சருமத்தைப் பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் 10 சிறந்த வழிகள்!

மாறிவரும் உணவுப்பழக்கங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணிகளால் இன்று பெரும்பாலானோருக்கு அடிக்கடி சருமப் பிரச்னை ஏற்படுகிறது.
சருமத்தைப் பாதுகாக்க மருத்துவர்கள் கூறும் 10 சிறந்த வழிகள்!

மாறிவரும் உணவுப்பழக்கங்கள், சுற்றுச்சூழல் உள்ளிட்ட காரணிகளால் இன்று பெரும்பாலானோருக்கு அடிக்கடி சருமப் பிரச்னை ஏற்படுகிறது. என்னதான் அவ்வப்போது இயற்கை வழிமுறைகளைக் கையாண்டாலும் பாதிப்பு என்னவோ இருக்கத்தான் செய்கிறது. 

சருமத்தைப் பராமரிக்க சிறுசிறு விஷயங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தினாலே போதுமானது. 

குறிப்பாக டீன்-ஏஜ் பெண்கள் பலரும் சருமத்தை முறையாக பராமரிப்பதில்லை. வாரத்தில் ஒரு சில நாள்கள் மட்டும் கவனித்துவிட்டு பின்னர் புலம்புகின்றனர். 

'பொதுவாக, இளம் பெண்களுக்கு அந்த வயதில் உடலில் ஹார்மோன் மாற்றங்களால் சருமப் பிரச்னைகள் வருவது இயல்புதான். மேலும், முகப்பரு வெடிப்புகள், அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, தழும்புகள், வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகள், வெயிலின் தாக்கம், தோல் அழற்சி போன்ற பிரச்னைகளை சந்திக்க நேரிடும். எனவே குறிப்பாக  டீன்-ஏஜ் பெண்கள் சருமப் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர் தோல் மருத்துவர்கள். 

சருமத்தைப் பாதுகாக்க, பராமரிக்க சிறந்த 10 வழிமுறைகள் 

மென்மைக்கு - க்ளென்சர்

முதலில் உங்கள் சருமம் என்ன வகை என்பதைத் தெரிந்துகொண்டு அதனை பராமரிக்கும் நல்ல க்ளென்சரைப் பயன்படுத்துவதும் அவசியம்.

உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தும்போது அதனை மிகவும் மென்மையாக அணுக வேண்டும். கடுமையாக அழுத்தித் தேய்க்கக்கூடாது. கிளென்சரை வட்டமாக அப்ளை செய்ய வேண்டும்.

சோப்பைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அதற்குப் பதிலாக லேசான க்ளென்சரைப் பயன்படுத்துங்கள்.

ஈரப்பதம் - மாய்ஸரைசர்

உங்கள் சருமத்தின் நீரேற்ற அளவைப் பராமரிக்க நீங்கள் எப்போதும் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க இது முக்கியமானது. உங்கள் சருமத்திற்கு ஏற்ற மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தும்போது அது உங்கள் சருமத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உள்ளிருந்து அதை சரிசெய்யும். 

வெயிலுக்கு சன்ஸ்கிரீன்

நீங்கள் வெயிலில் இருக்கும்போது மட்டுமின்றி, வீட்டிற்குள்ளேயும் உங்கள் சருமத்தை சன்ஸ்கிரீன் பாதுகாக்கிறது. குறைந்தபட்சம் எஸ்.பி.எப். 30 கொண்ட சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது உங்கள் சருமப் பராமரிப்பில் கட்டாயம் இருக்க வேண்டும். 

ஸ்க்ரப் 

வெளியில் செல்வதால் சருமத்தில் மாசுக்கள் படியும். முகம் கழுவினாலும் இவை துவாரங்களில் ஒட்டிக்கொள்ளும். சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியும்  சருமத் துளைகளை அடைத்துவிடும். எனவே, இவற்றை அகற்ற வாரம் ஒருமுறை முகத்திற்கு ஸ்க்ரப் செய்ய வேண்டும்.  சந்தையில் பல பெயர்களில் கிடைத்தாலும் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஸ்க்ரப்பைத் தேர்வு செய்யவும். இயற்கையான பொருள்களைப் பயன்படுத்தியும் ஸ்க்ரப் செய்யலாம். 

முகப்பரு

பெண்களுக்கு மிகப்பெரும் எதிரி முகப்பரு. முகப்பருவுக்கு எதிரான அவற்றைக் குறைக்கக்கூடிய க்ரீம்களை மருத்துவர்களின் ஆலோசனையின்படி பயன்படுத்த வேண்டும். 

மேக்கப்புடன் தூங்க வேண்டாம்

படுக்கைக்குச் செல்வதற்கு முன் மேக் அப்பை அகற்றி விட வேண்டும். முடிந்தவரை வெளியில் சென்று வந்தவுடன் அகற்றுவது நல்லது. இரவில் தானாகவே சருமத்தில் ஏற்படும் கோளாறுகள் சரியாகும் என்பதால் சருமத்தில் அழுக்குகள் இல்லாததை தினமும் இரவு உறுதி செய்து கொள்ளுங்கள். 

முகத்தை அடிக்கடி தொட வேண்டாம்

சருமத்தில் பெரும்பாலான பிரச்னைகளுக்கும் முகப்பரு ஏற்படவும் முழு முதற்காரணம் சருமத்தை அடிக்கடி தொடுவதுதான். கைகளில்தான் அதிகப்படியான அழுக்குகள்/பாக்டீரியாக்கள் இருக்கும். எனவே, கைகளால் அடிக்கடி முகத்தைத் தொடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

இரவுநேர பராமரிப்பு

இரவில் தோல் பிரச்னைகள் தானாகவே சரிசெய்யப்படுகிறது. தூங்குவதற்கு முன்பாக க்ளென்சர் கொண்டு முகத்தைக் கழுவி மாய்ஸ்சரைசர், லிப் பாம் தடவி விட்டுச் செல்வது அவசியம்.

சரிவிகித உணவு

உங்கள் உணவில் பச்சைக் காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வறுத்த மற்றும் எண்ணெய் உணவுகளை உட்கொள்வது, பிரச்னையுள்ள சருமத்தில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஆரோக்கியமான வாழ்க்கை முறை: நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், போதிய உடற்பயிற்சி இந்த மூன்றும் மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியத் தேவைகள். இந்த மூன்றையும் சரியாகப் பெற்றால் ஆரோக்கியமான வாழ்க்கை முறை கிடைக்கும். இதன் பலனாக உங்கள் சருமம் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com