இராம. சுந்தரம்
இராம. சுந்தரம்

அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம் காலமானார்

அறிவியல் தமிழறிஞர் இராம. சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில்  திங்கள்கிழமை காலை காலமானார்.


தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், அனைத்திந்திய அறிவியல் தமிழ்க் கழகத் தலைவரும், அறிவியல் தமிழறிஞருமான இராம. சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக தஞ்சாவூரில் அவரது இல்லத்தில்  திங்கள்கிழமை காலை காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம், அலவாக்கோட்டையில் 1938, ஏப். 1 ஆம் தேதி பிறந்த இவர், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பின்னர், 1981 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குநராகவும், 1987 முதல் அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறைப் பேராசிரியராகவும், 1997 முதல் முதுநிலைப் பேராசிரியராகவும் பணியாற்றி 1998 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.

இவர் நேஷனல் புக் டிரஸ்ட், சாகித்திய அகாதெமி, தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் இதர பல்கலைக்கழகங்களிலும் 10-க்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ளார். மேலும், பதிப்பாசிரியராக இருந்து 35-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். பல்வேறு அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

எஸ். வையாபுரிப் பிள்ளையின் ஆய்வுகளை முன்னெடுத்தவர் இராம. சுந்தரம். தாமஸ் டிரவுட்மென் எழுதிய திராவிடச் சான்று நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழ் மார்க்சிய ஆய்வுகளில் பேராசிரியர் நா.வானமாமலை, க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் வழியில் செயல்பட்டவர். பல ஆய்வாளர்களை உருவாக்கியுள்ளார்.

இவரிடம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவப் படிப்புகளைத் தமிழில் கற்பிக்கும் பொறுப்பை முதல் துணைவேந்தர் வ.அய் சுப்பிரமணியம் வழங்கினார். பொறியியல், மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான பாட நூல்களைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டார். தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் களஞ்சியத்திலும் இராம. சுந்தரம் பணியாற்றினார்.

இவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (மார்ச் 9) காலை 10 மணியளவில் தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் நடைபெறும்.

தொடர்பு எண் - 98432 72312, 9962030010.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com