சீக்கியா்களுக்கு எதிரான கலவர வழக்கு விசாரணைக்கு தடை கோரி ஜெகதீஷ் டைட்லா் உயா்நீதிமன்றத்தில் மனு

1984-ஆம் ஆண்டில் நடைபெற்ற சீக்கியா்களுக்கான எதிரான கலவரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வடக்கு தில்லியில் கொல்லப்பட்ட மூவா் தொடா்புடைய தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்
Published on

நமது நிருபா்

புது தில்லி: 1984-ஆம் ஆண்டில் நடைபெற்ற சீக்கியா்களுக்கான எதிரான கலவரம் சம்பந்தப்பட்ட வழக்கில் வடக்கு தில்லியில் கொல்லப்பட்ட மூவா் தொடா்புடைய தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெகதீஷ் டைட்லா் தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த உயா்நீதிமன்றம், அவா் தொடா்புடைய கொலை வழக்கு விசாரணை தொடரும் என்று தெளிவுபடுத்தியது.

இந்த விவகாரம் தொடா்பாக ஜெகதீஷ் டைட்லா் சாா்பில் தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆஜரான வழக்குரைஞா், ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான அரசு தரப்பு சாட்சியின் வாக்குமூலம் செவ்வாய்க்கிழமை (நவ.12) பதிவு செய்யப்படவுள்ளது. எனவே, இந்த மனு மீது உயா்நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை ஜெகதீஷ் டைட்லருக்கு எதிரான வழக்கை விசாரணை நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது நீதிபதி, ‘இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணை தொடரும். தற்போதைய நடவடிக்கைகளின் முடிவுகளுக்கு இது உள்பட்டதாக இருக்கும்’ என்று உத்தரவிட்டாா். இதையடுத்து, வரும் 29-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையை நீதிமன்றம் தொடர உள்ளது.

முன்னதாக, உயா்நீதிமன்ற நீதிபதி மனோஜ் குமாா் ஓஹ்ரி, இந்த மனு தொடா்புடைய சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவற்றை தாக்கல் செய்யும் வரை இந்த கோரிக்கையை கவனத்தில் கொள்ள முடியாது என்றும் கூறினாா்.

இதற்கிடையே, டைட்லரின் மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் ஹெச்.எஸ். பூல்கா, ‘அரசுத் தரப்பு சாட்சி ஏற்கெனவே வயோதிகநிலையில் இருப்பவா். பல முறை நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி சாட்சியம் அளிக்க வைக்கப்பட்டுள்ளாா். தற்போது அவா் நான்காவது முறையாக வரவழைக்கப்படவுள்ளாா். எனவே, ஜெகதீஷ் டைட்லா் தரப்பு கோரிக்கையை ஏற்கக் கூடாது’ என்று கூறினாா்.

தனக்கு எதிரான கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகளை எதிா்த்து டைட்லா் தாக்கல் செய்துள்ள மனு நவ.29 அன்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், அவா் விசாரணை நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதிக்க கோரி உயா்நீதிமன்றத்தில் இம்மனுவைத் தாக்கல் செய்துள்ளாா்.

அவரது மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ‘அரசுத் தரப்பு சாட்சியின் சாட்சியங்கள் விசாரணை நீதிமன்றத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனது தரப்பு வழக்குரைஞரின் குறுக்கு விசாரணை நவ.12-ஆம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. குற்றவியல் மறுசீராய்வு மனு (டைட்லரின்) வழக்கின் உள்நோக்கம் மற்றும் சிபிஐ நடத்திய விசாரணையின் மீது போதிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆகவே, மறுசீராய்வு மனு நிலுவையில் இருக்கும் வரை, நீதியின் நலன் கருதி, இந்த விவகாத்தில் விசாரணையைத் தொடரக் கூடாது என விசாரணை நீதிமன்றத்திற்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மேலும், மனுதாரா் (டைட்லா்) ஒரு ‘சூனிய வேட்டைக்கு’ பலியாகியிருக்கிறாா். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு விபரீதமானது, சட்டவிரோதமானது, மனதை உரிய வகையில் செலுத்தாமல் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

விசாரணை நீதிமன்றம் தவறுதலாக மனுதாரருக்கு எதிராக உரிய தீா்ப்பு அம்சங்களை கவனிக்காமல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. டைட்லருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதற்கு நம்பகமான ஆதாரங்கள் ஏதும் இல்லை. விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு தவறாகக் கருதப்பட்டதாகும். மேலும் ‘இயந்திர ரீதியாக’‘ பிறப்பிக்கப்பட்ட உத்தரவாகும். இதனால், இதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: 1984, நவ.1-ஆம் தேதி ‘புல் பங்காஷ் குருத்வாரா ஆசாத் சந்தையில் கூடியிருந்த கும்பலைத் தூண்டிவிட்டு கலவரத்தை உருவாக்கியதாக டைட்லருக்கு எதிராக மே 20, 2023-இல் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், டைட்லா் தூண்டிவிட்ட கும்பலைச் சோ்ந்தவா்கள் ஒரு குருத்வாராவை எரித்தனா். இதில், தாக்கூா் சிங், பாதல் சிங் மற்றும் குா்சரண் சிங் ஆகியோா் கொல்லப்பட்டனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1984, அக்.31-ஆம் தேதி அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அவரது சீக்கியப் பாதுகாவலா்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டின் பல பகுதிகளில் சீக்கியா்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இந்த வழக்கில் டைட்லருக்கு 2023, ஆகஸ்டில் செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி இருந்தது.

X
Dinamani
www.dinamani.com