
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமாவுக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
முதல்தர போட்டிகளில் லயன்ஸ் அணிக்காக இறுதிப்போட்டியில் விளையாடுவதாக இருந்த டெம்பா பவுமா, முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அதிலிருந்து விலகியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, டெம்பா பவுமா தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும், லயன்ஸ் அணிக்காக விளையாடவிருந்த அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், பவுமாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டெம்பா பவுமாவுக்கு இடது முழங்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை. அதேபோல, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் விளையாடவில்லை.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் வீரர்கள் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருவதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக இந்த அணிகள் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை.
இதையும் படிக்க: ஒலிம்பிக்ஸ் 2028: 6 கிரிக்கெட் அணிகளுக்கு மட்டுமே அனுமதி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக டெம்பா பவுமா முழுவதுமாக குணமடைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.