
அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வளர்ப்பு நாயால் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உரிமையாளர் படுகாயமடைந்துள்ளார்.
டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜெரால்டு கிர்க்வுட், இவர் தனது வீட்டில் ஓரியோ எனப் பெயரிட்டு பிட் புல் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 10) அதிகாலை 4 மணியளவில் ஜெரால்டு அவரது காதலியுடன் உறங்கி கொண்டிருந்தார்.
அப்போது, அவர்களது படுக்கையின் மீது அவரது வளர்ப்பு நாய் தாவி குதித்து விளையாடியதில் ஜெரால்டுக்கு சொந்தமான துப்பாக்கியினுள் அந்த நாயின் கால் சிக்கி அதனை வெடிக்க செய்ததாகக் கூறப்படுகிறது. இதில், அவரது வலது தொடையினுள் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்துள்ளார்.
இதையும் படிக்க: ரயில் சிறைப்பிடிப்பு: 20 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை! 400 பயணிகளின் கதி என்ன?
இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் ஜெரால்டை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர் அவர் தற்போது நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜெரால்டின் காதலி கூறுகையில், ஓரியோ விளையாட்டுத் தனமான நாய் என்றும் அந்த இதுபோல் அடிக்கடி குதித்து விளையாடும் என்றும் அவ்வாறு விளையாடுகையில் தற்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை விபத்தாக பதிவு செய்துள்ள அந்நாட்டு காவல் துறையினர் துப்பாக்கி போன்ற ஆயுதங்களின் உரிமையாளர்கள் அதற்கேற்ற முறையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.