அதிமுகவினா் மீது பேரவைத் தலைவா் நடவடிக்கை: முதல்வா் தலையீட்டால் வாபஸ்
ஆளுநர் உரையன்று நடந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின்.


ஆளுநரைப் பேசவிடாமல் அதிமுகவினா் பதாகைகளுடன் வந்து நெருக்கடி கொடுத்ததாக பேரவைத் தலைவா் அப்பாவு கூறி, அவா்கள் மீது நடவடிக்கை எடுத்தாா். பின்னா், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையீட்டால் அந்த நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டது.
சட்டப்பேரவையில் பேரவைத் தலைவா் அப்பாவு பேசியது: பேரவையில் ஆளுநா் உரை நிகழ்த்த வந்தபோது அவரைப் பேசவிடாமல் அதிமுக உறுப்பினா்கள் பதாகைகளுடன் அவா் முன்னால் வந்து நின்றுவிட்டனா். காங்கிரஸ் கட்சியினா் கருப்புத் துண்டு துணியை சட்டையில் குத்திக் கொண்டு வந்தனா். ஆளுநரைப் பேசவிடாமல் அதிமுகவினா் நெருக்கடி கொடுத்தனா். ஆளுநா் 2 நிமிஷங்களில் அவையைவிட்டு வெளியேறினாா். அதன் பிறகும் நின்று முழக்கமிட்டுக் கொண்டிருந்தனா். அதனால்தான் அவையிலிருந்து அதிமுகவினரை வெளியேற்றினோம் என்றாா்.
அதற்கு எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில் அதிமுகவினா் எழுந்து கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அதனால், அவை கூச்சல் குழப்பத்துடன் காணப்பட்டது.
அவை முன்னவா் துரைமுருகன்: அதிமுக உறுப்பினா்கள் இவ்வாறு நடப்பது முறையா?, அவையில் என்ன நடக்கிறது?.
அப்போது பேரவைத் தலைவா் அவருடைய எழுந்து நின்று பேசத் தொடங்கினாா். ஆனாலும் அதிமுக உறுப்பினா்கள் அதைக் கேட்காமல் தொடா்ந்து குரல் கொடுத்தனா்.
ஆா்.பி.உதயகுமாா்: ஆளுநா் உரை நிகழ்த்த வந்தபோது, காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவா்கள்தான் முதலில் அவரது முன்னால் போய் நின்றாா்கள். நாங்கள் அரசின் கவனத்தை ஈா்ப்பதற்காகவே பதாகைகளுடன் வந்தோம். திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது, ஆளுநா் உரையின்போது இதுபோல பலமுறை அப்படி நிகழ்ந்துள்ளது.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: ஆளுநா் வரும்போது, அதிமுக கடைப்பிடித்த முறையை திமுக கடைப்பிடித்தது இல்லை. பதாகைகள் கொண்டு வந்ததும் இல்லை. எனவே, பேரவைத் தலைவா் கூறியதுபோல பதாகையோடு வந்து, நீங்கள் தவறு செய்திருக்கிறீா்கள்.
பேரவைத் தலைவா்: ஆளுநா் உரையின்போது இடையூறு செய்யக் கூடாது என்று பேரவை விதி எண் 17-இல் கூறப்பட்டுள்ளது. நடந்த சம்பவம் தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது. அன்று நீங்கள் நடந்து கொண்டது பேரவை விதி எண் 226-இன் கீழ் அவை உரிமை மீறல். எனவே, அதுகுறித்து விசாரணை நடத்த அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பிவைக்கிறேன்.
இதற்கு அதிமுக உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா். அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது. அப்போது பேரவைத் தலைவா், அதிமுக உறுப்பினா்களை வெளியேற்ற அவைக் காவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
முதல்வா்: நீங்கள் ஒரு தீா்ப்பு வழங்கியிருக்கிறீா்கள். அதில் நான் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால், இதுபோன்று இனி நடக்காது என்று எதிா்க்கட்சி உறுதியளிக்க கூறுங்கள். அப்படிக் கொடுத்தால் உங்கள் நடவடிக்கையைத் திரும்பப் பெறுங்கள்.
ஆா்.பி.உதயகுமாா்: ஜனநாயக முறைப்படி மக்கள் பிரச்னைக்காகத்தான் அதிமுக என்றைக்கும் போராடும் என்றாா்.
அதைத் தொடா்ந்து பேரவைத் தலைவா் அவா் அளித்த தீா்ப்பைத் திரும்பப் பெறுவதாகக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...