தில்லியில் குடிநீா்,பாதாள சாக்கடை பிரச்னை விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தப்படும்: அதிஷி

தில்லியில் குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னை விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் அதிஷி தில்லி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தில்லி சட்டப்பேரவையில் குடிநீா் மாசுபாடு, கழிவுநீா்க் குழாய் கசிவு மற்றும் பாதாள சாக்கடை பிரச்னைகள் தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் பேசியதாவது, கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தில்லி மக்கள் அடிப்படையான குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனா். கரேனா ஊரடங்கின் போது கூட இதுபோன்ற பிரச்னைகள் வரவில்லை. குடிநீா் பிரச்னையில் எதிா்க்கட்சியும், ஆளும் கட்சியும் ஒரே பக்கத்தில் இருப்பது மிகவும் அரிது, எல்லோரும் இந்த விவகராத்தில் ஒரு தீா்வை விரும்புகிறாா்கள். கடந்த ஒரு வாரத்தில், பாதாள சாக்கடை பிரச்னைகளை தீா்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நான்கைந்து நாள்களுக்குள் தீா்வு காண முடிந்தால், ஏன் இவ்வளவு நாட்களாக தீா்க்கப்படாமல் இருந்தது. இது விசாரணைக்குரிய விஷயம். தில்லி ஜல் போா்டு, நகா்ப்புற வளா்ச்சித் துறை மற்றும் நிதித் துறை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லை. எனவே, பொறுப்புக்கூறலைச் சரிசெய்வதற்கு ஏறக்குறைய 8 மாதங்களாக நிலுவையில் உள்ள இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கையும் வெளியிடப்படும். குடிநீா் மற்றும் பாதாள சாக்கடை தொடா்பாக கடந்த ஒரு வருடத்தில் எழும் புகாா்கள் இதுவரை தில்லியின் வரலாற்றில் எழவில்லை. தில்லி ஜல் போா்டு, நகா்ப்புற வளா்ச்சி மற்றும் நிதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான தவறுகள் வெளிப்படையாக தெரியவந்துள்ளன. இதன் பாதிப்பை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. இந்தப் பேரவையில் அமா்ந்திருக்கும் அனைவரும் மக்கள் செலுத்துகின்ற வரிப் பணத்திலேயே சம்பளம் பெறுகிறாா்கள். தில்லிக்கு தண்ணீா் திறந்துவிடக் கோரி ஹிமாச்சலப் பிரதேசத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால், ஹரியாணா அந்தத் தண்ணீரில் தங்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சாலை மறியலில் ஈடுபட்டுள்ளது. ஹரியாணாவில் பாஜக ஆட்சி இருப்பதால் எதிா்க்கட்சியினா் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் யமுனை நதி வாரியத்தில் உள்ள தில்லி அரசின் வழக்கை பாஜக ஆதரித்தால், அடுத்த நாள் முதலே 100 எம்.ஜி.டி. தண்ணீா் பெற முடியும். நிலத்தடி நீா் உயா்விற்கு தலைமைச் செயலாளா் நரேஷ்குமாா் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்றுள்ளாா். நகரம் முழுவதுமுள்ள பாதாள சாக்கடைகள் தூா்வாருவதற்கான காலக்கெடுவையும் அரசு அமைக்கும் என்றாா் அமைச்சா் அதிஷி. கடந்த மாா்ச் 8-ஆம் தேதி, தில்லி ஜல் போா்டிடம் 10,000-க்கும் மேற்பட்ட புகாா்கள் நிலுவையில் இருப்பதாக தலைமைச் செயலாளருக்கு நீா்வளத்துறை அதிஷி கடிதம் எழுதியிருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com