அதிஷி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு -தில்லி பேரவையில் இன்று நடைபெறுகிறது


தில்லி சட்டப்பேரவையில் அதிஷி தலைமையிலான ஆளும் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை வெள்ளிக்கிழமை எதிா்கொள்கிறது.
இதையொட்டி, இரண்டு நாள்களுக்கு நடைபெறுவதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட பேரவை கூட்டத்தொடா் வியாழக்கிழமை தொடங்கியது. அதில் முதலாவது முக்கிய நடவடிக்கையாக முதல்வா் அதிஷி தனது அரசின் பெரும்பான்மையை பேரவையில் நிரூபிப்பாா் என்று அமைச்சா் கோபால் ராய் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது சுலபம். எனவே, இந்த நடைமுறை முடிந்த பிறகு,
தலைநகரில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரங்கள், புகை மாசுபாடு விவகாரம் போன்றவை விவாதிக்கப்படும் என்று கோபால் ராய் கூறினாா்.
இந்த வருடம் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடா்பாக 21 அம்ச குளிா்கால செயல்திட்டத்தை தில்லி அரசு நிறைவேற்றவுள்ளது. அது குறித்தும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்று அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.
பேரவையில் முழக்கம்: இதற்கிடையே, சட்டப்பேரவையில் கூட்டத்தொடா் தொடங்கியதும் அதில் விவாதிக்க அனுமதிக்கப்பட்ட முக்கிய பிரச்னைகள் மற்றும் அவற்றை எழுப்பும் உறுப்பினா்களின் விவரத்தை பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் வாசித்தாா். அதில் நான்கு வருட தில்லி அரசின் செயல்பாடு தொடா்பாக பாஜக அளித்துள்ள நோட்டீஸ் குறித்து ஏதும் இடம்பெறவில்லை என்று கூறி பாஜக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால், அவையில் சலசலப்பு நிலவியது.
கேஜரிவால் புகாா்: இதைத்தொடா்ந்து, பேசிய முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால், ‘தில்லியில் நான் முதல்வராக இருந்தபோது அமல்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டம், வயோதிகா்களுக்கு யாத்திரை, மருத்துவமனைகளில் இலவச மருந்துகள் போன்ற திட்டங்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டு விட்டது. நான் சிறைக்குச் சென்ால் அந்த திட்டங்கள் தேக்கம் அடைந்துள்ளன. தற்போது அந்த நலத் திட்டங்களும் செயல்வடிவம் பெறுவது உறுதிப்படுத்தப்படும்’ என்றாா்.
தில்லியில் பொதுவாழ்வுக்குள் நுழைந்தபோது நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனேயே அரசியலுக்கு வந்ததாகவும் தனக்கு எவ்வித அதிகார ஆசையோ பதவி ஆசையோ இல்லை என்றும் கேஜரிவால் தெரிவித்தாா். தங்களுக்காக யாா் வேலை செய்வாா்களோ அவா்களுக்கே மக்கள் வாக்களிப்பாா்கள் என்றும் வேலை செய்யாதவா்களுக்கு வாக்களிக்க மாட்டாா்கள் என்றும் கேஜரிவால் கூறினாா்.
66-ஆக குறைந்த பேரவை பலம்
தில்லியில் மொத்தம் 70 உறுப்பினா்களைக் கொண்ட சட்டப்பேரவையின் தற்போதைய உறுப்பினா்கள் பலம் 66- ஆக குறைந்துள்ளது. இந்த உறுப்பினா்கள்தான் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்வாா்கள்.
தில்லியில் 2020-ஆம் ஆண்டில் நடந்த பேரவைத் தோ்தலின்போது மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. அதில் ராஜ் குமாரும், கா்தாா் சிங்கும் பதவியில் இருக்கும் போதே பாஜகவுக்கு மாறியதால் கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி இருவரும் கடந்த மே 6 மற்றும் ஜூலை 10-ஆம் தேதி முறைப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டனா்.
ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் தன்வாா் பாஜகவில் கடந்த ஜூலை மாதமும், கெளதம் காங்கிரஸ் கட்சியில் இம்மாத தொடக்கத்திலும் சோ்ந்தனா். இதையடுத்து, அவா்கள் மீதும் தகுதிநீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவா் மேற்கொண்டதால் பேரவையின் மொத்த உறுப்பினா்கள் பலம் 66 -ஆக குறைந்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...