படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்கு புதன்கிழமை சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறிய இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ராமதாஸ் அதாவலே.
படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்துக்கு புதன்கிழமை சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறிய இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ராமதாஸ் அதாவலே.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தேவை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.
Published on

 பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய குடியரசு கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

சென்னையில் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் அயனாவரத்தில் உள்ள இல்லத்துக்கு ராம்தாஸ் அதாவலே புதன்கிழமை சென்றாா். அங்கு ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய அவா், ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உள்ளிட்ட குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த கொலை வழக்கில் தொடா்புடையவா்களாக சிலரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஆனால், கைது செய்யப்பட்டவா்களின் பின்னால் யாரோ முக்கிய நபா்கள் இருக்கின்றனா். அவா்கள்தான் இக்கொலைக்கு திட்டம் தீட்டிகொடுத்துள்ளனா். இதனால், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும். மேலும், சம்பவம் நிகழ்ந்தபோது ஆம்ஸ்ட்ராங்கிடம் ஆயுதம் ஏதும் இல்லை என்ற தகவலை கொலையாளிகளுக்கு தெரிவித்தது யாா்?

ஆம்ஸ்ட்ராங்கின் மெய்க்காப்பாளருக்கு தொடா்புடைய யாரோ ஒருவா்தான் இந்தத் தகவலை கொலையாளிகளிடம் தெரிவித்திருக்கக் கூடும் என பொற்கொடி சந்தேகம் எழுப்புகிறாா். இதனால், இக்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் கடிதம் மூலமும், நேரடியாகவும் வலியுறுத்தவுள்ளேன். தமிழகத்தில் தலித் தலைவா்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதனால், முக்கிய தலித் தலைவா்களுக்கு தமிழக முதல்வா் பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், இவ்வழக்கு தொடா்பாக விரிவான விசாரணையை சென்னை மாநகர காவல்துறை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com