தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு, அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் முழுமையாக வாசித்துள்ளார்.
கடந்த மே 10-ஆம் தேதி முதல்வராக சி. ஜோசப் விஜய் பதவியேற்றதும், மறுதினம் சட்டப்பேரவையைக் கூட்டி எம்எல்ஏ-க்கள் அனைவரும் பதவியேற்றனா். மே 13-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவைப் பெற்று தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இதையடுத்து, அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாடு 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், முறைப்படி ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரின் உரையுடன் தொடங்கியது.
இந்த கூட்டத்தொடரின் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் அல்லது வந்தே மாதரம், இவற்றில் எது முதலில் பாடப்படும் என்ற கேள்வியும், ஒருவேளை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டால் ஆளுநர் உரையாற்றுவாரா என்ற கேள்வியும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக, தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்பு விழா மூன்று கட்டங்களாக நடைபெற்றபோதும், முதலில் வந்தே மாதரம், இரண்டாவது தேசிய கீதம், இறுதியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
அப்போதே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தொடர்பாக ஆளுநரிடம் முதல்வர் விஜய் கேட்டதற்கு, ஆளுநரின் நிகழ்வுகளின் தொடக்கத்திலும், இறுதியிலும் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை உத்தரவு பிறப்பித்திருப்பதாக விளக்கம் அளித்திருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்வினையாற்றிய நிலையில், தில்லி பயணம் மேற்கொண்ட முதல்வர் ஜோசப் விஜய், பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, தமிழ்நாட்டு மரபுபடி அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாடுவதற்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் சட்டப்பேரவை மரபுபடி, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இறுதியில், தேசிய கீதம் பாடப்படும் நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து, கூட்டத்தொடரின் தொடக்கத்திலேயே இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் தனது உரையை வாசித்தார்.
மத்திய அரசுக்கு எதிரான வரிகள்
பொதுவாக, ஆண்டு தொடக்கத்தின் முதல் கூட்டத்தொடரும், புதிய அரசின் முதல் கூட்டத்தொடரும் அந்தந்த மாநில ஆளுநர்களின் உரையுடன் தொடங்குவது மரபாக பின்பற்றப்பட்டு வருகின்றன.
இந்த உரையை மாநில அரசு தயாரித்து, ஆளுநருக்கு வழங்கும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர்கள் வாசிக்க வேண்டும்.
இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சி காலத்தில், 2022-க்கு பிறகு ஒருமுறைகூட அப்போதைய ஆளுநர் ஆர்.என். ரவி, அரசு தயாரித்து கொடுத்த உரையை முழுமையாக வாசித்ததில்லை.
2023-ஆம் ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடரில் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையாற்றியபோது, மகளிா் முன்னேற்றம், மதச்சாா்பின்மை, சுயமரியாதை, பெரியாா், அம்பேத்கா், கலைஞா் ஆகிய வாா்த்தைகளை அவா் வாசிக்கவில்லை. இதையடுத்து, தமிழக அரசு உரையில் அந்த வாா்த்தைகள் இடம்பெறும் என்று அப்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் அவையில் கூறியதால், ஆளுநா் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றாா்.
2024-ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடா்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி, ஆளுநா் உரையை வாசிக்காமல் சென்றாா். பின்னா், தமிழில் அந்த உரையை பேரவைத் தலைவா் அப்பாவு வாசித்து அவைக் குறிப்பில் பதிவு செய்தாா். இதேபோல், கடந்த 2025, 2026-ஆம் ஆண்டுகளிலும் முதலில் தேசிய கீதம் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியேறினாா்.
இந்த நிலையில், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை எந்த மாற்றமுமின்றி, உள்ளதை உள்ளபடியே வாசித்துள்ளார் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர். இதில், மத்திய அரசுக்கு எதிரான வரிகளும், மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிரான வரிகளும் அடங்கும்.
அவை,
”மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் செலுத்தும் வரியில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய உரிய நிதிப் பகிர்வினைக் கோருவதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றப்படும். அவ்வாறு தீர்மானம் நிறைவேற்றுவதோடு மட்டும் நின்றுவிடாமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று நிதிப் பகிர்வினை சட்டரீதியாகப் பெறுவதற்காக சட்ட வல்லுநர்கள் அடங்கிய சிறப்புக்குழு அமைக்கப்படும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒவ்வொரு ரூபாய் வருவாயும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வில் மத்திய அரசின் பாரபட்சமான அணுகுமுறை அறிக்கையாக வெளியிடப்படும். மேலும், தமிழ்நாட்டிற்குரிய நியாயமான நிதிப் பகிர்வை மத்திய அரசிடமிருந்து பெறுவது உறுதி செய்யப்படும்.
1968 ஆம் ஆண்டில் பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும்", என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், அதனையே இந்த அரசு தொடர்ந்து கடைபிடிக்கும்.
தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ இந்த அரசு கடுமையாக எதிர்க்கும். தேசியக் கல்விக் கொள்கையை கொள்கையின்படி மும்மொழிக் கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம்' திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு நியாயமாகக் கிடைக்கப் பெற வேண்டிய 3,458 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க முடியும் என்ற மத்திய அரசின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமமாகும். மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, தமிழ்நாட்டிற்குரிய நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசை இந்த அரசு வலியுறுத்தும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், கல்வியானது பொதுப் பட்டியலில் இருப்பதன் காரணமாக நீட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை திணிப்பு, மும்மொழிக் கொள்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, கல்வியை பொதுப் பட்டியிலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்" என்ற தமிழ்நாடு அரசு தயாரித்த அறிக்கையை மாற்றமின்றி வாசித்தார்.
“மக்களே நாட்டின் உண்மையான எஜமானர்கள்” என்ற முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாதுரை உரையை சுட்டிக்காட்டி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் 36 நிமிடங்கள் பேசினார்.
இறுதியில், திருவள்ளுவரின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற குறளுடன் நிறைவு செய்தார்.
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக அமைந்துள்ள அரசும், புதிய ஆளுநரும் இணக்கமான போக்கை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு அரசு தரப்பிலும், ஆளுநருக்காக முதல்முறையாக சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில், தமிழ்நாடு பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட முன்வரைவுகளுக்கும் உடனுக்குடன் ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்!
Summary
Views and criticisms against the Central Government - The Governor read out the government's address exactly as it was
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






