சுற்றுச்சூழல் காவலர் வீரேந்திரகுமார்

சுற்றுச்சூழலில் எங்கு தவறு நேர்ந்தாலும், வீரேந்திரகுமார் கடுமையாகத் தன் எதிர்ப்புக் குரலை எழுப்பாமல் இருந்ததில்லை.
சுற்றுச்சூழல் காவலர் வீரேந்திரகுமார்எம்.பி. வீரேந்திரகுமார், 1936 ஜூலை மாதம் 22 ஆம் நாள் கேரளத்தின் வயநாடு பகுதியைச் சேர்ந்த கல்பற்றா எனும் ஊரில் பிறந்தவர். தந்தை எம். கே. பத்மப் பிரபா கவுடர். தாய் மருதேவி அவ்வை. பத்மப் பிரபா கவுடர் சோஷலிஸ்ட் கட்சித் தலைவர். சென்னை மாகாணத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

வீரேந்திரகுமார், மாத்ருபூமி பிரிண்டிங் மற்றும் பப்ளிஷிங் கம்பெனியின் தலைவராகவும் இயக்குநராகவும் விளங்கியவர். இந்தியப் பத்திரிகையாளர் சங்கத்தின் செயற்குழு  உறுப்பினராகவும் பி.டி.ஐ. இயக்குநராகவும் செயலாற்றியவர். 2003 - 2004 ஆம் ஆண்டில் பி.டி.ஐ. தலைவராகவும் ஐ.என்.எஸ். தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

ஜெயப்பிரகாஷ் நாராயணன் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தபோது அதன் உறுப்பினராக மாணவர்  பருவத்திலேயே இணைந்தவர் வீரேந்திரகுமார். அவசரநிலைக் காலத்தில்  சிறைவாசம் அனுபவித்தவர். சுற்றுச்சூழல் ஆர்வலர். அதனாலேயே கேரள அரசின் சட்டமன்ற உறுப்பினராகவும்,  அமைச்சராகவும்  பதவி  வகித்தபோது  வன மரங்களை வெட்டுவதற்கு  அரசு ஆணைப் பிறப்பித்ததும் இவர் எவ்வளவோ தடுத்தும் அரசு கேளாததால், அதை எதிர்த்து அமைச்சர் பொறுப்பைத் துறந்தவர். மத்திய அமைச்சரவையில் துணை நிதி அமைச்சராகவும், தனிப் பொறுப்புடன் கூடிய தொழில்துறைத்  துணை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

வீரேந்திரகுமார் பொது வெளியிலும் சரி, சட்டமன்றம்,  நாடாளுமன்றமாக இருந்தாலும் சரி, அவரின் உரையில் நேர்மையைக் காணலாம். அவை வார்த்தைகளின் வெறும் பந்தாட்டமாக இல்லாமல் பறவைக் கூட்டங்களின் பறத்தல்களாகவே இருக்கும்.

"தனி மனித வாழ்வில் கடைப்பிடிக்கும் மூலதனங்களே எழுத்திலும் இருக்க வேண்டும்' என்னும் விஷயத்தில் தனிக் கவனம் செலுத்துபவர் வீரேந்திரகுமார். தனது இலக்கியத் தனித்துவத்தை வேறுபடுத்திக் காட்டிய ஒரு முக்கிய நிகழ்வு:
வீரேந்திரகுமார் இலக்கியத்தின் மீதும் எழுத்தாளர்களின் மீதும் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டவர். எழுத்தாளர்களிடம் உரையாடுவதும் அவர்களோடு பொழுதுபோக்குவதும் அவருக்கு மிகவும் விருப்பமான ஒன்று.

எம். டி. வாசுதேவன் நாயரிடம் உரையாடிக்கொண்டிருப்பது என்றால் வீரேந்திரகுமாருக்கு மிகவும் பிடித்த விஷயம். வீரேந்திரகுமார் இறப்பதற்கு சில நாள்கள் முன்பு எம்டியுடன் பேச வேண்டும் என்று நினைத்து, எம்.டி.யிடம் தொடர்பு கொள்ளும்படி தம் உதவியாளர் சீனுவாசனிடம் கூறியுள்ளார். எம்.டி.யும் "தனக்கு நெருக்கடி ஒன்றுமில்லை. எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்" என்று சொல்லியுள்ளார்.

எம்.டி. எப்போதும் ஒரு சிறிய ஹோட்டலில் தனக்கென ஒரு அறையை அலுவலகம் போல் ஒதுக்கிவைத்துள்ளார். அங்குதான்  விருந்தினர்களைச் சந்திப்பார். வீரேந்திரகுமார் சந்திக்க வேண்டுமென சீனுவாசன் மூலம் தகவல் சொன்னால் போதும் வந்து விடுகிறேன் என்று சொன்னாராம், எம்.டி. அதற்கு வீரேந்திரகுமார், “முன்பெல்லாம் அந்த சிறிய ஓட்டல் அறையிலும் பத்திரிகை அலுவலகத்திலும் அமர்ந்து பேசியதுபோல் இன்னும் ஒரு முறை ஓட்டல் அறையில் அமர்ந்து,  தாங்கள்  கதைகளைப் பற்றியும் புத்தகங்களைப் பற்றியும் சும்மாவாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும்,” என்றாராம். ஆனால், “அந்த உரையாடலை பாக்கி வைத்துவிட்டு போய்விட்டாரே” என்று இரங்கல் செய்தியில் எம்.டி. குறிப்பிட்டுள்ளார்.

