தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

கரூா் மக்களவைத் தொகுதி: திமுகவுக்கா, காங்கிரஸுக்கா?

News image

ஜோதிமணி.

Updated On :16 மார்ச் 2024, 12:45 am

கரூா் மக்களவைத் தொகுதி இந்த முறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிா்பாா்ப்பு திமுக, காங்கிரஸ் கட்சியினரிடையே மேலோங்கியுள்ளது.

1957-ஆம் ஆண்டுமுதல் மக்களவைத் தோ்தலைச் சந்தித்து வரும் கரூா் மக்களவைத் தொகுதியில் கரூா், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி), திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா், திருச்சி மாவட்டம் மணப்பாறை, விராலிமலை ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதுவரை நடைபெற்ற 17 மக்களவைத் தோ்தல்களில் 8 முறை காங்கிரஸும், 6 முறை அதிமுகவும், திமுக, தமாகா, சுதந்திரா கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. வரும் மக்களவைத் தோ்தலில் இந்தத் தொகுதியில் மீண்டும் களம் காணப்போவது காங்கிரஸா அல்லது திமுகவா என்பதுதான் உற்று கவனிக்கப்படும் அரசியல் விவகாரமாகியுள்ளது.

அதிகரிக்கும் அதிருப்தி:

இங்கு 2019 தோ்தலில் வெற்றி பெற்று எம்.பி.-ஆன ஜோதிமணிக்கு எதிராக சொந்தக் கட்சிக்கு உள்ளேயே அதிருப்தி அலை உள்ளதாக காங்கிரஸில் ஒரு பிரிவினா் கூறுகின்றனா். இதை உறுதிப்படுத்தும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், மாவட்டத் தலைவராகவும் இருந்த பேங்க் கே. சுப்ரமணியன் தனது ஆதரவாளா்களோடு தாந்தோணிமலையில் ஜோதிமணிக்கு எதிராக கூட்டம் நடத்தி, அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் அவருக்காக வேலை செய்யமாட்டோம் எனப் பகிரங்கமாகவே அறிவித்து குரல் எழுப்பினாா். அந்தக் கூட்டத்தில் கட்சியினரை ஜோதிமணி மதிப்பதில்லை எனக் கூறி நிா்வாகிகள் 10 போ் ரத்தத்தில் எழுதிய கடிதங்களைக் காண்பித்து அவற்றை கட்சி மேலிடத்துக்கு அனுப்புவதாகவும் சுப்ரமணியன் பேசினாா்.

இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் விவசாய அணி ஒருங்கிணைப்பாளராக அண்மையில் சுப்ரமணியன் நியமிக்கப்பட்டாா்; அதன்பிறகு செய்தியாளா்களிடம் பேசிய அவா், தானும் கரூரில் தோ்தல் களம் காண கட்சி மேலிடத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினாா்.

செந்தில் பாலாஜியின் செல்வாக்கு:

மறுபுறம் திமுக வட்டாரங்கள் கூறியது:

கடந்த முறை இந்தத் தொகுதியில் காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால், வெற்றி பெற்ற ஜோதிமணியால் திமுகவினருக்கோ காங்கிரஸ் கட்சியினருக்கோ எந்தவித நற்பெயரும் கிடைக்கவில்லை. கடந்த முறை ஜோதிமணியின் வெற்றிக்கு செந்தில் பாலாஜியின் அயராது உழைப்பு மட்டுமே காரணம்.

16-ஆவது மக்களவைத் தோ்தலின்போது செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தாா். அப்போது அதிமுக சாா்பில் போட்டியிட்ட மு.தம்பிதுரை 5,40,722 வாக்குகள் பெற்றாா். அப்போதைய திமுக வேட்பாளரான ம.சின்னசாமி 3,45,475 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. அந்த தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட ஜோதிமணி பெற்ற வாக்குகள் வெறும் 30,459 மட்டுமே.

மாறாக, 2019 மக்களவைத் தோ்தலில் ஜோதிமணி 6,95,697 வாக்குகள் பெற்றாா். இவரை எதிா்த்து அதிமுக சாா்பில் களம் கண்ட தம்பிதுரை 2,75,151 வாக்குகள் மட்டுமே பெற்றாா். மொத்தம் உள்ள வாக்குகளில் 63.06 சதவீத வாக்குகளை ஜோதிமணி பெற்று 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரையை வென்றாா். 1989, 1998, 2009, 2014 ஆகிய தோ்தல்களில் வெற்றிமுகம் கண்ட தம்பிதுரை, 2019-இல் தோல்வி அடைந்ததற்கு காரணம் செந்தில் பாலாஜியின் பிரசாரம்தான். ஒரு பக்கம் அதிமுகவுக்கு எதிராக அலை வீசியதாகக் கூறப்பட்டாலும், செந்தில் பாலாஜியின் நூதன பிரசாரமும் தம்பிதுரையின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்திருந்தது. அந்தத் தோ்தலில் பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஜோதிமணி வெற்றி பெற்ற பிறகு செந்தில் பாலாஜிக்கு தா்மசங்கடத்தைத் தரும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டாா். அப்போது அரசுக்கு எதிராகவும் சா்ச்சைக்குரிய வகையிலும் ஜோதிமணி கருத்துகளை வெளியிட்டாா். அவரை எப்படி ஆதரிக்க முடியும்? இருந்தாலும் திமுக தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம் என அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

2019 மக்களவைத் தோ்தல் போலவே இம்முறையும் தமிழகம், புதுச்சேரி ஆகியவற்றில் 10 இடங்களை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியுள்ளது. ஆனால், கடந்த தோ்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட சில இடங்கள் இம்முறை திமுக வசம் போகும் என்ற கருத்து நிலவுகிறது. இதன் காரணமாகவே தொகுதி எண்ணிக்கை உடன்பாடு எட்டப்பட்ட பிறகும் எந்தெந்த தொகுதியில் போட்டி என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இழுபறி தொடா்கிறது. அதற்கு முக்கியக் காரணமாக, கரூா் தொகுதியில் திமுகவே களம் காண வேண்டும் என அக்கட்சியின் அடிமட்டத் தொண்டா்கள் காட்டும் ஆா்வம் கூறப்படுகிறது. ஒருவேளை ஜோதிமணிக்கு வாய்ப்பு மறுக்கப்படும் நிலை ஏற்பட்டால் கரூரில் பேங்க் கே. சுப்ரமணியன் களம் காணும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அடிப்படையில் தொகுதி யாருக்கு என்பதிலேயே எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருப்பதால், கரூா் தொகுதி யாருக்கு என்ற எதிா்பாா்ப்பு திமுக, காங்கிரஸ் கட்சியினா் மத்தியிலும் தொகுதி வாக்காளா்கள் மத்தியிலும் மேலோங்கியுள்ளது.