ஏடிஎச்டி என்ற வார்த்தையை சமீபமாக அதிகம் கேள்விபட்டிருப்போம். சில மாதங்களுக்கு முன்பாக தென்னிந்தியாவின் பிரபல நடிகர் ஃபகத் ஃபாசில் தனக்கு இந்த குறைபாடு இருப்பதாகவும், தாம் அதற்கு சிகிச்சை எடுத்து வருவதாகவும் சிறப்புக் குழந்தைகளுக்கான தனியார் பள்ளி நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
சிறுவயதிலேயே கவனித்து தகுந்த மருத்துவ உதவிகள் பெற்றால் இதனை குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறியதாகவும் இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு படைப்பாற்றல் அதிகமாக இருக்கும், கலை மற்றும் பிற துறைகளில் பலர் சாதித்துள்ளதாகவும் அதன் நேர்மறை விஷயங்களை சுட்டிக்காட்டினார்.
அடுத்ததாக பிரபல இந்தி நடிகை ஆலியா பட் சமீபத்தில்தான் தனக்கு ஏடிஎச்டி குறைபாடு இருப்பதைக் கண்டறிந்ததாகத் தெரிவித்துள்ளார்.
'சிறுவயதில் இருந்தே நான் மற்றவர்களிடம் இருந்து ஒதுக்கப்பட்டேன். குறிப்பாக வகுப்புகளில் கலந்துரையாடலில் என்னை ஒதுக்கிவிடுவார்கள். சமீபத்தில் பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு ஏடிஎச்டி அளவு அதிகமாக இருந்தது தெரியவந்தது. என்னுடைய நண்பர்களிடம் இதுகுறித்து தெரிவித்தபோது அவர்கள் ஏற்கெனவே தெரியும் என்று கூறினர். என்னால் நாற்காலியில் 45 நிமிடத்திற்கு மேல் இருக்க முடியாது. எந்த வேலையானாலும் அது விரைவாக முடிக்கப்பட வேண்டும் என்று நினைப்பேன்' என்று ஒரு பேட்டியில் கூறினார்.
இவர்கள் மட்டுமல்ல பிரபல நீச்சல் வீரரான மைக்கேல் ஃபெல்ப்ஸ், ஹாலிவுட் நடிகர்கள் வில் ஸ்மித், ஜிம் கேரி, எம்மா வாட்சன், விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் போன்றவர்கள் `ஏ.டி.எச்.டி.' குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
இதையும் படிக்க | சர்க்கரை நோய்! கண்டறிவதும் தடுப்பதும் எப்படி?
ஏடிஎச்டி என்பது என்ன?
ஏடிஎச்டி என்பது அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர். இது கவனக்குறைவு/ மிகையியக்கக் குறைபாடு ஆகும். இது பெரும்பாலும் குழந்தைகளைப் பாதிக்கிறது. குழந்தைகள் வளரும்போது இது சரியாகிவிடலாம். சிலருக்கு கடைசிவரை பாதிப்பு இருக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஏடிஎச்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கவனச்சிதறல் அதிகம் இருக்கும், அதேநேரத்தில் அவர்கள் வழக்கத்திற்கு மாறாக மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகின்றனர்.
பெண்களைவிட ஆண்கள்தான் இந்த குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 5-8% பேர் ஏடிஎச்டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
அறிகுறிகள் என்னென்ன?
கவனச்சிதறல்: எந்தவொரு செயலிலும் கவனம் செலுத்துவதில் சிரமம் இருக்கும்.
மறதி: முக்கிய நபர்களுடனான சந்திப்பு, தேதி, காலம், தினசரி பணிகள் போன்ற விஷயங்களில் மறதி ஏற்படும். பொருள்களை வைத்த இடங்கள் மறந்துபோகலாம்.
துரித செயல்பாடு: எதையும் யோசிக்காமல் செயல்படுவது. பின்விளைவுகளை யோசிக்காமல் அவசரமாக முடிவெடுப்பது. பிறர் உரையாடும்போது காத்திருக்க முடியாமல் இடையில் பேசுவது.
அமைதியின்மை/ படபடப்பு: அதிவேகமாக இயங்குவது ஒருவித அமைதியின்மை அல்லது படபடப்பை உணரலாம். இவர்கள் நீண்ட நேரம் ஓய்வெடுப்பதோ அல்லது அமைதியாக உட்காருவதோ கடினம்.
ஒழுங்கின்மை: ஏடிஎச்டி உள்ளவர்களுக்கு பணிகளை ஒருங்கிணைப்பது சவாலானது. அதுபோல அவர்களால் தங்களுடைய எண்ணங்களை ஒருங்கிணைப்பதும் கடினம்.
