
வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும் என்று சிலர் நம்புகின்றனர். இது உண்மைதானா?
உடல் பருமன் பிரச்னை குறித்து இப்போது அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஏனெனில் பல்வேறு நோய்கள் ஏற்படக் காரணமாக இருப்பது உடல் பருமன்தான். இந்த காலகட்டத்தில் உடல் பருமன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், உடல் எடையைக் குறைக்க பலரும் பல வழிகளில் முயற்சி செய்து வருகின்றனர். அதிலும் உடற்பயிற்சி செய்யாமல் அதேநேரத்தில் உணவையும் குறைக்காமல் உடல் எடையைக் குறைக்க வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒன்றாக வெந்நீர் குடித்தால் உடல் எடை குறையும், தொப்பை குறையும் என்று சிலர் நம்புகின்றனர். காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடித்தால், சாப்பிட்டவுடன் வெந்நீர் குடித்தால் உடலில் கொழுப்புகள் சேராது கரைந்துவிடும், உடல் எடையைக் குறைக்கும் என்று நம்புகின்றனர். இது உண்மைதானா?
மனித உடல் 70- 75 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. எனவே, உடலுக்கு நீர்ச்சத்து அவசியமான ஒன்று. உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கமடைந்திருப்பவர்களைப் பார்த்திருப்போம். அதனால் உடலுக்கு போதிய அளவு தண்ணீர் தேவை.
உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க, தினமும் குறைந்தது 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் பரிந்துரைக்கிறது. ஒருவரின் வயது, பாலினம், உடல் செயல்பாடுகளைப் பொருத்து எடுத்துக்கொள்ளும் தண்ணீர் அளவு மாறுபடலாம்.
இப்போது தண்ணீரை சூடாக்கி கொதிக்கவைத்து குடிக்கும்போது அதில் உள்ள கிருமிகள் ஓரளவு அழிந்துவிடுவதால் பல்வேறு வகை தொற்றுகளைத் தடுக்கலாம்.
இதையும் படிக்க | தைராய்டு பிரச்னையா! இதைச் சாப்பிடுங்கள்!!
மேலும், வெந்நீர் குடிப்பது செரிமானப் பிரச்னைகளைத் தவிர்த்து செரிமானத்தை ஊக்குவிக்கும். ஏனெனில் உணவில் உள்ள மூலக்கூறுகளை இது உடைத்து செரிமானத்தை எளிதாக்குகிறது. உடலில் உள்ள நச்சுகளை எளிதாக வெளியேற்றும். இதனால் மலச்சிக்கல் வராது, சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.
வெந்நீர் குடிப்பது, உணவை ஆற்றலாக மாற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு பெரிதும் பங்களிக்கிறது.
குளிப்பதற்கு முன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பதும் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
அதனால்தான் அசைவ உணவுகள் அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்க பலரும் அறிவுறுத்துகின்றனர். சிலர் சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். இது செரிமானத்தைக் கடினமாக்குகிறது. இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிலும் பிரிட்ஜில் இருந்து 'ஜில்' என்று இருக்கும் தண்ணீரை அப்படியே அருந்துவதால் உடல்நலத்திற்கு பல பிரச்னைகள் ஏற்படுவதாக எச்சரிக்கின்றனர்.
இதையும் படிக்க | புற்றுநோய்க்கு மருந்தாகிறதா காளான்? - புதிய கண்டுபிடிப்பு!
வெந்நீர் குடிப்பதனால்...
ஆனால், வெந்நீர் குடிப்பதனால் உடல் எடை குறையுமா என்றால் இல்லை.
காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிப்பதனால் உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்கிறது. உணவுகள் செரிமானம் ஆகி நச்சுகளை வெளியேற்றுகிறது. மாறாக, உடல் எடை குறைவதில்லை. வெந்நீர் குடித்துவிட்டு சிறிது உடற்பயிற்சி செய்தால் மட்டுமே உடல் எடை குறையும்.
ஏனெனில், காலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக உடற்பயிற்சி செய்யும்போது(பசியுடன் இருக்கும்போது) உடல் கலோரிகளை வேகமாக எரிக்கும். இதனாலே உடல் எடை குறையும்.
அதேபோல சாப்பிடுவதற்கு முன் வெந்நீர் குடிக்கும்போது, நாம் சாப்பிடும் உணவின் அளவு குறையும். தண்ணீர் அதிகமாக குடிக்கும்போது அது வயிற்றை ஓரளவு நிரப்பிவிடும். அதிகமாக சாப்பிட முடியாது. இது உடல் எடையைக் குறைப்பதற்கு மறைமுகமாக உதவுகிறது.
எனவே, உடலில் கொழுப்புகள் அதிக நேரம் தாங்காமல் விரைவான செரிமானத்திற்கும் உடல் புத்துணர்ச்சிக்கும் வெந்நீர் தொடர்ந்து அருந்தலாம்.
மாறாக, காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் சூடான தண்ணீரைக் குடித்த பின்னர், உடற்பயிற்சி செய்வது மட்டுமின்றி உணவுக் கட்டுப்பாடும் இருந்தால் மட்டுமே உடல் எடையைக் குறைக்க முடியும்.
அதிலும் தொப்பை அதிகமாக இருந்தால், வயிற்றுச் சதைப் பகுதியைக் குறைக்க தொடர் உடற்பயிற்சிகள் தேவை. உடலில் உள்ள கொழுப்புகள் கடைசியாக சேருமிடம் வயிற்றுப்பகுதிதான். மற்ற பகுதிகளில் சேரும் கொழுப்புகளைவிட வயிற்றில் சேரும் கொழுப்புகளைக் கரைப்பது சற்று சிரமம்தான் என்றாலும் உணவுக் கட்டுப்பாட்டின் மூலமும் உடற்பயிற்சிகளின் மூலமும் குறைக்கலாம்.
இதையும் படிக்க | குழந்தை குண்டாக இருக்கிறதா? எச்சரிக்கும் மருத்துவர்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.