பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் சமூக ஊடகங்களில் தங்களது வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளனர்.
பெரியார் பிறந்த நாளையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அவரை நினைவு கூர்ந்து கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ ஜாதியவாதத்தை, மதவாதத்தை கூரிய கருத்துக்களால் நொறுக்கிய கேள்வித் தடி தந்தை பெரியாரின் தடி. சமத்துவம், சமூகநீதி, பெண் விடுதலை ஆகிய உயரிய கோட்பாட்டு வேள்விகளை நம்மில் விதைத்த அவர்தம் பிறந்தநாளில், அடிப்படைவாதத்திற்கு துளியும் இடமின்றி, யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பொதுவுடைமைச் சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம். தந்தை பெரியாரின் புகழ் ஓங்குக!” என்று குறிப்பிட்டுள்ளார்.