சுகம் தரும் சித்த மருத்துவம்: குடல் அரிப்பு நோய்க்கு  ‘உருள் அரிசி’ தீர்வு தருமா? 

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, இரும்பு, மாங்கனீசு, தயாமின், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ளன.
சுகம் தரும் சித்த மருத்துவம்: குடல் அரிப்பு நோய்க்கு  ‘உருள் அரிசி’ தீர்வு தருமா? 


“நொறுங்க தின்றால் நூறு வயது”
என்ற பழமொழியைத் தெரியாதவர் இருக்க முடியாது. நம் பாரம்பரிய பழமொழிகள், நம் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடையன. அவைகளை வாழ்வியல் முறையாக பின்பற்றினால் 100 வயது மட்டுமல்ல அதுக்கு மேலும் வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் பின்பற்றி வாழ்ந்து காட்டி சென்றுள்ளனர். 

ஆனால், இன்றைய தலைமுறையோ உட்கார்ந்து சாப்பிட கூட நேரமின்றி, அரக்க பறக்க உணவினை தின்று, நம் சீரண மண்டலம் செரிக்க முடியாமல், செரிமானத்தை தூண்டும் என்ற பெயரில் காற்றேட்டப்பட்ட பானங்களை அருந்தி, ஆயுட்காலத்தை குறைத்தது தான் மிச்சம். இத்தகைய நவீன வாழ்வியலால் ஆரோக்கியத்தை இழந்தது தான் மிகப்பெரிய ஆதாயம்.

சரி, அது எப்படி நொறுங்க தின்றால் ஆயுசு கூடும்? அது உணவு தானே, அன்றி மருந்தில்லையே? என்று பலருக்கு கேட்கத் தோன்றும். 

செரிமானத்தின் முதல்படி, நாம் வாயில் உணவிட்டு மென்று தின்று உணவு கவலங்களாக அதனை மாற்ற வேண்டும். நம் வாயில் பற்களை அரைவை இயந்திரங்களாக இயற்கை எதற்கு படைத்துள்ளது? என்றே பலருக்கு தெரியாது. அதனைப் பயன்படுத்தவும் தெரிவதில்லை. நாவிற்கு நல்ல சுவையை கொடுத்து அதன் பலனை அடையும் நாம், நன்கு மென்று தின்று பற்களால் உணவை கூழாக்கி விழுங்கி, அதன் பலனை யாரும் அடைவதே இல்லை.

கொத்துமல்லி இலை

நாம் உண்ணும் உணவை செரிக்க அமிலத்தையும், பித்தமாகிய காரத்தையும், பல்வேறு நொதிகளையும் நம் வயிறு, குடல் பகுதிகள் சுரக்கிறது. அளவுக்கு அதிகமாக சுரக்கும் அமிலமும், பித்தமும் தான் நம் உடலில் பல்வேறு நோய்களுக்கு ஆதாரம். சரிவர மென்று உணவை விழுங்காமல் அப்படியே உணவையும், அத்துடன் சிறிது காற்றையும் சேர்த்து விழுங்குவது பலரது இயல்பு. அத்தகைய உணவு சீரணமாக நம் வயிற்றில் சுரக்கும் அதிகப்படியான அமில சுரப்புகள் குடல்பகுதிகளை அரிக்கும். 

மேலும்,துரித உணவுகளும், எண்ணெய் அதிகம் செறிந்த உணவுகளும் இந்த அமில சுரப்பையும், பித்தத்தையும் அதிகமாக்கி சீரணக் கோளாறுகளை மட்டுமின்றி வயிறு,குடல் பகுதிகளை அரித்து வயிறு புண், குடல் புண், குடல் அழற்சி ஆகிய வியாதிகளை உண்டாக்கும். இவ்வாறு தொடர்ந்து பற்களால் நொறுக்காமல் விழுங்கிய உணவால், குடலில் அதிகரித்த பித்தமும், வாதமும் ஒன்றுகூடி குடல் அரிப்பு நோயையும் (IBS), இன்னும் பல நோய்களையும் நாளடைவில் உண்டாக்கும். 

அடிக்கடி வயிற்றுவலி, மலம் கழிப்பதன் மூலம் அந்த வலிக்கு சற்று நிவாரணம், மலம் கழிப்பதில் மாற்றம் மற்றும் மலத்தின் தோற்றத்தில்  மாற்றம் ஆகியன குடல் அரிப்பு நோயின் மிக முக்கிய குறிகுணங்களாக துரித உணவை அதிகம் நாடுபவர்களை துன்புறுத்தும்.

