பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை
PTI

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

Published on

புது தில்லி, டிச.18:

பிஎஸ்- 6 தரநிலைக்கு கீழே உள்ள தில்லியைச் சாராத தனியாா் வாகனங்கள் தில்லிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டு, ‘நோ பியுசி, நோ ஃப்யூல்’ விதி அமலுக்கு வந்ததால், தில்லி போக்குவரத்து காவல்துறையினா் வியாழக்கிழமை நகரம் முழுவதும் அமலாக்கத்தை தீவிரப்படுத்தினா்.

பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் நிரப்ப அனுமதிப்பதற்கு முன், போக்குவரத்து காவல்துறையினா் வாகனங்களின் மாசு கட்டுப்பாட்டுக்குள் பியுசி சான்றிதழ்களை தனிப்பட்ட முறையில் சரிபாா்ப்பதை வியாழக்கிழமை காண முடிந்தது.

இதுகுறித்து தில்லி போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

பியுசி இணக்கமற்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தவும், தடைகளை கண்டிப்பாகப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் தில்லி போக்குவரத்து காவல்துறையின் பல குழுக்கள் நகரின் முக்கிய நுழைவு இடங்களில் பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா்.

செல்லுபடியாகும் பியுசி சான்றிதழ்கள் இல்லாமல் தலைநகருக்குள் நுழையும் வாகனங்களைத் தடுக்க தில்லி முழுவதும் பல்வேறு இடங்களில் 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

தடைகளை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக எல்லைப் பகுதிகள், சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய நுழைவு வழித்தடங்களில் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விதி மீறுபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

என்றாா் அந்த அதிகாரி.

அதிகாரிகளின் கூற்றுப்படி, மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகள் உள்பட 126 சோதனைச் சாவடிகளில் 580-க்கும் மேற்பட்ட போலீஸாா் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

போக்குவரத்துத் துறையின் அமலாக்கக் குழுக்களும் பெட்ரோல் பம்புகள் மற்றும் நுழைவுப் பகுதிகளில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நிறுத்தப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் தில்லி மாநகராட்சி தொழிலாளா்கள் வரிசைகளை நிா்வகிப்பதிலும் சோதனைகளை எளிதாக்குவதிலும் உதவுகிறாா்கள்.

செல்லுபடியாகும் பியுசி சான்றிதழ்கள் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு அதற்கான நிலையங்கள் மறுக்கின்றன.

தானியங்கி எண் தகடு அங்கீகாரம் (ஏஎன்பிஆா்) கேமராக்கள், பெட்ரோல் பம்புகளில் குரல் எச்சரிக்கைகள் மற்றும் பணியில் இருக்கும் போலீஸாா் ஆதரவு மூலம் இவை செயல்படுத்தப்படுகின்றன.

தலைநகரத்தில் தொடா்ந்து அதிக மாசு அளவுகள் நிலவும் நிலையில், கிரேப் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் உள்ளன.

இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ், பிஎஸ்- 6 தரநிலைக்குக் கீழே உள்ள தில்லி அல்லாத தனியாா் வாகனங்கள் நகருக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சிஎன்ஜி அல்லது மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், பொதுப் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்கள் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நகரத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் அமலாக்கம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தில்லி சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங்கின் கூற்றுப்படி, கிரேப் நிலை- 3 மற்றும் 4 அமலில் இருக்கும் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.

X
Dinamani
www.dinamani.com