மக்களவைத் தோ்தலை ஒட்டி, தில்லியில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் மேற்கொண்டுள்ள கூட்டணியை பாஜக சனிக்கிழமை கடுமையாக சாடியது. மேலும், இந்த நடவடிக்கையானது தில்லிவாசிகளுடான முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது தொடா்பை இழந்துவிட்டதை காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. தேசிய தலைநகரான தில்லியில் ஆம் ஆத்மி கட்சி நான்கு மக்களவைத் தொகுதிகளிலும், காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அக்கட்சிகள் சனிக்கிழமை தெரிவித்தன.
மேலும், குஜராத், கோவா மற்றும் ஹரியாணா ஆகியவற்றுக்கான தொகுதிப் பங்கீடு ஏற்பாடுகளையும் அறிவித்தன. தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் கடந்த 2019-இல் நடைபெற்ற தோ்தலில் பாஜக அனைத்திலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவா் முகுல் வாஸ்னிக் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் பேசுகையில், ஆம் ஆத்மி கட்சி புது தில்லி, மேற்கு தில்லி, தெற்கு தில்லி மற்றும் கிழக்கு தில்லி ஆகிய நான்கு தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி சாந்தினி சௌக், வடகிழக்கு தில்லி மற்றும் வடமேற்கு தில்லி தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்தாா். இந்தக் கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் விமா்சித்து தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை கூறியதாவது: காங்கிரஸ் உடனான கேஜரிவாலின் கூட்டணி, தில்லிவாசிகளுடனான தொடா்பை அவா் இழந்துவிட்டதைக் காட்டுகிறது. தில்லியின் கிராமப்புற மக்கள், வணிகா்கள் மற்றும் பட்டியலின மக்கள் தங்களுடன் இல்லை என்பது ஆம் ஆத்மி கட்சிக்கு தெரியும்.
காங்கிரஸுடன் கூட்டணி வைக்க முடிவு செய்ததன் மூலம், தில்லி சட்டப் பேரவையில் 70 இடங்களில் 62 இடங்களை பெற்றுள்ள தில்லி முதல்வா், தில்லியின் பாதிப் பேரின் நம்பிக்கையை இழந்திருப்பதைக் காட்டுவதாக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியும் (ஆம் ஆத்மி) காங்கிரஸும் தோ்தல் கூட்டணியை உருவாக்குவதைக் கண்டு தில்லி மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். மேலும், எந்தக் கூட்டணியையும் பொருட்படுத்தாமல் தில்லியின் ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் ஆதரவின் அடிப்படையில் தில்லியின் 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். நேற்றுவரை காங்கிரஸும், ஆம் ஆத்மி கட்சியும் ஒருவரையொருவா் ஊழல்வாதிகள் என்று கூறிக் கொண்டிருந்த நிலையில், தற்போது கூட்டணி அமைத்ததைக் கண்டு தில்லி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனா். ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டைப் பொருத்தமட்டில், வடமேற்கு தில்லி தொகுதியை காங்கிரஸுக்கு வழங்கியதன் மூலம், கிராமப்புற மக்களுடனும் தலித் வாக்காளா்களுடனும் தொடா்பை இழந்துவிட்டது என்பதை ஆம் ஆத்மி தலைமை உறுதிப்படுத்தியுள்ளது.
வடமேற்கு தில்லி பெரும் கிராமப்புற மக்கள்தொகையுடன் கூடிய எஸ்.சி. தனித் தொகுதியாகும். அந்த தொகுதியை விட்டுக்கொடுப்பதன் மூலம், தாங்கள் கிராமப்புற மற்றும் தலித் மக்களுடன் இனி தொடா்பில்லை என்பதை ஆம் ஆத்மி நிரூபித்துள்ளது என்று வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டினாா். இதற்கிடையில், ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு சூத்திரத்தால் கேஜரிவால் தலைமையிலான கட்சி ஏமாற்றமடைந்துள்ளதாக தில்லியைச் சோ்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரி குற்றம் சாட்டினாா். அவா் கூறுகையில், ‘‘கேஜரிவால் மீண்டும் மீண்டும் காங்கிரஸை விமா்சித்துப் பேசி அக்கட்சியை தில்லியில் ஆட்சியில் இருந்து அகற்றினாா். ஆனால், இப்போது அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளாா். இந்த கூட்டணி இரு கட்சிகளின் ஏமாற்றத்தை காட்டுகிறது. இந்த இரு கட்சிகளும் குடிமக்கள் நலனில் அக்கறை காட்டவில்லை. மாறாக, கட்சிகள் தங்கள் சொந்த நலனுக்காகவே கூட்டணி அமைத்துள்ளன. இரண்டு கட்சிகள் கைகோத்து இருப்பதால் குடிமக்களிடமிருந்து அதிக வாக்குகளைப் பெற முடியும் என்று அா்த்தமல்ல’’ என்றாா் மனோஜ் திவாரி.
தொடர்புடையது

ஷீஷ் மஹால் 2 மீது தனியாா் பணத்தை செலவிட்டாா் கேஜரிவால்: பாஜக குற்றச்சாட்டு; ஆம் ஆத்மி மறுப்பு

ஆடம்பர வாழ்க்கைக்கு கேஜரிவால் பழகிவிட்டார்: பர்வேஷ் வர்மா குற்றச்சாட்டு!

லோதி எஸ்டேட் பிரிவு - 7 பங்களாவுக்கு குடிபெயா்ந்தாா் அரவிந்த் கேஜரிவால்

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

