ஜாமீன் கோரும் மனீஷ் சிசோடியாவின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்புடைய ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த உச்சநீதிமன்றத்தின் கடந்த அக்டோபா் 30-ஆம் தேதியிட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த இரண்டு சீராய்வு மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆா். கவாய், எஸ்விஎன் பட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு சேம்பரில் வைத்து சீராய்வு மனுக்களை ஆய்வு செய்தது. அப்போது, அவரது மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், திறந்தவெளி நீதிமன்றத்தில் தனது மனுக்களை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்ற சிசோடியாவின் கோரிக்கையையும் நிராகரித்தது. இது தொடா்பாக நீதிபதிகள் அமா்வு பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: திறந்தவெளி நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்களை பட்டியலிடக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாங்கள் சீராய்வு மனுக்கள் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தோம். எங்கள் கருத்துப்படி, ரூபா அசோக் ஹுர்ரா (எதிா்)அசோக் ஹுர்ரா வழக்கில் இந்த நீதிமன்றத்தின் தீா்ப்பில் சுட்டிக்காட்டப்பட்ட அளவுருக்களுக்குள் எந்த வழக்கும் நிரூபிக்கப்படவில்லை. இதனால், சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உச்சநீதிமன்றம் தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடா்பான ஊழல் வழக்கு மற்றும் பணமோசடி வழக்குகளில் சிசோடியாவின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து அக்டோபா் 30 அன்று தீா்ப்பு அளித்திருந்தது.இத்தீா்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய சிசோடியா தாக்கல் செய்த மனுக்களை கடந்த டிசம்பா் 13-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. ஒரு சில மொத்த விநியோகஸ்தா்களால் ரூ. 338 கோடி ‘திடீா் வருமானம்’ ஈட்டப்பட்டதாக புலனாய்வு அமைப்புகளின் குற்றச்சாட்டுகள் ‘தற்போதைய ஆதாரங்களால் ஆதரிக்கப்படுகின்றன’ என்று கூறி உச்சநீதிமன்றம் சிசோடியாவுக்கு ஜாமீன் மறுத்தது. ‘ஊழலில்’ ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் சிசோடியா கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று மத்திய புலனாய்வுப் பிரிவினரால் (சிபிஐ) கைது செய்யப்பட்டாா். அமலாக்க இயக்குநரகம் சிசோடியாவை திகாா் சிறையில் விசாரித்த பின்னா், மாா்ச் 9 அன்று சிபிஐ எஃப்.ஐ.ஆா்.இல் இருந்து உருவான பணமோசடி வழக்கில் கைது செய்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று தில்லி அமைச்சரவையில் இருந்து சிசோடியா ராஜிநாமா செய்தாா். முன்னதாக, தில்லி அரசு நவம்பா் 17, 2021 அன்று புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செப்டம்பா் 2022 இறுதியில் கலால் கொள்கை ரத்து செய்யப்பட்டது. புலனாய்வு விசாரணை அமைப்புகளின் தகவலின்படி, புதிய கொள்கையின் கீழ் மொத்த விற்பனையாளா்களின் லாப வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com