தொடரும் டீசல் விலையேற்றம்: மாதம் ரூ.2,000 கோடி இழப்பை சந்திக்கும் லாரி தொழில்!

கரோனா பொது முடக்கம் மற்றும் தொடரும் டீசல் விலையேற்றத்தால் தங்களுக்கு மாதம் ரூ. 2,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மாநில லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தொடரும் டீசல் விலையேற்றம்: மாதம் ரூ.2,000 கோடி இழப்பை சந்திக்கும் லாரி தொழில்!

கரோனா பொது முடக்கம் மற்றும் தொடரும் டீசல் விலையேற்றத்தால் தங்களுக்கு மாதம் ரூ. 2,000 கோடி இழப்பு ஏற்படுவதாக மாநில லாரி உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு  மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம், தென்னிந்திய எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர் சங்கம், டிரெய்லர் லாரி உரிமையாளர் சங்கம் உள்ளிட்டவை செயல்படுகின்றன. இந்த சங்கங்கள் மாநிலம் முழுவதும் 135 கிளைச் சங்கங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் 2 லட்சம் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 
தற்போது ஐந்து லட்சம் லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், கோவை, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துதான் வெளி மாநிலங்களுக்கு தினசரி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படுகின்றன.

கரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலை பரவலால் ஏப்ரல் மாத இறுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் அத்தியாவசியப் பொருள்கள் பயன்பாட்டுக்காக சரக்குப் போக்குவரத்துக்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்கவில்லை. ஆனால், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், இதர தனியார் நிறுவனங்கள் சரிவர இயங்காததால் லாரிகளின் முழுமையான இயக்கம் தடைபட்டுள்ளது. 
லாரித் தொழிலை பொது முடக்கம் கடுமையாக பாதித்துள்ள நிலையில்,  சுங்கச்சாவடிக் கட்டண உயர்வு, டீசல் விலையேற்றம் போன்றவை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி வருன்றன. இதனால் கிடைக்கும் வருவாயில் பாதியை இழக்க வேண்டிய நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர். 

தற்போதைய நிலையில் 40 சதவீத லாரிகளே இயக்கப்படுகின்றன. வழக்கமாக ஒரு லாரி உரிமையாளருக்கு மாதம் கிடைக்க வேண்டிய ரூ. 50 ஆயிரம் வருவாயில், பொது முடக்கத்தால் அனைத்து செலவினங்களும் போக ரூ. 10 ஆயிரம் மட்டுமே கிடைப்பதாகவும், மாதந்தோறும் ரூ. 1,500 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரையில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் லாரி உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. 

ஆர். வாங்கிலி 
ஆர். வாங்கிலி 

இதுதொடர்பாக நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக லாரி தொழில் விளங்குகிறது. இங்குள்ள கனரக வாகனங்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் உள்பட அனைத்து விதமான பொருள்களைக் கொண்டு சேர்த்து வருகின்றன. 

இத்தொழிலை நம்பி, லாரி பாடி கட்டும் தொழில், பழுது நீக்கும் பட்டறைகள், பெயின்ட் பட்டறைகள், எலக்ட்ரீஷியன், எலக்ட்ரானிக் தொழில், லேத், கண்ணாடிக் கடைகள், உதிரி பாகம் விற்கும் கடைகள், ஆயில் விற்பனைக் கடைகள் என 3  ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

இவ்வாறு ஆயிரக்கணக்கானோருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கிய லாரி தொழிலானது தற்போது மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நாள்தோறும் உயர்ந்துவரும் டீசல் விலையேற்றம், வருடந்தோறும் தவறாது உயரும் சுங்கக் கட்டணம், மூன்றாம் நபர் காப்பீடு, உதிரி பாகங்களின் விலை உயர்வு போன்றவற்றால் லாரி இயக்கும் தொழில் கடுமையாக  பாதிக்கப்பட்டு வருகிறது. 

பொது முடக்கத்தின்போது கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் விலை பூஜ்ஜியத்திற்கும் கீழ் சென்றதால்  எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையைக் குறைக்கும் என லாரி உரிமையாளர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே உள்ளது. நாடு முழுவதுமுள்ள 563 சுங்கச் சாவடிகளில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 5 - 15  % அளவுக்கு கட்டணம் உயர்த்தப்படுகிறது. இவற்றில் காலாவதியான சுங்கச் சாவடிகளும் அடங்கும்.  
இந்த சுங்கச் சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கொரு முறை மொத்த சுங்கக் கட்டணத்தையும் லாரி உரிமையாளர்களிடம் வசூலித்தால் அதனைச் செலுத்தத் தயாராக உள்ளோம். 

தற்போது டீசல் விலை லிட்டருக்கு ரூ. 94.17 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு  மார்ச் 23-ஆம் தேதி ரூ. 66.39- ஆக இருந்தது. ஓராண்டில் மட்டும் டீசல் விலை சுமார் ரூ. 28 உயர்ந்துள்ளது என்றார்.  

எம்.ஆர்.குமாரசாமி
எம்.ஆர்.குமாரசாமி

மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் - தமிழ்நாடு தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியதாவது: 

கரோனா பொது முடக்கத்தில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் ஓரளவு இயங்குகின்றன. எனினும் இதுவரை 40 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 60 சதவீத லாரிகள் வேலையின்றி நிறுத்தப்பட்டுள்ளன. 
ஒரு மாதத்தில் லாரி உரிமையாளர்களுக்கு அனைத்துச் செலவுகளும் போக, லாரிக்கு ரூ. 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்; தற்போது ரூ. 10 ஆயிரம் லாபம் கிடைப்பதே அரிதாக உள்ளது. டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால், அதிலும் சுமார் ரூ. 8,000 வரை கூடுதல் இழப்பு ஏற்படுகிறது. இதன் காரணமாக, மாதந்தோறும் ரூ. 2,000 கோடி வரையில் இழப்பை லாரித் தொழில் சந்தித்து வருகிறது. 

மத்திய, மாநில அரசுகளிடம் டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துமாறு தெரிவித்துள்ளோம். பொது முடக்கம், டீசல் விலையேற்றம், சுங்கக் கட்டணம் போன்ற நெருக்கடிகளுக்கு சரக்குப் போக்குவரத்துத் தொழில் ஆளாகியுள்ளது. 
டீசலை 28 சதவீத ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் மட்டுமே, விலைக் குறைப்பு சாத்தியமாகும். தற்போது அரசின் கணக்கில் ஒரு லிட்டர் விலை ரூ. 33 என்றால் நாம் ரூ. 94-க்கு வாங்குகிறோம். இடைப்பட்ட 61 ரூபாயை வரியாகச் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இந்நிலை மாற வேண்டும்.

ஆலைகள் முழுமையாக இயங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பும்போது மட்டுமே லாரி இயக்கும் தொழில் பழைய நிலையை அடையும். அதுவரை லாரி தொழிலைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள்தான் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com