‘பித்தம் அடங்கிடில், பேசாதே போய் விடு’ என்கிறது சித்த மருத்துவம். அதாவது வாதம்,பித்தம்,கபம் இவை மூன்றில் உடலில் உயிர் இருப்பதை உறுதி செய்வது பித்தம் தான். உடல் சூட்டுக்கு காரணமான பித்தம் அடங்கிவிட்டால் உயிர் இல்லை. அத்தகைய பித்தம் அதிகரித்து அது பரவும் இடத்தைப் பொறுத்துக் குறிகுணங்களை மாற்றி நோய்களை உண்டுபண்ணும். அந்த வகையில் குடலில் அதிகமான பித்தம் குடல் புண்ணையும், குடல் அரிப்பு நோயையும் நாளடைவில் உண்டாக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

இவ்வாறு அதிகரித்த பித்தத்தை தணித்து, அதனால் ஏற்படும் புண்களையும் ஆற்றி, சீரணமண்டலத்துக்கு நன்மை செய்யும் ஒரு எளிய கடைசரக்கு மூலிகை இருக்குமெனில், அது நவீன வாழ்வியலில் மூழ்கியுள்ளவர்களுக்கு அமிர்தம் தான். அப்படி ஒரு எளிய மூலிகை தான் ‘உருள் அரிசி’ எனப்படும் ‘தனியா’

‘தனியா’ என்பதன் பெயர்க்காரணத்தை ஆய்வு செய்தால் இது தணியாத பித்தத்தையும் தணிக்கும் தன்மையுடையதால் தனியா என்ற பெயர் பெற்றது அறியக்கிடக்கின்றது. இதனைப் ‘பித்தமெல்லாம் வேருடனே பேருங்கால்’ என்ற அகத்தியர் குணவாகடம் கூறும் பாடல் வரிகளால் உறுதி செய்யலாம்.

கொத்துமல்லி

கொத்துமல்லி இலைகளில் உள்ளதைப் போல் கொத்துமல்லி விதையான தனியாவிற்கும் பித்தத்தை குறைப்பதோடு மட்டுமின்றி பல்வேறு மருத்துவ குணங்களும் உள்ளது.சுரம், தலைவலி, வாய்நாற்றம், அசீரணம், வயிற்றுக்கோளாறுகள் போன்ற பல உடல் உபாதைகளுக்கு தனியா விதை பல்வேறு தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தனியா, குடலில் ஏற்படும் வலியை போக்கும் இசிவகற்றியாகவும், பசியை உண்டாக்கும் தன்மை, சீரணமுண்டாக்கி, வயிற்றில் உள்ள வாயுவை அகற்றுவதாகவும், குளிர்ச்சியை தருவதாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், உடல் தேற்றியாகவும், கல்லீரலை பாதுகாப்பதாகவும், ரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பினை குறைப்பதாகவும், புழுக்கொல்லியாகவும் செயல்படக்கூடியது. 

தனியாவின் அத்தியாவசிய எண்ணெயில் அதிக 'லினலூல்' என்ற வேதிப்பொருள் இருப்பதால், கொத்தமல்லி விதைகள் வலி நிவாரணி செயல்பாட்டை வெளிப்படுத்துகின்றன. இந்த மூலக்கூறே அதன் புற்றுநோய் தடுக்கும் பண்பிற்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட் எனும் செல்களின் தேய்மானத்தை தடுக்கும் தன்மைக்கும், மன பதட்டத்தை தடுக்கும் தன்மைக்கும், நரம்புகளை தேய்மானத்தை தடுக்கும் தன்மைக்கும், வீக்கத்தை குறைக்கவும் முக்கிய காரணமாக உள்ளது.

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் கே, இரும்பு, மாங்கனீசு, தயாமின், துத்தநாகம் மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவை அதிகம் உள்ளன. தனியா விதையானது பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம் மற்றும் துத்தநாகம் ஆகியவற்றின் வளமான ஆதாரமாகும்.

தனியாவை லேசாக வறுத்து பொடித்து தனியாகவோ, அல்லது ஏலக்காய், சீரகம் போன்ற பித்தத்தை குறைக்கும் பிற கடைசரக்குகள் உடனோ  சேர்த்துக் கலப்பு பொடியாக செய்து பாலில் கொதிக்க வைத்து பயன்படுத்த நல்ல பலன் தரும். அதிகரித்த பித்தத்தைக் குறைத்து குடல் புண்களை ஆற்றி குடல் அரிப்பு நோயில் இருந்து காக்கக்கூடியது.

உலக அளவில் சரியான மருத்துவ முறைகள் இல்லையே என உலகமே அஞ்சி நடுங்கும் ஒரு உடல் உபாதைக்கு, கிட்டத்தட்ட 9-23% பேர் உலக அளவில் பாதிக்கப்பட்டு அவதியுறும் குடல் அரிப்பு நோய்க்கு எளிமையான மருத்துவ முறையைக் கூறி, நோயிலிருந்து நீக்கி, நீடித்த ஆரோக்கியான வாழ்விற்கு வழிவகைகளை கூறுகிறது சித்த மருத்துவம். 

மிளகாய் எனும் குடலை அரிக்கும் உணவுப்பொருளை அரைக்கும் போது, தனியாவையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குடலை காக்கும் சூட்சுமத்தை ஒளித்து வைத்துள்ளது சித்த மருத்துவம். இன்னும் பல எளிய மூலிகைகளையும், கடை சரக்குகளையும் நோய்களை தீர்க்கும் பேராயுதமாக கூறுகிறது நம் பாரம்பரிய மருத்துவம். அதைப் பின்பற்றி வாழ்வது என்பது ஆரோக்கியத்தின் ஆணி வேர் போன்றது.  
 

மருத்துவரின் ஆலோசனை மற்றும் தொடர்புக்கு... +91 8056040768. இ-மெயில்– drthillai.mdsiddha@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com