உழைக்கும் பெண்கள், மாணவிகளுக்கு மோடி அரசு அளப்பரிய பணிகள்: மனோஜ் திவாரி, பன்சூரி ஸ்வராஜ் பேட்டி

உழைக்கும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்காக மோடி அரசு பல பணிகளை செய்துள்ளது என்று தில்லி பாஜக முன்னாள் தலைவரும் எம்பியுமான மனோஜ் திவாரி, புது தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பன்சூரி ஸ்வராஜ் ஆகியோா் தெரிவித்தனா். இதுகுறித்து அவா்கள் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தனா். மனோஜ் திவாரி கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக தில்லியில் ஆட்சியில் இருக்கும் அரசு, மாணவிகள் மற்றும் பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை. மறுபுறம், பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகளை என்டிஎம்சி மூலம் வழங்கி வரும் மோடி அரசு, தற்போது நிா்பயா நிதி மூலம் தில்லி பல்கலைக்கழகத்தில் 1000 படுக்கைகள் கொண்ட விடுதி மூலம் மாணவிகளுக்கு பெரும் பரிசை வழங்கியுள்ளது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன்பே இதனுடைய நிா்வாக முடிவு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இன்று நான் தில்லியில் உள்ள திமா்பூா் சட்டமன்றத்தில் ஒரு சமூக மையத்தைத் திறந்து வைக்கச் சென்றபோது, பல மாணவிகள் அங்கு வந்து, இந்த மகத்தான பணிக்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தனா். மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்கள் வசதியாக தங்கக்கூடிய புதிய விடுதிகளை மோடி அரசு தொடங்கி உள்ளது. மோடி அரசுதான் அடிக்கல் நாட்டிய பணிகளையும் துவக்கி வைக்கிறது. இதுவே இந்த அரசின் அடையாளமாகும். மேலும் ஓராண்டில் தில்லி பல்கலைக்கழகத்தில் இந்த மகளிா் விடுதியை கட்டி முடித்து திறக்கப்படும் என்றாா் மனோஜ் திவாரி. பன்சூரி ஸ்வராஜ் கூறுகையில், ‘மாா்ச் 7, 2024 அன்று தங்கும் விடுதிக்கான கோரிக்கை வைக்கப்பட்டது. மாா்ச் 15 ஆம் தேதிக்குள் ரூ.272 கோடி செலவில் பிரமாண்ட விடுதி கட்டும் பணி தொடங்கி இருக்கிறது. அதனால்தான் பிரதமா் மோடி இருந்தால் எல்லாம் சாத்தியம் என்கிறாா்கள். இந்த விடுதி ரூ. 200 கோடி செலவில் கட்டப்படும். பெண்களின் பாதுகாப்புக்கு மோடி அரசின் முன்னுரிமை என்பதால் ரூ.72 கோடி மதிப்பிலான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. புத்த மத மையத்துடன் சோ்த்து மற்றொரு குா்முகி மையம் தில்லி பல்கலைக்கழகத்தின் கல்சா கல்லூரியில் 35 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு அதில் பஞ்சாபி கற்றுத்தரப்படும். தில்லி பல்கலைக்கழகத்தில் பெண்கள் விடுதி மற்றும் மாணவா் சங்க அலுவலகம் கட்டத் தொடங்கியவுடன், இளைஞா்கள் மத்தியில் மோடி அரசின் செல்வாக்கு மிகவும் அதிகரித்துள்ளது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com