
செய்யூரில் அமைகிறதா சென்னையின் 2வது விமான நிலையம்?
செய்யூரில் அமைகிறதா சென்னையின் 2வது விமான நிலையம் என்பது பற்றி..

கோப்புப் படம்
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதற்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடங்களில், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தமிழக அரசின் முதல் தேர்வாக இருக்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமான நிலையம் அமைய பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, அதன் உரிமையாளர்களுக்கே திருப்பி அளிப்பது குறித்தும் தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆகஸ்ட் 24ம் தேதி, பேரவையில், பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்த போது, 1,802 ஏக்கர் நிலம் கைப்பற்றப்பட்டிருந்தது.
அதன்பிறகு, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் மாநெல்லூர் என்ற பகுதியும் இரண்டாவது விமானம் நிலையம் அமைப்பதற்கு ஏதுவான பகுதிகளாக தமிழக அரசால் பரிசீலிக்கப்படும் பகுதிகள் என பட்டியலிடப்பட்டன.
இதில், செய்யூர் கிராமம், சென்னையிலிருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு, மத்திய அரசின் திட்டத்துக்காக ஏற்கெனவே 623 ஏக்கர் பரப்பளவிலான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த திட்டம், அதிமுக ஆட்சிக் காலத்திலேயே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. மேலும் அதே பகுதியில் 300 ஏக்கர் அளவுக்கு புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே, மெநெல்லூரைக் காட்டிலும் செய்யூர் பகுதியில், இரண்டாவது விமான நிலையம் அமைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
மேலும், கும்மிடிப்பூண்டியின் மாநெல்லூர் பகுதிக்கு அருகே பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. இதனால், இங்கு மாநெல்லூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச் சூழல் அனுமதி கிடைப்பதில் பிரச்னை ஏற்படலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், செய்யூரிலிருந்து சென்னையை இணைக்கும் சாலைகளை விரிவுபடுத்துவதால், ஏற்கனவே இருக்கும் நெரிசலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என கருதப்படுகிறது.
சென்னை - கும்மிடிப்பூண்டி சாலைப் பகுதிகளில் ஏற்கனவே கனரக வாகனங்களின் நெரிசல் அதிகரித்துக் காணப்படுகிறது. இதில், புதிய விமான நிலையம் உருவாக்கப்பட்டால் ஏற்படும் சிக்கல்களை எதிர்கொள்வதும் சிரமமாக இருக்கலாம்.
ஆண்டுக்கு ஆண்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. எனவே, மிக விரைவாக செய்யூர் தேர்வு செய்யப்பட்டு விமான நிலையம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