இவர் சிறந்த பயண நூல் ஆசிரியர்.  இலக்கிய - சமூக -பண்பாடு - அரசியல் களங்களில்  ஐம்பதுக்கும்  மேற்பட்ட விருதுகள் பெற்றவர். இவர் எழுதிய நூல்களில் "ராமனின் துயரம்' என்ற நூல் மிகுந்த பாராட்டைப் பெற்ற நூலாகும். அதேபோல், "வெள்ளிப் பனிமலையின் மீது' என்ற பயண நூலும் பெரும் பாராட்டையும் வயலார் ராமவர்மா விருதும் பெற்றது. இதே நூல் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம்  தமிழாக்கத்தில் "நல்லி திசை எட்டும்' விருதைச் சிற்பியும், சிறந்த மூல நூல் என்ற வகையில் பாராட்டிதழை வீரேந்திரகுமாரும் பெற்றார்கள்.

வீரேந்திரகுமார் பற்றி ஒரு வகையில் ஆராய முற்பட்டால் மகாத்மாஜி, ராம் மனோகர் லோகியா, பண்டிட் ஜவஹர்லால்  நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோரின் தொடர் நபராக, நவீனமானதொரு விடுதலை மனப்பான்மையின் தரிசனமாக எம்.பி. வீரேந்திரகுமார் தம் வாழ்வின் மூலமாகவே நிரூபித்திருக்கிறார்.

அப்போது வீரேந்திரகுமார் பி.டி.ஐ.யின் சேர்மனாக இருந்தார். "பாப்ரி மஸ்ஜித்' தகர்க்கப்பட்ட சமயம். பி.டி.ஐ. தலைவரின் அலுவலகத்துக்கு அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவின் அலுவலகத்திலிருந்து ஒரு போன் கால். பி.டி.ஐ. சேர்மனிடம் பிரதமர் பேச வேண்டும் என்ற செய்தி. சேர்மன் அப்போது வெளிநாட்டில் இருந்தார். அதனால், எக்ஸிக்யூட்டிவ்  எடிட்டரிடம், “பாப்ரி மஸ்ஜித்” விஷயத்தில் செய்தி வெளியிடும்போது கொஞ்சம் மென்மையாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம்” என்பதை பிரதமர் அலுவலகத்திலிருந்து சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சேர்மன் வீரேந்திரகுமார் வெளிநாட்டிலிருந்தே, let him run the country and i will run PTI என்ற பதிலை அளித்தாராம். இதுதான் சேர்மனின் எண்ணம் என்பதைப் பிரதமருக்கு அறிவித்துவிடலாம் என்றும் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் மூலம் அறிவிக்கச் செய்தாராம்.

சுற்றுச்சூழலில் எங்கு தவறு நேர்ந்தாலும், வீரேந்திரகுமார் கடுமையாகத் தன் எதிர்ப்புக் குரலை எழுப்பாமல் இருந்ததில்லை. தெஹ்ரி அணை கட்டியதால் அங்கு வசித்த மக்கள் பட்ட இன்னலுக்கான இழப்பை எப்படி ஈடுகட்டியிருக்க வேண்டும் என்பதை, "வெள்ளிப் பனிமலையின் மீது' என்ற தன் பயண நூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்:

"... மறுவாழ்வுச் செயல்பாடுகள் நீதிநெறிப்படி இருந்திருக்க வேண்டுமானால் திட்டத்தின் பலனாகக்  குடிபெயர நேர்ந்தவர்களுடைய  வருமானம், ஜீவனத்துக்குரிய வழிகள், அனுபவிக்க உரிமம் உள்ளவைக் குறித்து முறையான கணக்குகள் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் அவர்களுக்கு மறு வாழ்வுக்குரிய விரிவான திட்டங்கள் தயாராக்கி இருக்க வேண்டும். தொடர்ந்து அவசியமான  பொருத்தமான இடம் கண்டறியப்பட்டிருக்க வேண்டும். குடிபெயர்க்கப்பட்ட கிராமவாசிகளின் சமூக நிலையைக் குறித்து அவர்களின் மறுவாழ்வு அமைக்கப்பட வேண்டும். திட்டத்தால்  மிக அதிகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கெல்லாம் மறு வாழ்வு திட்டத்தோடு இணைப்பும் தொடர்பும் இருக்க வேண்டும். திட்டம் வெளிப்படையானதாகவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் முடிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். திட்டச் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஒரு நிபுணர் குழுவும் இன்றியமையாதது. ஆனால், தெஹ்ரி அணைக்கட்டுத் தொடர்பாக இடம்பெயர்ந்து சென்றவர்களின் மறுவாழ்வைப் பொருத்தவரை மேற்கண்ட எந்த நிபந்தனைகளும் பின்பற்றப்படவில்லை."

இந்த எண்ணம்தான் எம்.பி. வீரேந்திரகுமார்!

[கட்டுரையாளர் - ஆசிரியர்,

'திசை எட்டும்' இதழ்]
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com