திருநங்கைகளுக்கு அரசியல் அங்கீகாரம் அவசியம்!
"நீ விரும்பும் மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு என்ற பொன் மொழிக்கேற்ப அரசியல் அரங்கில் பயணிக்கத் தொடங்குகிறேன்' என விழிகளில் நம்பிக்கை விரியப் பேசத் தொடங்குகிறார் ராதா.


"நீ விரும்பும் மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு என்ற பொன் மொழிக்கேற்ப அரசியல் அரங்கில் பயணிக்கத் தொடங்குகிறேன்' என விழி
களில் நம்பிக்கை விரியப் பேசத் தொடங்குகிறார் ராதா.
தென் சென்னைத் தொகுதியில் போட்டியிடும் அவர், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களத்தில் இருக்கும் ஒரே திருநங்கை என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் படித்துள்ள பட்டதாரியான ராதா, திருநங்கைகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தகுதிகளும், திறமைகளும் தன்னகத்தே இருந்தாலும், பாலினத்தைக் காரணம் காட்டி பல நிறுவனங்கள் வேலை தர மறுத்ததாக வேதனை தெரிவிக்கும் அவர், திருநங்கைகளுக்கு அரசியல் அங்கீகாரம் தேவை என்பதற்காக தேர்தலில் போட்டியிடுவதாகத் தெரிவிக்கிறார். சமூகப் புறக்கணிப்புகளைக் கடந்து சாதிக்க நினைக்கும் அவர் தினமணிக்கு அளித்த பேட்டி:
தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?
சிறுவயதில் இருந்தே அரசியல் சார்ந்த கட்டுரைகள், செய்திகளை மிகவும் ஆர்வத்துடன் படிப்பேன். நான் திருநங்கை என்று உணர்ந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறி, மந்தைவெளியில் உள்ள திருநங்கைகளுடன் இணைந்து வாழத் தொடங்கினேன். அப்போதுதான் இந்த சமூகத்தால் திருநங்கைகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை என்னால் உணர முடிந்தது. காவல் அதிகாரி, வழக்குரைஞர், மருத்துவர் என்று பல துறைகளில் திருநங்கைகள் முத்திரையைப் பதித்தாலும், வெகு மக்களிடையே திருநங்கைகள் என்றாலே பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் செய்பவர்கள்தான் என்ற ஒரு மோசமான கண்ணோட்டம் உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தை மாற்றம் வேண்டும் எண்ணமும், அனைத்துக்குமான தீர்வு அரசியல் என்பதினாலேயே தேர்தலில் போட்டியிட முடிவு செய்தேன்.
மக்கள் மத்தியில் உங்களுக்கு ஆதரவு எப்படி உள்ளது?
முதலில் மக்கள் என்னை தயக்கத்துடனே பார்த்தனர். ஆனால், எனது அணுகுமுறை, உழைப்பைப் பார்த்துவிட்டு தற்போது வீட்டுக்குள் அழைத்துப் பேசுகின்றனர். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெறுவேனா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இனி வரும் தேர்தல்களில் திருநங்கைகள் சுயேச்சையாக போட்டியிட நான் உந்துசக்தியாக இருப்பேன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
பெரிய கட்சிகள் திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமல் இருப்பது வருத்தமாக இல்லையா?
சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களை கட்சியில் சேர்த்துக் கொள்ளவே தயங்கிய கட்சிகள் தற்போது, அடிப்படை உறுப்பினர், தகுதி உள்ளவர்களுக்கு பொறுப்புகளை வழங்குகின்றன. அந்த அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், தகுதி அடிப்படையில் திருநங்கைகளுக்கு பெரிய கட்சிகள் தேர்தலில் வாய்ப்பு கொடுக்க வேண்டும். எல்லாத் துறையிலும் இந்தியாவுக்கு முன்னோடியான தமிழகம் திருநங்கை விவகாரத்தில் முன்னோடியாகத் திகழ வேண்டும் என்பதே எனது ஆசை.
தேர்தல் பிரசாரம் என்றால் அதிக செலவாகுமே எப்படி சமாளிக்கிறீர்கள்?
எனது அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்ய ஒரு வீட்டில் சமையல் வேலை செய்து வருகிறேன். தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்தவுடன் எனது குரு அருணா ராணியிடம் தெரிவித்தேன். அவரது அறிவுறுத்தலின்பேரில், சக திருநங்கைகள் ரூ.50, ரூ.100 ரூ.500 என தங்களால் முடிந்த அளவு உதவி செய்தார்கள். அந்தத் தொகையை வைத்துதான் தேர்தல் வைப்புத் தொகையைக் கட்டினேன். என்னை அறிந்த சில சமூக ஆர்வலர்கள் துண்டுப் பிரசுரம் அச்சிட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இந்த ஆதரவை எனது வெற்றியாகக் கருதுகிறேன்.
படம்: ஏ.எஸ். கணேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...