/

5 ரூபாய் காசு போட்டால் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்து கொள்ளலாம்: கலசலிங்கம் மாணவர் சாதனை

5 ரூபாய் காசு போட்டால் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் திட்டத்தை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

News image
Updated On :9 நவம்பர் 2016, 12:32 pm

கோ.ஜெயக்குமார்

5 ரூபாய் காசு போட்டால் செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும் திட்டத்தை கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இ.சி.இ. மூன்றாம் ஆண்டு படித்து வருபவர் ஜி.கே.சுதர்ஸன். இவர் துறைத் தலைவர் சிவக்குமார், பேராசிரியர்கள் பெருமாள், பள்ளிகொண்ட ராஜசேகரன் ஆகியோர் வழிகாட்டுதலின் படி நாணயம் சார்ந்த மொபைல் சார்ஜர் புராஜக்ட் செய்துள்ளார்.
தற்போது செல்போன்கள் எண்ணிக்கை மக்கள்தொகையின் எண்ணிக்கையோடு பன்மடங்கு போட்டி போட்டு கூடிவருகிறது. மேலும் முழு நேரமும் நெட், கேமரா உள்ளிட்டவை பயன்பாட்டில் உள்ளதால் ஒரு நாள் இரண்டு, மூன்று முறை  செல்போன் பேட்டரியை சார்ஜ் செய்ய வேண்டியுள்ளது. நீண்ட பயணத்தின்போதும் ஆங்காங்கே சார்ஜ் செய்துகொள்வதற்கு, கடைகளில் காசுபோட்டு பேசும் தொலைபேசி போல, காசுபோட்டு சார்ஜ் செய்யும் இந்த புராஜக்ட்டை மாணவர் செய்து முடிக்க 6 மாதம் ஆனது. இதில் போடும் நாணயம் 15 முதல் 32 மி.மி விட்டம் 1.2 மி.மீ தடிமன் இருக்க வேண்டும். குறிப்பாக 5 ரூபாய் நாணயம் போட்டால் டி.சி 12 வோல்ட் மின்சார உற்பத்தியில் செல்போன் மிகக்குறைந்த அதாவது 15 நிமிடத்தில் 100 விழுக்காடு சார்ஜ் ஆகியவிடும் என்று மாணவர் உபகரணத்தை இயக்கி விவரித்தார்.
இந்தப் பெட்டியில் ஐ ஆர் சென்ஸார் நாணயத்தை போட்ட உடன் அதை உணர்ந்து ரிலே மூலம் தூண்டுதல் கிடைத்து சார்ஜிங் தொடங்கும். சார்ஜ் ஆகுவதை எல்.சி.டி. காட்சி உதவியுடன் சரிபார்க்கலாம்.
காசுபோட்ட உடன் சரியில்லை என்றால் உடனே வெளியே தள்ளிவிடும் நாணயம் கண்டறியதல் கருவி உள்ளது. மேலும் மைக்ரோ கண்ட்ரோலர், சார்ஜ் துடிப்பு, சுவிட்ச் பாகங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒரு பெட்டியை செய்வதற்கு மொத்த செலவு ரூ.16 ஆயிரம் ஆனது என்றும், இதில் தற்போது வெளிவரும் புதிய மாடல்கள், அளவுகள் உள்ள செல்போன்களையும் வைத்து சார்ஜ் செய்துகொள்ளும் அடிப்படை மாற்றுத்தளம் உள்ளது என்றும் மாணவர் விளக்கினார்.
மாணவர் இந்த புராஜக்ட்டை மத்திய அறிவியல் கழகத்தின் சுய தொழில் முனைவோர் மையத்திற்கு அனுப்பி விண்ணப்பித்திருந்தார். இதனைத் தேர்ந்தெடுத்த மத்திய அறிவியல் கழகம் மாணவர்க்கு பாராட்டுச் சான்றிதழையும் ரூ.1 லட்சம் நிதியும் வழங்கியுள்ளது. இந்த புராஜக்டை புதுதில்லியில் உள்ள காப்புரிமை கழகத்திற்கு காப்புரிமை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் சுயதொழில் முனைவோர் மைய இயக்குநர் டாக்டர் மா.ஜெயக்குமரன் கூறினார்.
வளர்ந்து வரும் கைபசி பயன்பாடு குறித்த புதிய வணிக திட்டத்திற்கு ஏற்ப நாணயம் சார்ந்த கைபேசி சார்ஜரை உருவாக்கியுள்ள மாணவர் சுதர்ஸனை பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் எஸ்.சசி ஆனந்த், துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், துணைப் பதிவாளர் பி.ஜி.குருசாமிபாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.