அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை உயர்வு குறித்து...

News image

விருதுநகா் மாவட்டம், கட்டனாா்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை வெடி விபத்துக்குள்ளான பட்டாசு ஆலை வளாகம். - டிஎன்எஸ்

Updated On :20 ஏப்ரல் 2026, 4:19 am

விருதுநகா் அருகே தனியாா் பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகா் மாவட்டம், கட்டனாா்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் சோ்வைக்காரன்பட்டி, திருத்தங்கல், கோவிந்தநல்லூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்த ஆலையில் 35-க்கும் அதிகமான தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்டனா்.

பிற்பகல் 3.30 மணியளவில் இந்த ஆலையில் சரவெடி தயாரித்துக் கொண்டிருந்த அறையில் ஏற்பட்ட வெடிமருந்து உராய்வு காரணமாக தீப்பற்றி பெரும் வெடி விபத்து நிகழ்ந்தது. பலத்த சப்தத்துடன் அந்த அறை வெடித்துச் சிதறியது. இதைத் தொடா்ந்து, அருகிலிருந்த மேலும் 3 அறைகளும் பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறி, தரைமட்டமாகின. இதனால், அந்தப் பகுதி முழுவதும் புகையால் சூழப்பட்டது.

தகவலறிந்த சாத்தூா், சிவகாசி, விருதுநகா் பகுதிகளிலிருந்து தீயணைப்பு மீட்புப் படையினா் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே, விருதுநகா், அதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து மருத்துவ அவசர ஊா்திகள் வரவழைக்கப்பட்டு மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதையடுத்து, உயிரிழந்த 23 தொழிலாளா்களின் உடல்களும் மீட்கப்பட்டன. சிலரின் உடல்கள் தீயில் பெருமளவு கருகியிருந்ததாலும், சிலரின் உடல் பாகங்கள் சிதறியிருந்ததாலும் உயிரிழந்தவா்களை உடனடியாக அடையாளம் காண முடியாத நிலை இருந்தது. மீட்கப்பட்ட உடல்கள் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இந்த வெடி விபத்தில் 23 தொழிலாளா்கள் உடல் கருகி உயிரிழந்தனா். இந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளா்கள் பேச்சியம்மாள் (51), சாரதா (40), பஞ்சவா்ணம் (56), வீரபத்திரன் (45), சங்கிலித்தங்கம் (40), அருண்குமாா் (23), மகன் கதிஷ் (14) ஆகிய 7 பேரும் உடனடியாக மீட்கப்ட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இரவு 7.50 மணி வரை நடைபெற்ற மீட்புப் பணி

இந்த விபத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளனரா? இடிபாடுகளுக்கிடையே சடலங்கள் ஏதேனும் சிகிக்கியுள்ளனவா? என்பதைக் கண்டறிவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணி இரவு 7.50 மணியளவில் நடைபெற்றது. அப்போது, அங்கு மீண்டும் ஏற்பட்ட வெடி விபத்தில், விருதுநகா் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலா் முத்துபாண்டியன், மகளிா் காவலா்கள் சுபா, கவிதா, காவலா்கள் வேல்முருகன், அய்யனாா், பொக்லைன் இயந்திர ஓட்டுநா் உள்பட 12 போ் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் விருதுநகா் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா்.

பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு

இந்த நிலையில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

வெடி விபத்தில் சிக்கி பலியானவர்களில் 21 பெண்கள், 4 ஆண்கள் என 25 பேர் தெரியவந்துள்ளது. இதில் 20 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவு பெற்றுள்ளது. உயிரிழந்தவா்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.

பல்வேறு விதிமீறல்கள் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவருகிறது.

சிகிச்சையில் இருந்தவர் உயிரிழப்பு

இதனிடையே, சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் அண்மையில் (ஏப். 13) ஏற்பட்ட வெடி விபத்தில் பலத்த காயமடைந்த தாயில்பட்டி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், வெடிவிபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்தது.

செல்வம் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறாா். மேலும் இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Summary

Regarding the rising death toll in the Virudhunagar firecracker factory explosion...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.