காய்ச்சலுக்கு ஆன்டி - பயாடிக் எடுக்கலாமா? தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது? - மருத்துவர் சொல்வது என்ன?

தொற்றுநோய் பரவுதல் பற்றி மருத்துவரின் நேர்காணல்...
காய்ச்சலுக்கு ஆன்டி - பயாடிக் எடுக்கலாமா? தொற்று எப்படியெல்லாம் பரவுகிறது? - மருத்துவர் சொல்வது என்ன?
Published on
Updated on
3 min read

- டாக்டர் ராமசுப்ரமணியன்

கிருமிகளினால் ஏற்படக்கூடிய நோய்கள் அனைத்துமே தொற்றுநோய்களின் கீழ் வரும். இது எங்கும் பரந்து விரிந்திருக்கக் கூடியது. இது பாக்டீரியாவாகவோ வைரஸாகவோ பூஞ்சைகளாகவோ இருக்கலாம். ஒட்டுண்ணிகளால்கூட ஏற்படலாம். சில நேரங்களில் மாசுபட்ட உணவுகளைச் சாப்பிடுவதால் மலத்தில் பூச்சி/புழுக்கள் ஏற்படலாம். இதெல்லாமே ஒட்டுண்ணிகள்தான். இவை அனைத்துமே தொற்றுநோய்களுக்குக் கீழ் வரக்கூடியதுதான்.

தொற்றுநோய்களின் வகைகள்

தொற்றுநோய்களை இரண்டாகப் பிரிக்கலாம்

தொற்றுநோய் - எளிதாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவக்கூடியது.

உதாரணமாக சொறிசிரங்கு. அதேபோல காசநோய் என்பது பாதிக்கப்பட்ட ஒருவரின் அறையில் இருந்தாலே அடுத்தவருக்குப் பரவிவிடும்.

சின்னம்மை காற்று மூலமாகப் பரவக்கூடியது. சின்னம்மை பாதிக்கப்பட்ட ஒருவருடன் இருக்கும்போது 10 நிமிடங்களில் அடுத்தவருக்குப் பரவிவிடும்.

அதுவே சில தொற்றுநோய்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அவ்வளவு எளிதில் பரவாது. ஆனால் இதுவும் தொற்றுநோய்களுக்குக் கீழ்தான் வரும்.

எப்படிப் பரவுகிறது?

இருமலின் மூலமாக கிருமி வெளியேவந்து காற்று மூலமாக அடுத்தவருக்கு தொற்று பரவுவது. உதாரணமாக கரோனா தொற்று.

மாசுபட்ட உணவு/ நீர் - பழையசோற்றில் ஸ்டபலோகாக்கஸ் என்ற கிருமி இருந்தால் அது சில நச்சுகளை உருவாக்குகிறது. இதைச் சாப்பிடும்போது நமக்கு கிருமித் தொற்று ஏற்படும்.

ஹெபடைட்டிஸ் ஏ, ஹெபடைட்டிஸ் இ போன்ற வைரஸ்கள் பாதிக்கப்பட்டவரின் மலம் மூலமாக வெளியேறுகிறது. அதேபோல டைபாய்டு வைரஸும் மலம் மூலமாக வெளியேறும். இது மற்றவர்கள் குடிக்கின்ற தண்ணீர் அல்லது உணவில் கலக்கும்போது பரவுகிறது.

அடுத்து தொடுதலின் மூலமாக தொற்று ஏற்படுவது. ஹெர்பிஸ் சிம்ப்ளெக்ஸ் - சிலருக்கு வாயைச் சுற்றி புண் இருக்கும். பல்லியின் சிறுநீரால் வந்திருக்கிறது என்று சொல்வார்கள். இந்த புண்ணை ஒருவர் தொடும்போதோ அல்லது பாதிக்கப்பட்டவர் மற்றவருக்கு முத்தம் கொடுக்கும்போதோ பரவும்.

மலேரியா போன்ற நோய்கள் எப்படிப் பரவுகிறது என்றால், பாதிக்கப்பட்டவரை ஒரு சில கொசுக்கள் கடித்து அந்த கொசு வேறு ஒருவரை கடிக்கும்போது (ரத்தத்தின் மூலமாக) மற்றவருக்குப் பரவுகிறது.

அதனால் தொற்றுகள் பரவுதலில் பல விதங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நோய்க்கும் இது மாறுபடும். இதைத் தடுக்க வேண்டுமென்றால் தனித்தனி வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும். எல்லாவிதத் தொற்றையும் ஒரேமாதிரியான முறையில் தடுக்க முடியாது.

எந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?

எனவே, தொற்றுகள் பற்றி அதிகம் தெரிந்துகொண்டு எந்தத் தொற்றுகள், எதன் மூலமாகப் பரவுகிறது?அதை எப்படித் தடுக்கலாம்? எந்தத் தொற்றுக்கு எந்த மாதிரியான மருந்துகள் எடுத்துக்கொண்டால் நல்லது? என தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

பாக்டீரியா தொற்று என்றால் பாக்டீரியா எதிர்ப்பு(ஆன்டி- பயாட்டிக்) மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றுகளுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒட்டுண்ணி பாதிப்புகளுக்கு வேறுவிதமான சிகிச்சை முறை.

உதாரணமாக வயிற்றுப்போக்கு பலவித காரணங்களால் ஏற்படலாம். பாக்டீரியா அல்லது வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளால் ஏற்படலாம். எல்லாவற்றுக்கும் ஒரே மருந்தை எடுத்துக்கொண்டால் அது சரியல்ல.