பணிகளை முடிப்பதில் சிரமம்: ஏடிஎச்டி உள்ளவர்கள் ஒரு வேலையைத் தொடங்கினால் அதனை முடிப்பது அரிது. ஏனெனில் எளிதில் கவனச்சிதறல் ஏற்பட்டு வேறு வேலையில் இறங்குவார்கள்.
இதையும் படிக்க | பக்கவாதம் ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன? - நம்பிக்கையும் உண்மையும்!
கவனிக்கும் திறன்: எதிர்தரப்பினர் பேசும்போது இவர்களால் முழுமையாக கவனிக்க முடியாது. இது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். முக்கியமான தகவல்களை இழக்க நேரிடும்.
மன அழுத்தம்: பணிகளை சரியாக முடிக்க முடியாதது, கவனச் சிதறல் உள்ளிட்ட பிரச்னைகளால் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
மிகை இயக்க செயல்பாடு: கை, கால்களை அசைத்துக்கொண்டே இருப்பது, இருக்கையில் அடிக்கடி நெளிந்து கொண்டே அமர்வது, இவர்களால் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் ஒரு இடத்தில் இருக்க முடியாது.
அதிகமாக பேசுவது, எதிர் தரப்பினரை பேசவிடாமல் பேசுவது.
அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை போன்ற திடீர் மனநிலை மாற்றம்
எந்தவொரு வேலையிலும் அதிவேகமாக செயல்படுவது.
இந்த அறிகுறிகள் பொதுவானதுதான். அவ்வப்போது ஏற்பட்டால் பிரச்னை இல்லை, இந்த அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு ஏடிஹெச்டி குறைபாடு இருக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவனக்குறைவு மட்டும் இருக்கலாம் அல்லது மிகை இயக்கம் மட்டும் இருக்கலாம், அல்லது இரண்டுமே இருக்கலாம் என்கின்றனர்.
குழந்தைகளிடம் சிறு வயதிலே கண்டறிந்தால் குணப்படுத்தலாம் இல்லையெனில் பெரியவர்கள் ஆனதும் பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
காரணங்கள்:
மூளையில் உள்ள நரம்புக் கடத்திகளில் உள்ள பிரச்னை காரணமாக ஏடிஎச்டி குறைபாடு ஏற்படுகிறது. இது மூளையில் உள்ள டோபமைன் எனும் ஹார்மோன் அளவைக் குறைப்பதால் ஏற்படுகிறது.
குழந்தை கருவில் இருக்கும்போது மூளை வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு, குறைப் பிரசவம் அல்லது குறைவான எடையுடன் குழந்தை பிறப்பது.
குழந்தை கருவில் இருக்கும்போது கர்ப்பிணிகள் மது அருந்துதினாலோ புகை பிடித்தாலோ அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலோ குழந்தைகளுக்கு ஏடிஎச்டி பாதிப்பு ஏற்படலாம்.
குழந்தைகளிடையே சமீபத்தில் செல்போன், டிவி உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது ஏடிஎச்டி குறைபாடு அதிகரிப்பிற்கு காரணம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
மரபியல் காரணங்களும் இருக்கலாம். குடும்பத்தில் யாருக்கேனும் ஏடிஎச்டி குறைபாடு இருந்தால் குழந்தைகளுக்கும் ஏற்படும்.
பிறக்கும்போதே மூளை நரம்பில் பிரச்னைகள் உள்ள குழந்தைகளுக்கு ஏடிஎச்டி குறைபாடு ஏற்படலாம்.
குழந்தை கருவில் இருக்கும்போதோ அல்லது பிறந்தபின்னரோ காற்று மாசில் உள்ள நச்சுப் பொருள்களாலும் வைரஸ் தொற்றுகளாலும் இந்த குறைபாடு ஏற்படலாம்.
சிகிச்சைகள்
பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரைப் பொருத்தும் சிகிச்சைகள் மாறுபடும்.
முதலில் மருத்துவர்கள் உளவியல் சோதனை மேற்கொள்வார்கள்.
மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப, மூளையில் நிகழும் மாற்றங்களை சரிசெய்ய மருந்து, மாத்திரைகளை எடுக்கலாம்.
உணவு, உடற்பயிற்சி, யோகா உள்ளிட்ட மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சிகள் உதவும்.
நடத்தைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் உளவியல் சிகிச்சையும் இதற்கு அவசியம்.
சிகிச்சைகளின் மூலமாக இதன் அறிகுறிகளை குறைக்க முடியுமே தவிர, இதனை முற்றிலும் குணப்படுத்த முடியாது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் நிலையைப்பொறுத்து இது மாறுபடும் என்கின்றனர்.