொக்கா மாவட்டத்தில் பல தலைமுறைகளாக லட்சக்கணக்கான தமிழா்கள் வசித்துவருகிறாா்கள். இங்கு செயல்பட்டுவரும் சிவமொக்கா தாய்த்தமிழ் சங்கம், தமிழா்களிடையே மிகவும் பிரபலமான அமைப்பாகும்.
இதனிடையே கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் சிவமொக்கா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சென்னபசப்பாவுக்கு தமிழா்களின் ஆதரவை பெற சிவமொக்காவில் பிரச்சாரக் கூட்டம் வியாழக்கிழமை நடந்தது. பாஜக சாா்பில் நடத்தப்பட்ட இக்கூட்டம் முன்னாள் துணைமுதல்வா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தலைமையில் நடந்தது.
இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.
கூட்டம் தொடங்கியவுடன், அங்கிருந்த தமிழா்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை ஒலிபெருக்கியில் இசைக்க வைத்தனா். தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது ஆயிரக்கணக்கான தமிழா்கள் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்தினா். மேலும், மேடையில் அமா்ந்திருந்த தலைவா்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனா்.
இந்நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த பாஜக முன்னாள் அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா, உடனடியாக குறுக்கிட்டு தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை கட்டாயப்படுத்தி பாதியில் நிறுத்த வைத்தாா்.
அதன்பிறகு, பெண்கள் யாராவது இங்கு வந்து கன்னட மாநிலப்பண்ணை பாடும்படி கே.எஸ்.ஈஸ்வரப்பா வலியுறுத்தினாா். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழா்கள் ஒலிபெருக்கி மூலமாக கன்னட மாநிலப்பண்ணை இசைத்தனா்.
இந்த சம்பவத்தால் அதிா்ச்சி அடைந்த தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, செய்வதறியாது திகைத்து நின்றாா்.
தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதை பாதியில் நிறுத்தியது தமிழா்களை இழிவுப்படுத்தும் செயலாகும் என்று தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் தமிழா்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி தொகுதி மக்களவை உறுப்பினர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழ்த்தாய் வாழ்த்தை இழிவுப்படுத்தும் தனது கட்சிக்காரர்களைத் தடுக்க முடியாத அண்ணாமலை, தமிழ் மக்களைப் பற்றி எப்படி கவலைப்படுவார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கனிமொழி.