எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பரந்தாமன் அவர்கள் மீது வெடி மருந்து வழக்குப் பிரிவு ஒன்றும் சேர்க்கப்பட்டதால் அவருக்குப் பிணை மறுக்கப்படும் என்பது தெரிந்தவுடன், அவரது பிணை மனு திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டது. பிறகு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு, அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. ஆனால், என்மீது வேறொரு குற்றத்திற்காக வழக்கு இருந்ததால், உடனடியாக நான் பிணையில் வெளிவர இயலவில்லை. உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவராகத் திகழ்ந்த திரு. சந்துரு அவர்கள், கீழ்மை நீதிமன்றங்களில் வழக்குகளில் வாதாட முன்வருவதில்லை என்றாலும் எனக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்து வாதாடினார். அங்கு பிணை மறுக்கப்பட்டவுடன் உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு அந்த வழக்கிலும் பிணை பெற்றப் பிறகே நான் வெளிவர முடிந்தது. ஆனாலும், எனக்கு அளிக்கப்பட்ட பிணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு அளித்தது. இதை தெரிந்துகொண்ட திரு. சந்துரு அவர்கள் உடனடியாக என்மகள் உமாவை அழைத்து உயர்நீதிமன்றம் வழங்கிய பிணை விடுதலை ஆணையை உடனடியாக கடலூர் சிறை அதிகாரியிடம் அளித்து அன்று காலை 10மணிக்குள் விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி கூறினார். அதன்படி என்மகளும் கடலூருக்கு விரைந்துவந்து சிறை அதிகாரியைப் பார்த்து விவரத்தைச் சொல்லி அவரின் ஒத்துழைப்போடு காலை மணிக்கு முன்பாகவே நான் விடுதலையானேன். உச்சநீதிமன்றத்தில் எனது பிணையை எதிர்த்து அரசு செய்திருந்த முறையீடு 10 மணிக்கு மேல் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே நான் விடுதலையான செய்தி நீதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அரசின் மனுவை அவர் தள்ளுபடி செய்தார். தொலைநோக்குடன் திரு. சந்துரு அவர்கள் செயல்பட்டதால் நான் விடுதலையானேன்;இல்லாவிட்டால் மேலும் சில மாதங்கள் சிறையிலிருந்திருக்க நேரிட்டிருந்திருக்கும்.