400 பார்வையற்றோருக்கு பிரெய்லி முறை கல்வி: தேசிய விருது பெற்ற நாமக்கல் மாற்றுத்திறனாளி

தான் கற்ற கல்வியையும், தெரிந்த பயிற்சியையும் தன்னைப் போன்றவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் கையால் தேசிய விருது பெற்று சாதித்துள்ளார் டி.பிரபாகரன்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தேசிய விருது பெறும் டி.பிரபாகரன்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தேசிய விருது பெறும் டி.பிரபாகரன்

பார்வை குறைபாடு, காது கேளாமை போன்ற குறைகள் இருப்பினும், தன்னால் பிறருக்கு உதவ வேண்டும் என சேவை மனப்பான்மையுடன் தான் கற்ற கல்வியையும், தெரிந்த பயிற்சியையும் தன்னைப் போன்றவர்களுக்கு வழங்கி குடியரசுத் தலைவர் கையால் தேசிய விருது பெற்று சாதித்துள்ளார் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் கீழப் பேட்டப்பாளையத்தைச் சேர்ந்த டி.பிரபாகரன் (38).

<strong>தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறும் பிரபாகரன்.</strong>
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெறும் பிரபாகரன்.

சிறு வயது முதலே இரு கண்களிலும் பார்வை குறைபாடு இருந்தது. காதும் பெரிய அளவில் கேட்காது. அப்பா விவசாயக் கூலித் தொழிலாளி. படிப்பு மீது இருந்த ஆர்வத்தால் மேல்நிலை கல்விக்கு பின் எம்.ஏ.(சோஷியாலஜி) படித்தேன். பின்னர் திருச்சியில் உள்ள ஹோலிகிராஸ் சர்வீஸ் சொசைட்டி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன். அங்குள்ள பேராசிரியர் பிரபாகரன் இம்மானுவேல் எனக்கு உறுதுணையாக இருந்தார். அவர் பல்வேறு பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் என்னை அனுப்பி வைத்து பார்வையற்ற, காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய  மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொடுத்தார். நானும் சேவை மனப்பான்மையுடன் என்னால் முடிந்த பயிற்சியை அவர்களுக்கு வழங்கினேன். 

<strong>நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிடம் வாழ்த்து பெறும் பிரபாகரன். உடன் மனைவி சசிகலா. </strong>
நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிடம் வாழ்த்து பெறும் பிரபாகரன். உடன் மனைவி சசிகலா. 

மேலும் எனது மனைவி சசிகலாவும் உறுதுணையாக இருந்தார். இதுவரையில்   பார்வை குறைபாடுடைய 400-க்கும் மேற்பட்டோர் பிரெய்லி முறையில் உயர் கல்வியை அடைந்துள்ளனர் என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய விருதாக கருதுகிறேன். பேராசிரியர் பிரபாகரன் இம்மானுவேல் தான் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் தேசிய விருது எனக்கு கிடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதற்கான இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவர் போராடினார். அந்த வகையில் 2021 டிசம்பர் 3-ஆம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் தேசிய விருது வழங்கி பாராட்டினார். மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் ஆகியோரும் என்னை அழைத்து பாராட்டினர்.

மாற்றுத் திறனாளி சாதனையாளர்களுக்கான சிறப்பு கையேட்டில் மத்திய அரசு எனது சேவையைப் பாராட்டி கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், 100 சதவீதம் பார்வைத்திறன் குறைபாடு  மற்றும் பிறப்பில் இருந்து 65 சதவீத செவித்திறன் குறைபாடு கொண்டவர் பிரபாகரன். இவ்வாறு பல குறைபாடுகள் இருந்தபோதிலும், எம்.ஏ. (சமூகவியல்) படித்து, தற்போது சமூக அடிப்படையில் மறுவாழ்வு ஊழியராக பணிபுரிகிறார். தமிழகத்தில் உள்ள மாநில கற்றல் மையத்தில். அவர் பெற்றோருக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் சைகை மொழியில் பயிற்சி அளிப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் உரிமைகளை வழங்குவதற்கும் நேரடியாக பயிற்சி அளித்து வருகிறார். 

ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சியின் சிறந்த தொழிலாளி என்ற விருதையும் பெற்றுள்ளார். அவரைப் பற்றிய யூ- டியூப் விடியோவை திருச்சி ஐஐஎம் மாணவர்கள் தயாரித்துள்ளனர். மாநில தேர்தல் ஆணையத்தின் ஒரு பகுதியாக தேர்தல் செயல்பாட்டில் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதில் பங்கேற்றார். மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். பிரபாகரனின் எழுச்சியூட்டும் சாதனைகளை அங்கீகரிப்பதற்காகவே அவருக்கு பலவித குறைபாடுகள் இருப்பினும், அவருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான ரோல் மாடல் என்ற பிரிவின் கீழ் தேசிய விருது வழங்குகிறோம் எனத் தெரிவித்துள்ளது. இதுவும் எனக்கான ஒரு கெளரவமாகும். மாற்றுத் திறனாளிகள் யாரும் அங்கங்கள் பழுதாகிவிட்டதே என முடங்கி விடக்கூடாது. முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் என்றார்.

<strong>மத்திய அரசின் சிறப்பு கையேட்டில் வெளியாகி உள்ள பாராட்டு கட்டுரை</strong>
மத்திய அரசின் சிறப்பு கையேட்டில் வெளியாகி உள்ள பாராட்டு கட்டுரை

தேசிய விருது பெற்ற பிரபாகரன் மனைவி சசிகலா கூறியதாவது, 

நானும் ஓர் மாற்றுத் திறனாளி தான். எனது கணவருக்கு குறைபாடுகள் இருந்தபோதும் அவரை மாற்றுத் திறனாளி என யாரும் கூறிவிட முடியாது அவ்வளவு சுறுசுறுப்பானவர். குடியரசுத் தலைவர் தேசிய விருது வழங்கிய நிகழ்ச்சிக்கு ரயில் மூலம் நானும், அவரும் சென்றோம். அனைத்து ஏற்பாடுகளையும் திவ்யான்ஜான் என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பிரிவு அலுவலகம் செய்து கொடுத்தது. குடியரசுத் தலைவர் விருது வழங்கியபோது கழுத்தில் அணிவிக்கும் பதக்கமானது, பதக்கப்பட்டியலில் இல்லாத சான்றிதழ் மட்டும் பெறும் நபருக்கு தவறுதலாகச் சென்று விட்டது. இதனால் சான்றிதழ் மட்டுமே எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. 

இவரைப் போல் குஜராத், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இருவருக்கும் மாறிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக மத்திய அரசுக்கு மின்னஞ்சல் மூலமாகக் கடிதம் அனுப்பி வருகிறேன். விரைவில் புதிய பதக்கத்தை அனுப்பி வைக்கிறோம் என அங்குள்ள துறை செயலாளர் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் வாயிலாக கடிதம் அனுப்புமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம். தேசிய விருதுக்கான சான்றிதழ் கையில் உள்ள நிலையில், பதக்கம் மாறிப்போனது சற்று வருத்தமளிக்கிறது. மத்திய அரசின் மாற்றுத் திறனாளி அமைச்சக அதிகாரிகள் விரைந்து அனுப்புவதாக உறுதியளித்துள்ளனர். எனது கணவர் கழுத்தில் அந்த பதக்கத்தை அணிவித்துப் பார்க்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன் என்றார்.         
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com