கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

யாரை ஏமாற்றுவதற்காக சாத்தியமேயில்லாத அறிவிப்புகள்? - முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

நிறைவேற்ற சாத்தியமே இல்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Updated On :27 ஜூன் 2024, 9:33 am

DIN

பெங்களூருவில் இருந்து 150 கி.மீ.க்கு விமானநிலையம் அமைக்க முடியாது என மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ள நிலையில், நிறைவேற்ற சாத்தியமே இல்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வியாழக்கிழமை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ஒசூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

இந்தநிலையில், சட்டப்பேரவை விதி 110 இன் கீழ் ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை என அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 4 ஆம் தேதி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெனரல் வி.கே. சிங் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.

இந்திய அரசு மற்றும் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கிடையேயான ஒப்பந்தத்தின்படி, பெங்களூர் சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டிலிருந்து 25 ஆண்டுகளுக்கு, 150 கி.மீ. சுற்றளவில், புதிய விமான நிலையங்கள் அமைக்க முடியாது என்பதையும், ஓசூரில் அமைந்துள்ள விமான நிலையம், டிஏஏஎல் என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமான நிலையம் என்பதால், மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் மேம்படுத்த முடியாது என்பதையும், ஓசூர் விமான நிலையத்தைப் பயணிகள் பயன்படுத்தும் வண்ணம் மேம்படுத்த ஆகும் செலவு ரூ.30 கோடி என்றும் விளக்கமாகக் கூறியதோடு, மத்திய விமானப் போக்குவரத்துத் துறையின் ஆய்வு முடிவுகளையும் எடுத்துக் கூறியிருந்தார்.

அத்துடன், தமிழக அரசு டிஏஏஎல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. ரூ.30 கோடி செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு, 110 ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பேருந்துகளைக் கூட வாங்காத திமுக அரசு, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை.

கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக? என முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.