'நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!' - மு.க. ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதில்!

பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து.
TN Chief Minister Stalin, EPS
முதல்வர் மு.க. ஸ்டாலின் |அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிIANS
Published on
Updated on
1 min read

பொள்ளாச்சி தீர்ப்பு குறித்த முதல்வர் மு.க. ஸ்டாலினின் கருத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதில் கருத்து கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்ற நிலையில் கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி இன்று தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும் திருநாவுக்கரசு, மணிவண்ணனுக்கு தலா 5 ஆயுள் தண்டனையும் ஹெரோன்பால், சதீஷுக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் வசந்தகுமாருக்கு 2 ஆயுள் தண்டனையும் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்கு தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலினும் இதற்கு வரவேற்பு தெரிவித்ததுடன், 'அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்!' என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார்.

இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

"அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு.

உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது.

வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள்.

யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?

-அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

- 'யார் அந்த சார்' என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த சாரைக் காப்பாற்றத் துடிக்கும் நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

- அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க , மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!

நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது.

இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்ஸோ வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com