அதனால் மருத்துவரை அணுகி எந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது என்று கண்டறிந்து மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் என்பது 99% தொற்றுகளினால்தான் ஏற்படுகிறது. அதனால் காய்ச்சல் ஏற்படும்போது ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மருந்தை உட்கொண்டால் சரியாகிவிடும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது தவறான விஷயம். இதுவுமே பாக்டீரியா அல்லது வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளால் ஏற்படலாம். எனவே, எதனால் ஏற்பட்டது என்று கண்டறிவது முக்கியம். உதாரணமாக அறிகுறிகளை வைத்து கண்டறியலாம்.

உடல் வலி, தொண்டை வலி, ஜலதோஷம், இருமல் இருக்கிறது என்றால் இது வைரஸ் தொற்று. இது ஒரு வைரஸ் அல்ல, பல வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஆன்டி- பயாட்டிக் எடுத்துக்கொள்வதால் ஒரு பிரயோஜனமும் இல்லை.

அதனால் எந்தக் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதோ அதற்கு எதிரான மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். வைரஸ் தொற்றுகளுக்கு கண்டிப்பாக ஆன்டி- பயாட்டிக் எடுக்கக்கூடாது.

எப்போது ஆன்டி- பயாட்டிக் எடுத்துக்கொள்ள வேண்டும்?

எப்போது காய்ச்சலுடன் இருமல் மற்றும் சளி அதிகமாக வருகிறதோ அது நிமோனியா பாதிப்பு இருக்கிறது என்று அர்த்தம். இது பாக்டீரியாவால் ஏற்படக்கூடியது. இதற்கு ஆன்டி- பயாட்டிக் எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து ஏதேனும் அடிபடும்போது தொற்று ஏற்படுகிறது அல்லது கொப்புளம் ஏற்பட்டு சீழ் சேர்ந்து வரலாம். இதுவும் பாக்டீரியாவால் ஏற்படக்கூடியது. இதற்கும் ஆன்டி- பயாட்டிக் எடுத்துக்கொள்ளலாம்.

வயிற்றுப்போக்கு என்பது வைரஸால் ஏற்படுவது. ஒருவேளை பாக்டீரியாவால் ஏற்பட்டால் 2-3 நாள்களில் தானாகவே சரியாகிவிடும். இதற்கு ஆன்டி- பயாட்டிக் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தலைவலி ஏற்படும்போது சில நேரங்களில் ஆன்டி- பயாட்டிக் அவசியம்.

காய்ச்சல் தொடர்ந்துஇருக்கும்போது மருந்தகங்களில் சென்று ஆன்டி- பயாட்டிக் வாங்கி சாப்பிடுவது தவறு.

பாக்டீரியா தொற்றுகளுக்கு மட்டும் ஆன்டி- பயாட்டிக் மருந்துகளை அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

எது பாக்டீரியா தொற்று என தெரிந்துகொள்வதற்கு மருத்துவரை அணுகி அதன்பின்னர் மருந்துகளை எடுத்துக்கொள்வதே சிறந்தது.

பாக்டீரியா தொற்று ஏற்படும்போது ஆன்டி- பயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் சில நேரங்களில் பாக்டீரியாவின் வீரியம் குறைவதில்லை. காரணம் அந்த பாக்டீரியா உருமாறி விடுகிறது. அதனால் ஆன்டி- பயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொண்டாலும் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

பாக்டீரியா அடுத்தடுத்த நிலைகளுக்கு உருமாறியிருக்கும். இதற்கு விலை உயர்ந்த சில ஆன்டி- பயாட்டிக் மருந்துகளை எடுத்துக்கொண்டால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

முந்தைய காலத்தில் பயன்படுத்திய ஆன்டி- பயாட்டிக் மருந்துகள் எல்லாம் இப்பொது பயன்படுவதில்லை. காலத்திற்கேற்ப பாக்டீரியா தொற்றுக்கு ஏற்ப மருந்துகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாக்டீரியா உருமாற்றத்தினால் இன்னும் 50 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு 1 கோடி மக்கள் உயிரிழக்க நேரிடலாம்.

முந்தைய காலத்தில் ஆன்டி- பயாட்டிக் இல்லாமல் பலர் செத்துக்கொண்டிருந்தார்களோ அதே நிலைமை இப்போது வர வாய்ப்புள்ளது.

அதேமாதிரி ஆன்டி- பயாட்டிக் மருந்துகளை தேவைக்கேற்ப மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைரஸ் பாதிப்புகளுக்கு எந்தவித மருந்துகளும் தேவையில்லை. ஒரு 4-5 நாள்களில் சரியாகிவிடும். உடலில் உள்ள நோயெதிர்ப்பு சக்தியே அதை சரிசெய்துவிடும். அதிகபட்சமாக வைரஸ் எதிர்ப்பு சாதாரண மருந்துகளை எடுத்துக்கொண்டாலே போதுமானது.

சில வைரஸ்கள் மட்டும்தான் தீவிரமானவை. சின்னம்மை, ப்ளு காய்ச்சல் ஆகியவற்றுக்கு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அனைத்து வைரஸ்களுக்கும் மருந்து எடுக்கத் தேவையில்லை. வைரஸ் மருந்துகள் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

மருந்துகளுக்கு காலாவதி தேதி என்பது கிடையாது. காலாவதி தேதிக்குள் பயன்படுத்தினால் மருந்து முழுமையாக வேலை செய்யும். காலாவதி தேதிக்குப் பின்னர் எடுத்துக்கொள்ளும்போது அதன் தரம் குறையும். மருந்தின் வீரியம் குறைய வாய்ப்புள்ளது. அதனால்தான் காலாவதியான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றுபரிந்துரைக்கிறார்கள் . தவிர அதனால் பாதிப்பு ஒன்றுமில்லை.

(கட்டுரையாளர் - தொற்றுநோய் நிபுணர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com